TVK: `எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் வழியா...’ - `கூத்தாடி’ விமர்சனத்துக்கு விஜய்யின் அதிரடி பதில்!
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு பெருந்திரளான கூட்டத்தின் மத்தியில் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய் எம்.ஜி.ஆர், என்.டி.ஆரை குறிப்பிட்டு பேசியதாவது...
``கூத்து இந்த மண்ணோடும், மக்களோடும் கலந்த ஒன்று. இந்தக் கூத்தாடி என்கிற பெயர் நமக்கு மட்டும் வந்ததில்லை. அன்று தமிழ்நாட்டில் நம்ம ஊர் வாத்தியார் எம்.ஜி.ஆர், ஆந்திராவில் அவங்க ஊர் வாத்தியார் என்.டி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது கூத்தாடி கூத்தாடி என்றுதான் கூப்பாடு போட்டார்கள். அவர்களையே அப்படிக் கூப்பிடும்போது நம்மை எப்படி கூப்பிடாமல் இருப்பார்கள். ஆனால், அந்த இரண்டு கூத்தாடிகள்தான் அந்த இரண்டு மாநிலத்தின் ஆகப்பெறும் தலைவர்களாக இன்றும் மக்கள் மனதில் நீங்கா புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சினிமா வெறும் பாட்டு, டான்ஸ், காமெடி, என்டர்டைன்மென்ட் மட்டும்தானா... தமிழரின் வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடுதான் சினிமா.
என்டர்டெயின்மென்ட் காரணத்தையும் தாண்டி சமூக அரசியல் புரட்சிக்கு உதவிய ஒரு பவர்ஃபுல் கருவிதான் சினிமா. திராவிட இயக்கம் பட்டி தொட்டி எல்லாம் வளர்ந்ததே சினிமாவை வைத்துதான். நான் கேட்கிறேன், கூத்தாடி என்றால் என்ன கேவலமான பெயரா... கூத்து சத்தியத்தைப் பேசும், சாத்தியத்தைப் பேசும், கொள்கையைப் பேசும், கோட்பாட்டைப் பேசும், கோபத்தைப் பேசும், சோகத்தைப் பேசும், அரசியலைப் பேசும், அறிவியலைப் பேசும், நல்லதைப் பேசும், உள்ளதைப் பேசும், உண்மையைப் பேசும், உணர்வோடு பேசும். இவை அனைத்தையும் கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் கொண்டாட்டமாக பேசும்.

கூத்தாடிக்குள்ளே இருக்கிற கோபத்தையும், சோகத்தையும் யாராலும் புரிஞ்சிக்க முடியாது. அவனுக்குள் இருக்கின்ற கோபம் கொப்பளித்தது என்றால் யாராலும் அவனை கட்டுப்படுத்த முடியாது. நினைத்ததைச் செய்து முடிக்கும் வரையில் அவன் நெருப்பு மாதிரி தான் இருப்பான். அதனால்தான் குறியீடாக மாறிய கூத்தாடியைப் பார்த்தால் மக்கள் கூட்டம் கைத்தட்டும், கண் கலங்கும். ஆரம்பத்துல சினிமாக்கு வந்தாப்போ அது சரியில்ல, இது சரியில்ல என்று அசிங்கப்படுத்தினார்கள், அவமானப்படுத்தினார்கள்.
ஆனா கொஞ்சம் கூட கலங்காம வாய்ப்புக்காகவும், சூழலுக்காகவும் காத்திருந்து உழைத்து மேல வந்தவன் இந்த கூத்தாடி. அதுலயும், அந்த உழைப்பு மட்டும்தான் என்னோடது, கிடைத்த மத்ததெல்லாம் உங்களோடது. சாதாரணமாக இருந்த இளைஞன் நடிகனாக மாறினான், அந்த நடிகன் வெற்றி பெற்ற நடிகனாக மாறினான், அந்த வெற்றி பெற்ற நடிகன் பொறுப்புள்ள மனிதனாக மாறினான், அந்தப் பொறுப்புள்ள மனிதன் தலைவனாக... இல்லைத் தொண்டனாக மாறினான், அந்தப் பொறுப்புள்ள தொண்டன் நாளை... அதை நான் சொல்லத் தேவையில்லை." என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

