Justice Angel Statue : நீதி தேவதையின் பூர்வீகம் தெரியுமா? - வரலாறும்... சிலையின் மாற்றங்களும்!

நீதி தேவதை சிலையை அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் காணமுடியும். குறிப்பாக நீதிமன்றங்கள், சட்ட அலுவலகங்கள், சட்டக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும். இந்தியாவிலும் இந்த சிலை பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தின்போது கொண்டுவரப்பட்டது. நீதியை சரிசமமாக வழங்குவதற்காக உச்ச நீதிமன்றத்தில் நீதி தேவதை சிலை நிறுவப்பட்டது. அந்த நீதி தேவதை சிலையின், கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். பாகுபாடு பார்த்து நீதி வழங்காமல் இருக்கவும், சரிசமமாக எடை போட்டு சரியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதையும், அநீதியை வீழ்த்த வேண்டும் என்பதையும் குறிக்க வாள் இடம் பெற்ற நிலையிலும், அந்த நீதி தேவதையின் சிலை வடிவமைக்கப்பட்டது.

நீதி தேவதை

இந்த சிலையின் உண்மையான அசல் வடிவம் இதுதான் என்பதை குறிப்பிடும்படி சரியான வரையறை இல்லை என்றாலும், உலகம் முழுவதும் கையில் தராசும், கண்களை கட்டியும், மற்றொரு கையில் வாளும் வைத்தே நீதி தேவதையின் சிலை வடிவமைக்கப்படுகிறது. இந்த சிலையின் வடிவில் இருக்கும் அந்த நீதி தேவதையின் பூர்வீகம் குறித்து தேடத் தொடங்கினால், நாடு விட்டு நாடு பறந்து அழைத்துச் செல்கிறார் நீதி தேவதை.

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் போல ஒவ்வொரு கலாசாரத்துக்கும் நீதிக்கான ஒருவரை அந்தச் சமூகம் அடையாளம் கண்டு வைத்திருக்கும். அப்படி கிரேக்க - ரோம தொன்மவியலை அடிப்படையாகக் கொண்டு, பண்டைய கிரேக்க புராணங்களின் வழியே, நீதி தேவதையாக ஆஸ்ட்ரியா, டைக் அல்லது டைஸ், தெமிஸ், யூனோமியா, பிராக்சிடிஸ் என சுமார் 12 தேவதைகளை நீதி தேவதையாக அடையாளம் காண்கிறது. அதில் ஒரு தேவதையை கிரேக்கர்கள் தெமிஸ் என்றும், ரோமானியர்கள் ஜஸ்டியா என்றும் குறிப்பிட்டு வணங்கினர்.

நீதி தேவதை

இந்த தேவதையை முதன் முதலில் வடிவமாக அடையாளப்படுத்தியவர், கி.மு 27 - கி.பி 14 வரை வாழ்ந்த ரோமானிய பேரரசரார் கயஸ் ஜூலியஸ் சீசர் அகஸ்டஸ். தனது ஆட்சி நீதியின், நல்லொழுக்கத்தின் ஆட்சி எனக் குறிப்பிடும்படியான அடையாளமாக, தெமிஸ் ஜஸ்டியா உருவத்தை நாணயத்தில் பொரித்தார். அவரைத் தொடர்ந்து, பல பேரரசர்கள் தங்களை நீதியின் பாதுகாவலர்களாக அறிவிக்க அந்த உருவத்தைப் பயன்படுத்த தொடங்கினர். 16-ம் நூற்றாண்டு வரை தெமிஸ் ஜஸ்டியா கண்கள் திறந்திருந்த நிலையில்தான் இருந்திருக்கிறார். அதன் பிறகுதான் நீதி மனிதர்களைப் பார்த்து இல்லாமல், நேர்மையான சிந்தனை மூலம் இருக்க வேண்டும் என கண்கள் கட்டப்பட்ட நிலையில், தெமிஸ் ஜஸ்டியா சிலை வடிவமைக்கத் தொடங்கப்படுகிறது. அதுவே வழிவழியாக வந்திருக்கிறது.

