சென்னை மழை: ``வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் என்ன தயக்கம்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
வானிலை ஆய்வு மையம் எச்சரித்த அளவுக்குச் சென்னையில் மழை பெய்யவில்லையென்றாலும், சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கின. அதேசமயம், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உடனடியாகச் செயல்பட்டு நிலைமையைச் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மழை வெள்ள தடுப்பு பணிகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டதற்கு, `தண்ணீர் தேங்கவில்லையே இதுதான் வெள்ளை அறிக்கை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்த நிலையில், வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் என்ன தயக்கம் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியிருக்கிறார்.
முன்னதாக ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், கட்சியின் 53-வது ஆண்டு விழாவான இன்று தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னையின் பல்வேறு இடங்கள் கண்ணீரில் தத்தளித்தது. வேளச்சேரி, பெருங்குடி, மடிப்பாக்கம், மேடவாக்கம், புளியந்தோப்பு, சோழிங்கநல்லூர், கொளத்தூர், கோயம்பேடு மார்க்கெட் என பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.

ஆனால், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எங்குமே தண்ணீர் தேங்கவில்லையென்று பொய்யான செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2022-ல், சென்னையில் 20 செ.மீ மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர்கூட நிற்காது என்று முதலமைச்சரிலிருந்து மேயர் வரை அனைவரும் கூறினார்கள். 2023-லும் அதையே கூறினார்கள். இந்த முறைதான் கூறவில்லை. ஏனென்றால் தண்ணீர் தேங்கிய இடங்களெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுவிட்டது.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், சுமார் 2,400 கி.மீ மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதில், 1,240 கி.மீ நீளம் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு, எஞ்சியுள்ள கால்வாய் பணிகளை இவர்களால் முடிக்க முடியவில்லை. 40 மாதங்களாகச் சாக்குபோக்கு ஆட்சி நடத்துபவர்கள் இதை முடித்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது. கனமழையின்போது வெள்ள நீர் தேங்கினால் அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனப் பரிந்துரைக்க திருப்புகழ் கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது.

அந்த கமிட்டி பரிந்துரைத்த பரிந்துரைகள் என்ன, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று வெள்ளை அறிக்கை கேட்டால், தண்ணீர் வடிந்துவிட்டதே இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார் துணை முதலமைச்சர். முதிர்ச்சியில்லாத அமைச்சர் என்றுதான் இதைப் பார்க்க முடியும். மழை பெரிதாகப் பெய்யவில்லை, அதனால் தண்ணீர் தேங்கவில்லை, இதுதான் நிலைமை. ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் இவர்களுக்கு என்ன தயக்கம். இந்த மாதிரியான சூழலில், ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, அந்தந்த அமைச்சர்கள் அந்தந்தப் பணிகளை மேற்கொள்வார்கள். இப்போது அதெல்லாம் கிடையாது, எல்லாமே துணை முதலமைச்சர்தான். எல்லா இலாகா பணிகளையும் அவர்தான் செய்கிறார்.
மழைக்கே இவர்கள் அலறுகிறார்கள். தானே புயல், ஒகி புயல், வர்தா புயல், கஜா புயல் என பல புயல்களைக் கண்டு புயல் வேகத்தில் மக்கள் பிரச்னைகளைத் தீர்த்தது அ.தி.மு.க. முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்துவிட்டால் போதுமா... அதே தூய்மைப் பணியாளர்களின் குறைகளை இவர்கள் போக்கினார்களா... கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் பாராமல் வேலைபார்த்த பல ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை நிறுத்தினார்கள்.

அதற்கு என்ன காரணம்... அவர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் தனியாருக்கு டெண்டர் விட்டிருக்கிறார்கள். அதேபோல, ஈ.சி.ஆர் சாலையில் தி.மு.க-வினர் நிறைய இடம் வாங்கியிருக்கிறார்கள். அதன் மதிப்பைக் கூட்டுவதற்காகக் கலைஞர் பன்னாட்டு மையத்தை அங்கு அமைக்கிறார்கள். டிரேட் சென்டரிலேயே அதை அமைப்பதற்கான இடம் இருக்கும்போது, எதற்காக 40 கி.மீ தள்ளி மக்களுக்குச் சிரமம் ஏற்படுத்தும் வகையில் கலைஞர் பன்னாட்டு மையத்தை அங்கு அமைக்க வேண்டும்" என்று கேள்வியோடு சாடினார்.

அதைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றிணைவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகுமா என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ``அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தாதீர்கள். அவர்கள் நீக்கப்பட்டவர்கள். நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். பிரிந்துசென்றவர்கள் இன்றைக்கு எத்தனையோ அவதாரத்தை எடுக்கிறார்கள். யாரும் யாரையும் இணைக்கச் சொல்லவில்லை. நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


