`மம்மூட்டியை அமைச்சராக்குங்க சுரேஷ் கோபி - கூட்டத்தில் ஒலித்த குரல்; மம்மூட்டியின் ரியாக்‌ஷன் என்ன?

நடிகர் சுரேஷ் கோபி பா.ஜ.க-வில் இணைந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்திய அமைச்சர் ஆகி உள்ளார். பல சினிமாக்களில் நடித்துக் கொடுக்கவேண்டியது உள்ளதால், தற்போது மத்திய அமைச்சர் ஆகவில்லை. பின்னர் பார்க்கலாம் என தொடக்கத்தில் கூறினார் சுரேஷ் கோபி. ஆனால், டெல்லி தலைமை அவரை மத்திய அமைச்சர் ஆக்கியது. ஆனாலும், சினிமாவில் நடிக்கும் ஆசை சுரேஷ் கோபிக்கு இருந்துகொண்டேதான் இருக்கிறது. டெல்லி தலைமை அனுமதிக்காததால் நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்குப்போட்டுள்ளார். இதற்கிடையே மலையாளத்தில் `மழைவில் என்டர்டைமென்ட் நிறுவனம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது. அதில் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உட்பட பலர் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராகவே கலந்துகொண்டார்.

நிகழ்சிக்குச் சென்றிருந்த சுரேஷ் கோபி

அதில் நடனம் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி முடிந்து சுரேஷ் கோபி காரில் புறப்பட முயலும்போது அங்கு வழியனுப்பி வைக்க வந்த மம்மூட்டியிடம், "மத்தியில் என்னிடம் கூறினால், நான் மீண்டும் இங்கு (சினிமாவுக்கு) வருவேன்" என்றார். அதற்கு மம்மூட்டி, "உங்களுக்கான இருக்கை எப்போதும் இங்கு உண்டு" என்றார். அப்போது கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர், "மம்மூட்டியையும் மத்திய அமைச்சர் ஆக்குங்கள்" என்றார். அதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, "நான் எவ்வளவு காலமாக மம்முக்காவிடம் இதை கூறிவருகிறேன், அவர்தான் கேட்கவில்லை" என்றார். அதைக்கேட்டு மம்மூட்டி வெடித்துச் சிரித்தபடி கைகளை கூப்பி, "இதல்லவோ அனுபவம்... இப்படியே என்பாட்டுக்கு வாழ்ந்துவிட்டு போகிறேன்" என்றார். அதைக் கேட்டு சுரேஷ் கோபியும் சிரித்தபடி காரில் புறப்பட்டுச் சென்றார்.

சிரித்தபடி கைகூப்பிய மம்மூட்டி

கேரள மாநிலத்தில் அரசியலுக்கு வந்து வெற்றிபெற்ற நடிகர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. நடிப்பையும், அரசியலையும் கேரளாவில் தனித்தனி கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். நடிகர்கள் அரசியல் குறித்து பேசுவதும் அரிதானதாகவே உள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியும், மம்மூட்டியும் அரசியல் பற்றி பேசிக்கொள்ளும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.