உத்தவ், காங்கிரஸ் பிடிவாதம் ; வேட்பாளர்களை பாஜக-விடம் கடன் வாங்கும் அஜித் பவார் - மகா., கலாட்டா!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்த பிறகு நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் ஆகும். இத்தேர்தலில் இரண்டு சிவசேனாக்கள், இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கட்சிகள் தங்களது செல்வாக்கை நிரூபித்துக்காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இதனால் வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளிடையே தொடர்ந்து பிடிவாத போக்கு நீடித்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவேண்டிய தொகுதிகள் கிடைத்துவிட்டதால் அவர் ஒதுங்கிக்கொண்டார். ஆனாலும் சில தொகுதிக்காக சரத்பவார் கட்சியும் பிடிவாதம் காட்டிக்கொண்டிருக்கிறது.

அஜித்பவார்

மூன்று கட்சிகளும் தொகுதி பங்கீட்டிற்கு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டன. தற்போது காங்கிரஸ் 104 தொகுதியிலும், சிவசேனா(உத்தவ்) 94 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 84 தொகுதியிலும் போட்டியிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ரமேஷ் சென்னிதலா வந்து மூன்று கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் நிருபர்களிடம் பேசிய போது, ``இறுதி தொகுதி பங்கீடு சனிக்கிழமை அறிவிக்கப்படும்” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். வர்சோவா, பைகுலா, வடாலா, மீரஜ், பார்துர், வானி உட்பட சில தொகுதிகளை உத்தவ் தாக்கரே கேட்டு பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

பைகுலா தொகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகமாக இருக்கின்றனர். எனவே அந்த தொகுதிக்கு காங்கிரஸ் மற்றும் சிவசேனா கடுமையாக மோதிக்கொள்கின்றன. செவ்வாய் கிழமை சந்தித்து பேசி முடித்த போது காங்கிரஸ் 105, சிவசேனா 95, தேசியவாத காங்கிரஸ் 84 என்று முடிவு செய்தார்கள். ஆனால் அதற்கு உத்தவ் தாக்கரே கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் புதன் கிழமை அதனை மாற்றிவிட்டு மீண்டும் பேசி காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 85 தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. அடுத்த நாள் மீண்டும் பேசி காங்கிரஸ் 104, சிவசேனா 94, தேசியவாத காங்கிரஸ் 84 தொகுதிகள் என்று முடிவு செய்யப்பட்டது. 18 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மூன்று கட்சி தலைவர்களிடமும் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாஹேப் தோரட் புதிதாக, `மூன்று கட்சிகளும் தலா 90 தொகுதியில் போட்டியிடும்’ என்று கூறி புதிய குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கிறார். ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பாலாசாஹேப் தோரட் பங்கேட்காத காரணத்தால் அவருக்கு எதுவும் தெரியாது என்று மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் மூன்று கட்சிக்குள்ளும் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று கூறி தலையை சொறிய ஆரம்பித்துள்ளனர்.

பா.ஜ.க கூட்டணியிலும் இன்னும் 10 தொகுதியில் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது.

வேட்பாளர்களை பா.ஜ.க விடம் கடன் வாங்கும் அஜித்பவார்:

தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) தலைவர் அஜித்பவார் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் பா.ஜ.கவின் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார். ஏற்கனவே மும்பையில் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக்கை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று அஜித் பவாரிடம் பா.ஜ.க கூறிவிட்டது. இதனால் நவாப் மாலிக்கிற்கு பதில் அவரது மகளுக்கு அஜித்பவார் சீட் கொடுத்துள்ளார். இதே போன்று சில தொகுதியில் போட்டியிட அஜித்பவாரிடம் வலுவான வேட்பாளர்கள் இல்லாமல் இருக்கிறது. இதனால் அது போன்ற தொகுதிகளுக்கு பா.ஜ.கவிடமிருந்து தலைவர்களை கடன் வாங்கி தனது கட்சி சார்பாக போட்டியிட வைத்து வைத்து வருகிறார் அஜித் பவார்.

தாஸ்காவ் தொகுதியில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் மகன் ரோஹித் பாட்டிலை சரத்பவார் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். அஜித்பவாருக்கு அத்தொகுதியில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை. எனவே பா.ஜ.க முன்னாள் எம்.பி சஞ்சய் காகாவை தனது கட்சிக்குள் இழுத்து அவரை தனது கட்சி சார்பாக போட்டியிட வைத்துள்ளார் அஜித்பவார்.

அஜித் பவார், சரத் பவார்

இதே போன்று பா.ஜ.க முன்னாள் எம்.பி பிரதாப் ராவ் என்பவரும் அஜித்பவார் கட்சியில் சேர்ந்து லோஹா தொகுதியில் போட்டியிட இருக்கின்றார். மற்றொரு பா.ஜ.க மாவட்ட தலைவர் நிஷிகாந்த் பாட்டீலும் அஜித்பவார் கட்சியில் சேர்ந்து இஸ்லாம்பூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். பல தொகுதியில் அஜித்பவார் ஆதரவாளர்களே தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். இதே நிலைதான் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கும் சில தொகுதியில் இருக்கிறது. ஆனால் பா.ஜ.கவிடமிருந்து தலைவர்களை கடன் வாங்கி தேர்தலில் போட்டியிட வைப்பதில்லை என்ற முடிவில் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.