தெமிஸ் ஜஸ்டியா கருமை நிற மேனி கொண்டவராகவே கிரேக்கர்களாலும், ரோமானியர்களாலும் கருதப்படுகிறார். மேலும், அந்த நீதி தேவதை எப்போதும் கருமை நிற ஆடைதான் அணிவார் என்றும் நம்பியிருக்கிறார்கள். அந்த மரபை பின்பற்றிதான் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கறுப்பு அங்கி அணிகிறார்கள் எனக் கூறப்படுவதுமுண்டு. பின்னாளில், கிறிஸ்தவ கலப்பில், நீதி தேவதையின் நிறம் வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது. 16-ம் நூற்றாண்டு வரை தெமிஸ் ஜஸ்டியா கண்கள் திறந்திருந்த நிலையில், அதன் பிறகுதான் நீதி ஆட்களைப் பார்த்து இல்லாமல், நேர்மையான சிந்தனை மூலம் இருக்க வேண்டும் என கண்கள் கட்டப்பட்ட நிலையில், தெமிஸ் ஜஸ்டியா சிலை வடிவமைக்கப்படுகிறது.

நீதி தேவதை

சமமான நீதி வழங்கப்படும் என்பதற்கு அடையாளமாக நீதி தேவதை இடது கையில் தராசும், குற்றம் செய்தவர்களை தண்டிப்பதற்காக வலது கையில் நீண்ட இருமுனை வாளும் வைத்திருப்பாராம். அந்த வாளின் இருமுனை கூர்மை, தவறு யார் செய்தாலும் வாள் அவர்கள் பக்கம்தான் திரும்பும் என்பதை குறிக்கிறதாம். அவரின் இடது கால் சட்ட சாசன புத்தகத்தின் மேல் இருக்கிறது.

நீதி தேவதை

அதாவது சட்டத்தை தவிர கவனிப்பதற்கு, முக்கியத்துவம் தருவதற்கு வேறெதுவும் இல்லை. அந்த சட்டவிதிகளின் மேல் நின்றே தீர்ப்பு வழங்கப்படும் என்பதன் அடையாளமாம். வலது காலினை படமெடுத்து வரும் பாம்பின் மீது வைத்திருக்கிறார். அதாவது, நீதி வழங்குவதை தடுக்கும் எந்த தீய சக்தியின் பயமுறுத்தல்களும் செல்லுபடியாகாது. மேலும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிட முடியாது என்பதையே அது வெளிப்படுத்துகிறதாம். இந்த வரலாறை இன்னும் கிளறினால், நீதியைக் குறிக்கும் தராசு குறியீடு, பண்டைய கிரேக்கத்திற்கு முந்தைய உண்மை, நீதியின் தெய்வமான மாத்-வுடன் பிணைகிறது. மாத் என்ற சொல்லிலிருந்து தான் மாஜிஸ்திரேட் எனும் சொல் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான இடங்களில் ஒரே மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும் நீதி தேவதையின் சிலையில் மாற்றம் செய்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில், கண்கள் கட்டப்பட்டிருந்த நீதி தேவதையின், புதிய சிலையில் கண்கள் திறக்கப்பட்டு, வலது கையில் வைக்கப்பட்டிருந்த வாளுக்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய சிலை, தலையில் கிரீடம், நெற்றித் திலகத்துடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய சிலை

இந்த புதிய சிலை சொல்லும் செய்தி குறித்து வெளியான தகவலில், சட்டம் ஒருபோதும் குருடாகாது என்பதையும், அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதையும் வலியுறுத்தி நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் சட்டம் வன்முறை மூலம் அல்ல, நாட்டின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில் நீதி தேவதையின் வலது கையில் இடம்பெற்றிருந்த வாளுக்கு பதிலாக, அரசியலமைப்பு புத்தகம் இடம்பெற்றுள்ளது.

புதிய நீதி தேவதை சிலை குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் பகிரலாமே..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.