Ranji Trophy: தமிழக மைதானத்தை கண்டு வியந்த ஜெயதேவ் உனத்கட் - அசர வைத்த கோவை அசோசியேஷன்

கோயம்புத்தூர் கிரிக்கெட் மைதானத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை கண்டு வியந்து போய் பாராட்டியிருக்கிறார் சவுராஷ்ட்ரா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜெயதேவ் உனத்கட்.

கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி முதல் ரஞ்சிக் கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடும் சவுராஷ்ட்ராவும் மோதிய போட்டி கோயம்புத்தூரின் SNR கல்லூரி மைதானத்தில் நடந்திருந்தது. போட்டியின் மூன்றாவது நாளில் கோவையில் பலத்த மழை. அன்றைய நாளில் போட்டி நடைபெறவே இல்லை. மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. தண்ணீரை வெளியேற்றி ஆடுகளத்தை போட்டிக்கு தயார் செய்வது அசாத்தியமான காரியமாக பார்க்கப்பட்டது. ஆனால், மைதானத்தின் க்யூரேட்டர்கள் அந்த அசாத்தியமான பணியை சவாலாக எடுத்துக் கொண்டு சிறப்பாக செய்து முடித்தனர். மைதானத்திலிருந்து தண்ணீரையெல்லாம் முழுமையாக வெளியேற்றி ஆடுவதற்கு ஏற்ற வகையில் தயார்ப்படுத்திவிட்டனர். நான்காவது நாள் ஆட்டம் திட்டமிட்டப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து சவுராஷ்ட்ரா அணியின் கேப்டன் உனத்கட் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனை வெகுவாக பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அவர் கூறியிருப்பதாவது, 12 மணி நேரத்தில் மைதானத்தில் தேங்கியிருந்த மழை நீரை முழுமையாக வடிய செய்து ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடுதான் அத்தனை மட்டங்களுக்குமான கிரிக்கெட்டிலும் ஆகச்சிறந்த உள்கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாக இருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு தொடர்ச்சியாக சாம்பியன் வீரர்களை கொண்ட மாநிலமாக திகழ்கிறது. நாங்கள் இந்தப் போட்டியில் தோற்றுவிட்டோம். ஆனாலும் மைதான பராமரிப்பாளர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஆட்டத்தின் மூன்றாம் நாள் முழுவதும் மழை பெய்து மைதானம் முழுமையாக நீரால் நிரம்பியிருந்தது. ஆனால், நான்காம் நாளில் திட்டமிட்டப்படி 9:30 மணிக்கு போட்டியை தொடங்கிவிட்டார்கள். நல்ல வீரர்களை கொண்டிருந்தால் மட்டுமே ஒரு அணியால் சாம்பியனாகிவிட முடியாது. இப்படியான வசதிகளும் தேவை. இந்தியாவின் மற்ற மாநிலங்களின் கிரிக்கெட் அசோசியேஷன்கள் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். என்றார்.

சமீபத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதிய போட்டி உத்தரபிரதேசத்தின் கான்பூரில் நடந்திருந்தது. அங்கே மழையால் முழுமையாக இரண்டரை நாள் ஆட்டம் தடைப்பட்டருந்தது. மழையே இல்லாத ஒரு நாளில் கூட மைதானத்தில் தேங்கியிருந்த நீரை வெளியேற்ற முடியாமல் அதற்கேற்ற வசதிகள் இல்லாமல் போட்டியை நடத்த முடியாமல் திணறியிருந்தனர். அதேமாதிரி சமீபத்தில் நொய்டாவில் நடக்கவிருந்த ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியும் மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் முழுமையாக தடைப்பட்டது. சர்வதேச போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் நிலையே இப்படியிருக்க இரண்டாம் கட்ட மைதானமாக உள்ளூர் போட்டிகளை மட்டுமே நடத்தும் தமிழகத்தின் கோயம்புத்தூர் மைதானம் அத்தனை உட்கட்டமைப்பு வசதியுடன் இருப்பதுதான் அனைவரும் வியப்படைய வைத்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.