Doctor Vikatan: மழைக்காலத்தில் போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படும் Flu vaccine.. யாருக்கு அவசியம்?

Doctor Vikatan: மழை மற்றும் குளிர் காலங்களில் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருக்க, ஃப்ளு தடுப்பூசி போட வேண்டும் என்று செய்திகள் வருகின்றனவே... அந்தத் தடுப்பூசி எதற்கானது... யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும்... அதற்கு பக்க விளைவுகள் இருக்குமா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பொது மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி சுலைமான்

இன்ஃப்ளுயென்ஸா தடுப்பூசியையே ஃப்ளு தடுப்பூசி (Flu vaccine) என்று குறிப்பிடுகிறோம். இன்ஃப்ளுயென்ஸா வைரஸ் (Influenza Virus) தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளவே இந்தத் தடுப்பூசி  போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இந்தத் தடுப்பூசியைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், இன்ஃப்ளுயென்ஸா தொற்று பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் வரக்கூடிய ஜலதோஷம், காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி என பலருக்கும் வரக்கூடிய பாதிப்புதான் ஃப்ளு. இது வயது வித்தியாமின்றி எல்லோரையும் பாதிக்கும். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கக்கூடியது. அதே மாதிரி வயதானவர்களையும் இது பெரிய அளவில் பாதிக்கும். இவர்களுக்கெல்லாம் ஃப்ளு பாதிப்பானது ஒன்றிரண்டு நாள்கள் இருந்தாலே, அதன் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும்.

Influenza

இந்தத் தடுப்பூசியை 6 மாதக் குழந்தையிலிருந்து அனைத்து வயதினருமே போட்டுக் கொள்ளலாம். வருடத்துக்கொரு முறை போடக்கூடிய தடுப்பூசி இது. கோடைக்காலம் முடிந்த பிறகு செப்டம்பர், அக்டோபர் வாக்கில் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன் Flu vaccine போட்டுக்கொள்வது பாதுகாப்பானது. நீங்கள் பயப்படுவது போல இந்தத் தடுப்பூசிக்கு பக்க விளைவுகள் கிடையாது. அரிதாக சிலருக்கு லேசான உடல்வலியும் சோர்வும் இருக்கலாம். மற்றபடி இதில் பயப்பட ஒன்றுமில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.