Amaran: பட ரிலீஸ் சமயத்தில் `Boycott Sai Pallavi ஹேஷ்டேக்; ட்ரெண்ட்டாக காரணமென்ன?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் `அமரன். ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாவதையொட்டி, மேஜர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்திற்குச் சென்று சாய் பல்லவி மரியாதை செலுத்தியிருந்தார். படத்திலும் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சாய் பல்லவி இந்தியா ராணுவத்திற்கு எதிராகப் பேசினார் என்றும் இந்துத்துவாவிற்கு எதிராகப் பேசினார் என்றும் குற்றஞ்சாட்டி, சாய் பல்லவியின் திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும் (#Boycott Sai Pallavi Movies) என எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சிலர்.

சாய் பல்லவியின் 2022 நேர்காணல் புகைப்படம்

சாய் பல்லவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2022ம் ஆண்டு தெலுங்குப் படமான விராட பர்வம் (Virata Parvam) படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதில் வன்முறைக்கு எதிராகப் பேசியிருந்த சாய் பல்லவி, "இந்திய ராணுவத்தின் செயல்பாடு என்பது நமக்குத் தேசபக்தி, தேச பாதுகாப்பு. ஆனால், எதிர்நாடுகளைப் பொறுத்தவரை அது தீவிரவாதம். பாகிஸ்தான் நாட்டினர் பார்வையில் இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகள், இந்தியர்களின் பார்வையில் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தினர் தீவிரவாதிகள். எப்படிப் பார்த்தாலும் இரண்டுமே வன்முறைதான். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை" என்று பேசியிருந்தார்.

மதத் தீவிரவாதங்கள் குறித்துப் பேசியிருந்தவர், "நான் நடுநிலையான எண்ணவோட்டங்கள் கொண்ட குடும்பச் சூழலில் வளர்ந்தேன். நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இடதுசாரி, வலதுசாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதில் யார் சரி, யார் தவறு என்று என்னால் சொல்ல முடியவில்லை. அண்மையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்தேன். அதில் காஷ்மீரி பண்டிட்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பதைப் பற்றிக் கூறினார்கள்.

அதேசமயம் சமீபத்தில், பசுவைக் கொண்டு சென்ற நபர் ஒருவர், முஸ்லிம் எனச் சந்தேகப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் இங்கு நடந்துள்ளது. அந்த நபரைக் கொன்ற பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் ஜெய் ஸ்ரீராம் எனக் கோஷங்களை எழுப்பினார்கள். காஷ்மீரில் நடந்ததற்கும் சமீபத்தில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம்?

என்னைப் பொறுத்தவரை எந்தச் சூழலிலும் வன்முறை என்பது தவறான அணுகுமுறை. இடதுசாரி, வலதுசாரி என எந்தப் பக்கம் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்கவேண்டியது அவசியம். நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டியது அவசியம். நான் நடுநிலையாக இருக்கிறேன். அப்படித்தான் வளர்க்கப்பட்டேன். ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட்டுவிட்டு அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று வன்முறை குறித்த தனது கருத்தை வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

அமரன் திரைப்பட புகைப்படம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசிய சாய்பல்லவியின் இந்த பேச்சை மேற்கோள்காட்டி, சாய் பல்லவி இந்திய ராணுவம் குறித்துத் தவறாகப் பேசினார் என்றும் இந்துத்துவா குறித்து தவறாகப் பேசினார் என்றும் சாய் பல்லவியின் திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும் (#BoycottSaiPallaviMovies) என எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சிலர்.

உண்மையில் சாய்பல்லவி வன்முறைக்கு எதிராகத்தான் பேசினாரே தவிர, இந்திய ராணுவத்தைத் தவறாகப் பேசவில்லை என்று சாய்பல்லவியின் ரசிகர்கள் விளக்கமளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த Boycott கலாசாரம் வட இந்தியாவில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்துத்துவாவிற்கு எதிராகப் பேசியதாகக் கூறி, பாலிவுட் நடிகர்களின் பல ஆண்டுகளுக்கு முந்தையக் காணொலிகளைத் தூசி தட்டி எடுத்து, அவர்களின் திரைப்படம் வெளியாகும் சமயத்தில் மீண்டும் சமூகவலைத்தளத்தில் அவர்களைப் பற்றிய காணொலிகளைப் பகிர்ந்து இந்த Boycott ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சாய் பல்லவி

பாலிவுட் நடிகர்கள் பலரும் இந்த Boycott கலாசாரத்தால் பாதிக்கப்பட்டு வந்தனர். பாலிவுட் திரையுலகமே இதுபோன்ற சர்ச்சைகளால்தான் சரிவைச் சந்தித்து வருவதாகப் பலரும் குற்றச்சாட்டாகக் கூறியிருந்தார். குறிப்பாக, இயக்குநர் அனுராக் காஷ்யாப் Boycott கலாசாரத்திற்கு எதிராகக் கடுமையாகப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.