மூணாறுக்குப் பள்ளிச் சுற்றுலா; காவல் நிலையத்தில் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்ட மாணவர்கள்!

கேரளாவில் ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள், கஞ்சா பீடி பற்றவைக்கத் தீப்பெட்டிக்காக ஒர்க ஷாப் கட்டடம் என்று நினைத்து உள்ளூர் காவல் நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம், வெளியில் தெரியவந்திருக்கிறது.

முன்னதாக, திருச்சூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 100 பேர் கொண்ட குழு மூணாறுக்கு சுற்றுலா சென்றிருந்தது. இந்தக் குழு, கடந்த திங்களன்று அடிமாலியில் ஒரு ஹோட்டலில் உணவுக்காகக் காத்திருந்த வெளியில், அந்தக் குழுவிலிருந்து சில மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி கஞ்சா புகைக்க முடிவுசெய்தனர்.

School

அதன்படி, ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த கஞ்சாவை பீடியாகச் சுருட்டி புகைக்கத் தயாரானபோது தங்களிடம் தீப்பெட்டி இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதையடுத்து, அருகில் வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த பழைய கட்டடத்தை அந்த மாணவர்கள் கண்டனர். அதை ஏதோ ஒர்க் ஷாப் என்று நினைத்த அவர்கள், கேஷுவலாக அங்கு நுழைந்து தீப்பெட்டி கேட்டபோதுதான், அங்கு சீருடையிலிருந்த மற்ற போலீஸ் அதிகாரிகளைக் கண்டு அது காவல் நிலையம் என்று உணர்ந்தனர்.

பின்னர், அங்கிருந்து மாணவர்கள் ஓட முயன்றபோது, அதிகாரிகள் அவர்களைப் பிடித்தனர். இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி பி. ராகேஷ், ``மாணவர்கள் இதை ஒரு ஒர்க ஷாப் என்று நினைத்து, பின் கதவு வழியாக அலுவலகத்துக்குள் நுழைந்து, ஓய்வெடுக்கும் அதிகாரிகளிடம் தீப்பெட்டியைக் கேட்டனர். பிறகு, சீருடையிலிருந்த அதிகாரிகளை அவர்கள் கவனித்தபோதுதான் தங்களுடைய தவறை உணர்ந்தார்கள்" என்று தெரிவித்தார்.

கைது

இதில், இரண்டு மாணவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கிராம் ஹாஷிஷ் ஆயிலைக் கைப்பற்றிய அதிகாரிகள், அவ்விருவர் மீதும் போதைப்பொருள் மற்றும் மனநோய் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். மற்ற மாணவர்கள் ஆசிரியர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.