Baba Siddique murder: பிஷ்னோய் கூட்டாளிகள் 5 பேர் கைது; குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்!

மும்பையில் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 2 பேர் உள்பட நான்கு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலையில் குஜராத் சிறையில் இருக்கும் மாபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் ஈடுபட்டது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், மும்பையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கர்ஜத் என்ற இடத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாபா சித்திக்கை கொலை செய்தவர்களுக்கு துப்பாக்கியை கொடுத்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. பாபா சித்திக் கொலைக்கு பிறகு இவர்கள் 5 பேரும் கர்ஜத்தில் பதுங்கி இருந்தனர்.

கைதானவர்கள்

கைது செய்யப்பட்ட நிதின் சாப்ரே, சாம்பாஜி, ராம் கனோஜியா, பிரதீப், சேதன் ஆகிய 5 பேரும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாபா சித்திக்கை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியா, துருக்கி மற்றும் நாட்டுத்துப்பாக்கிகளை இவர்கள் தான் கொலையாளிகளுக்கு கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் பாபா சித்திக்கை கொலை செய்தவர்களுக்கு தங்கும் வசதி, பண உதவிகள் செய்து கொடுத்துள்ளனர்.

இது குறித்து விசாரணை அதிகாரி அருண் தோரட் கூறுகையில்,கொலையாளிகள் தர்மராஜ் மற்றும் சிவ்குமார் கெளதம் ஆகியோர் கொலை செய்வதற்கு முன்பு கர்ஜத் வந்து 5 பேரையும் சந்தித்துச் சென்றுள்ளனர். அப்போதுதான் துப்பாக்கி மற்றும் பணம் கொடுத்து உதவி இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் இந்த ஐந்து பேரைத்தான் கொலைக்கு பயன்படுத்த திட்டமிட்டனர். ஆனால் இவர்கள் பின் விளைவுகளை புரிந்து கொண்டு பின் வாங்கிவிட்டனர். அதன் பிறகுதான் வடமாநிலத்தில் இருந்து கொலையாளிகளை அழைத்து வந்தனர்என்று தெரிவித்தார்.

பாபா சித்திக், லாரன்ஸ் பிஷ்னோய்

தற்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து இக்கொலையில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாபா சித்திக் படுகொலையை தொடர்ந்து அவரத் மகன் சீசன் சித்திக்கிற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து சல்மான் கான் புதிதாக துபாயில் இருந்து ரூ.2 கோடி மதிப்பில் மற்றொரு குண்டு துளைக்காத காரை விலைக்கு வாங்கி இருக்கிறார். வெளியில் செல்லும்போது சல்மான் கான் எப்போதும் குண்டு துளைக்காத காரையே பயன்படுத்துகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.