ஹோட்டலில் வேலைசெய்த சிறுவர்கள்மீது தாக்குதல்; அறைக்குள் அடைத்த உரிமையாளர் கைது! - என்ன நடந்தது?

சென்னை மேற்கு கே.கே.நகர், ஜவஹர் தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர், கே.கே.நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரின் ஹோட்டலில் நேபாளத்தைச் சேர்ந்த 16, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்திருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் ஹோட்டலின் மாடியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி மகாலிங்கம், ஹோட்டல் ஊழியர்கள் சிலர், நேபாள சிறுவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்று ஏன் உங்களது நண்பரை இங்கு அழைத்து வந்தீர்கள்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது மூன்று சிறுவர்களையும் மகாலிங்கம் உள்பட சில ஹோட்டல் ஊழியர்கள், கட்டை, இரும்பு கம்பி, பிரியாணி கரண்டி ஆகியவற்றால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு சிறுவர்கள் தங்கியிருந்த அறையையும் பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

தமிழரசன்

அதனால் அறைக்குள் அடைப்பட்ட மூன்று சிறுவர்களும் ஜன்னல் வழியாக அங்கிருந்து கீழே குதித்து தப்பிச் செல்ல முயன்றனர். இதில் சிறுவர்களின் காலில் காயம் ஏற்பட்டது. அதனால் சிறுவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மருத்துவமனையிலிருந்து கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் ஹோட்டல் உரிமையாளர் மகாலிங்கம், அங்கு வேலை செய்யும் சாலிகிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், திருவாரூர், பரவாக்கோட்டையைச் சேர்ந்த நாகப்பன் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் சிறுவர்களை வேலையில் பணியமர்த்தியது தொடர்பாகவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.