புதுச்சேரி: மாமூல் கேட்டு வியாபாரி மீது கொலைவெறித் தாக்குதல்; ஸ்ட்ரெச்சருடன் ஆளுநர் மாளிகை முற்றுகை!
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சந்திரன், இவர் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் மதுபானக்கடை வாசலில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு மது அருந்திவிட்டு அங்கு வந்த மூன்று ரௌடிகள், சந்திரனிடம் மாமூல் கேட்டிருக்கின்றனர். ஆனால் சந்திரன் மாமூல் தர மறுத்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அந்த ரௌடிகள், அங்கிருந்த சோடா பாட்டில்கள் மற்றும், குளிர்பான பாட்டில்களால் சந்திரனின் தலையைக் குறிவைத்து சரமாரியாக தாக்கினார்கள்.
அதனால் வலி தாங்க முடியாத சந்திரன், `ஐயோ.. ஐயோ…’ என்று கதறினார். அதையடுத்து அந்த ரௌடிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அதையடுத்து தலையில் பலத்த காயமடைந்த சந்திரன், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையை மட்டும் அளித்த மருத்துவர்கள், நாளை (இன்று) காலை சாரம் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்குச் செல்லும்படி அறிவுறுத்தி அனுப்பிவிட்டனர்.
அதன்படி இன்று காலை சந்திரனை சாரம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அவரது உறவினர்கள். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள், இங்கு ஸ்கேன் வசதி இல்லை என்றும், அதனால் மீண்டும் அவரை அரசு மருத்துவமனைக்கே அழைத்துச் செல்லும்படி கூறினர். அதையடுத்து அவரை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அவரது உறவினர்கள். இதற்கிடையில் மாமூல் கேட்டு வியாபாரியை தாக்கிய ரௌடிகளை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டி.ஜி.பி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக சமூக அமைப்பினருடன், அரசு மருத்துவமனைக்கு அருகில் நின்றிருந்தார் சுயேச்சை எம்.எல்.ஏ நேரு.
அவருடன் திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன், தமிழர் களம் அழகர், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், பிராங்களின் பிரான்சுவா, அசோக் மற்றும் பொது நல அமைப்பு நிர்வாகிகளும் அங்கிருந்தனர்.

அப்போது வியாபாரி சந்திரனுக்கு முறையான சிகிச்சை கொடுக்காமல், அவர் அலைக்கழிக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது. உடனே அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த அவர்கள், வியாபாரி சந்திரனுடன் தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெரியக்கடை போலீஸார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, `இந்த இடத்திற்கு உடனடியாக சுகாதார இயக்குநர் வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் இருப்பதாகவும், அவர்களால் உடனடியாக வர முடியாது என்றும் தெரிவித்தனர் போலீஸார். அதில் ஆத்திரமடைந்த பொதுநல அமைப்பினர், வியாபாரியை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, வெளியே அழைத்து வந்தனர். சாலையில் ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டு, சட்டப்பேரவையை கடந்து, கவர்னர் மாளிகை முன்பு ஸ்ட்ரெச்சரை நிறுத்தி தரையில் அமர்ந்து, முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். கவர்னர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தி, பாரதி பூங்கா நுழைவு வாயில் அருகே நிறுத்தினர். தகவலறிந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ-வும் அங்கு வந்தனர். அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். அதனால் கவர்னர் மாளிகை முன்பு மேலும் பதற்றம் ஏற்பட்டது. சுகாதாரத்துறைச் செயலரும், இயக்குநரும் நேரில் வந்து பேசினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என அவர்கள் வலியுறுத்தினர். அதையடுத்து சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குநர் மருத்துவர் செவ்வேள் அங்கு வந்து பேசினார்.

அதையடுத்து அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்த போலீஸார், ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அதில் வியாபாரியை சிகிச்சைக்காக ஏற்றினர். ஆனால் அந்த ஆம்புலன்ஸில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லை. அதனால், `வியாபாரி என்றால் உங்களுக்கு அலட்சியமா? மருத்துவர் வந்தால்தான் ஆம்புலன்ஸை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மருத்துவர் வந்தபிறகு, சந்திரனை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
வியாபாரி சந்திரன் மீது ரௌடிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் சமூக வலைதளங்களில் வைரலானதால், பதற்றத்தில் இருக்கிறது புதுச்சேரி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


