`திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி! - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இவ்வாறிருக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரி வரும்போது அதை மட்டும் புறக்கணித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடலைப் பாடிய சம்பவம், தற்போது பெரும் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், அந்த வரியைப் புறக்கணித்தது மிகப்பெரிய தவறு என்றும், திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி, ``இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்பொழுது அதில் வரக்கூடிய, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும்.

இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய

"தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்"

என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது
மாபெரும் தவறாகும்.
இச்செயல் மிகவும்…

— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 18, 2024

இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி. திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி. திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு. தமிழக மக்களின் உணர்வைப் புண்படுத்தும், திராவிட பண்பாட்டைச் சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்திருந்தாலும் கைவிட வேண்டும்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.