முப்பது வயதுக்குப் பிறகு கருவுற்றால் மார்பகப் புற்றுநோய் பாதிக்குமா?

உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கும் முக்கியமான நோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இதன் தீவிரம் கருதி வருடம்தோறும் அக்டோபர் மாதத்தை உலக மார்பகப் புற்றுநோய் மாதமாக அனுசரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து முன்னரே தெரிந்து கொள்வதன் மூலம்தான் இதுபோன்ற நோய்களை நாம் சரியாக எதிர்கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் குறித்து விளக்குகிறார், சென்னை வானகரம், அப்போலோ கேன்சர் மையத்தின் மூத்த ஆலோசகர், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மதுபிரியா.

மார்பகப் புற்றுநோய்: 

பொதுவாக உடலில் உள்ள செல்களின் மாறுபட்ட வளர்ச்சியால் உண்டாகும் நோய்களையே புற்றுநோய் என்கிறோம். இந்த மாறுபட்ட வளர்ச்சியானது மார்பகத்தில் தோன்றி, அது பின்னர் மார்பகத்தில் புற்றுநோய்க் கட்டிகளாக உருவாகி, உடலின் பிற இடங்களுக்கும் பரவக்கூடிய தன்மையுடன் வளர்வதை மார்பகப் புற்றுநோய் என்கிறோம்.  

காரணங்கள்: 

வயது மூப்பு, உடல் பருமன், முறையான உணவுப் பழக்கவழக்கங்கள் இல்லாதது, உடல் உழைப்பின்மை, ஆல்கஹால் எடுத்துக் கொள்வது போன்றவை பொதுவான காரணங்களாகும். மரபியல்ரீதியாக குடும்பத்தில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், இது ஹார்மோன் சார்ந்த புற்றுநோயாகும்.

எனவே உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் சுரப்பு அதிகமாவது, சிறிய வயதிலேயே மாதவிடாய் ஆரம்பிப்பது, மெனோபாஸ் குறிப்பிட்ட வயதைத் தாண்டி தள்ளிப் போவது, வயதான பின்பு கர்ப்பம் தரிப்பது, குழந்தை பிறந்த பிறகு முறையாகத் தாய்ப்பால் கொடுக்காதது போன்ற காரணங்களும் மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. 

Apollo Cancer Centres

வகைகள்:

  1. டக்டல் கார்சினோமா இன் சிட்டு (DCIS) -  80% மேற்பட்டவர்கள் இவ்வகை மார்பகப் புற்றுநோயால் தான் பாதிக்கப்படுகிறார்கள். இதை ஸ்டேஜ் 0 என்கிறார்கள்.

  2. இன்வேசிவ் லோபுலார் கார்சினோமா - இவ்வகை மார்பகப் புற்றுநோயானது 5-10% பேரை மட்டும் பாதிக்கிறது. 

  3. இன்ஃப்ளமேட்டரி மார்பகப் புற்றுநோய் - இது இளம் பருவத்தினரை பாதிக்கும் தீவிரமான மார்பகப் புற்றுநோயாகும்.  

அறிகுறிகள்:

  • மார்பில் தோன்றும் திடீர்க் கட்டிகள் - இது வலியுடனோ அல்லது வலி இல்லாமலோ இருக்கலாம். பெரும்பாலும் வலி இல்லாத கட்டிகளாக ஏற்படும் நோயை நாம் முன்கூட்டியே கண்டறிய சிரமமாக இருக்கும். 

  • மார்பில் வலி - மாதவிடாய் நின்ற பிறகும் வலி தொடர்தல்.

  • மார்பகத் தோற்றத்தில் மாற்றம். 

  • மார்பகத்தின் தோலில் அரிப்பு, நிறமாற்றம் மற்றும் தோல் தடித்திருப்பது போன்றவை. 

  • அக்குளில் வீக்கம் 

  • மார்பகக் காம்பின் தோற்றத்தில் மாறுபாடு மேலும் அங்கு ஆறாத புண் மற்றும் வெடிப்புகள் காணப்படுதல். 

  • மார்பகக் காம்பில் ரத்தம் மற்றும் கழிவுகள் கசிவு.  

பரிசோதனை முறைகள்:

சுயபரிசோதனை: பெண்கள் மாதமொரு முறை மாதவிடாய் வந்து முடிந்த 5-7 நாட்களில் கண்ணாடி முன் நின்று தங்கள் மார்பகத்தில் மேற்சொன்ன அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.  மேலும், மார்பகத்தை விரல் வைத்து தொட்டுப் பார்த்து கட்டிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். 


மருத்துவப் பரிசோதனை: 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மேமோகிராம் பரிசோதனை செய்யப்படும். மேலும், 44 - 55 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களும் வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்கேனும் எந்த வகை புற்றுநோயாவது இருந்தாலோ, அல்லது ஏற்கனவே வந்திருந்தாலோ, இந்தப் பரிசோதனையை 30 வயதிலேயே தொடங்கிவிட வேண்டும். 

DR. Madhupriya Senior Consultant - Surgical Oncology, Apollo Cancer Centres, Vanagaram

சிகிச்சை முறை: 

கட்டிகள் பரவியிருப்பதைப் பொறுத்து மார்பகப் புற்றுநோய் நான்கு ஸ்டேஜ்களை உடையது. ஸ்டேஜ்(1-2) இது ஆரம்ப ஸ்டேஜ் ஆகும். கட்டிகள் மார்புக்குள்தான் இருக்கும். ஆனால் கட்டியின் அளவைப் பொறுத்து ஸ்டேஜ் மாறுபடும். ஸ்டேஜ் 3-ல் கட்டிகள் அக்குள் வரை பரவி நெறி கட்டிக்கொள்ளும். ஸ்டேஜ் 4-ல் இந்தப் புற்றுநோயானது உடலில் உள்ள இதர பகுதிகளுக்கும் பரவியிருக்கும். அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி, ஹார்மோன் தெரபி, டார்கெட்டட் சிகிச்சை ஆகியவை மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளாகும். நோயின் ஸ்டேஜைப் பொறுத்து அளிக்கப்படும் சிகிச்சை முறைகளும் மாறுபடும். 

இதில் நோயாளியின் தீவிரத்தைப் பொறுத்து முதல் மூன்று ஸ்டேஜ்களுக்கு, அப்போலோ மருத்துவமனையில் Breast conservation surgery செய்யபடுகிறது. இது பெண்களின் மார்பகத்தை முழுமையாக அகற்றாது, நோய் எந்த ஸ்டேஜில் இருக்கிறது என்பதைப் பொறுத்து புற்றுநோய் பாதித்த அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் அகற்றிவிட்டு மீதமுள்ள மார்பகப் பகுதியைப் பாதுகாக்க வழிவகுக்கிறது. இந்த சிகிச்சைமுறை, பெண்களுக்கு உளவியல்ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது. மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.

மேலும் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்குத் தகுந்த சிசிச்சைகளை மேற்கொள்வது, பெண்கள் எந்தவித கவலையும் இன்றி இயல்பான வாழ்க்கையை வாழ வழிவகுக்கும்” என்கிறார் டாக்டர் மதுபிரியா. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.