மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்; கிராம மக்களிடம் சிக்கிய மின் வாரிய ஊழியர் கைது!
ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாய் பேச முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவர். அப்பகுதியை சேர்ந்த தம்பதியினர் அந்த பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வளர்ப்பு பெற்றோர் இருவரும் வெளியில் சென்ற நிலையில், அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ராமநாதபுரம் நகர் வடக்கு மின் வாரியத்தில் கேங் மேனாக பணிபுரியும் சூரன்கோட்டை களத்தாவூர் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (36) என்பவர் அப்பெண் தனிமையில் இருப்பதை நோட்டமிட்டதுடன், மனம் நலம் பாதித்த அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் இளையராஜாவை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் அவர்கள் கூச்சலிடவே கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இளையராஜாவை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவரை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வளர்ப்பு பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

