வேலூர்: மார்பிங் போட்டோக்களால் பதறிய பெண்கள்; 100 ஆண்களிடம் பணமோசடி - அதிரவைத்த சைபர் குற்றவாளி!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் பலரின் போட்டோக்கள் ஆபாசமாக `மார்பிங்’ செய்யப்பட்டு இணையதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதாக, வேலூர் சைபர் க்ரைம் போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் தலைமையிலான சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையில் இறங்கி, திருவண்ணாமலை மாவட்டம், ஒண்ணுபுரம் அத்திமலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்ற 23 வயது இளைஞரை நேற்று கைதுசெய்தனர். ரூபேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற சைபர் க்ரைம் போலீஸார், ``பி.டெக் வேளாண் பொறியியல் பட்டதாரி இளைஞனான ரூபேஷ் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற இணையப் பக்கங்களில், வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளம்பெண்களின் புகைப்படங்களைச் சேகரித்து `பாலியல் தொழிலாளிகள்’ என மார்பிங் செய்து பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

சைபர் க்ரைம்

சல்லாப எண்ணத்துடன் இந்த இணையதளப் பக்கங்களை எட்டிப் பார்க்கும் ஆண்களிடம் டிஜிட்டல் பேமன்ட் மூலமாக பணமோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் போட்டோக்களை தவறாகச் சித்திரித்து பதிவேற்றம் செய்ததும், அதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, ரூபேஷை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கிறோம். எனவே, சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படத்துடன் கூடிய கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம். இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.