முதலாளி திட்டியதால் ஆத்திரம்... உணவில் சிறுநீர் கலந்த பணிப்பெண் கைது - உபி அதிர்ச்சி!
உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தில் வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர், தனது முதலாளி வீட்டாரின் உணவில் சிறுநீர் கலந்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, சம்பந்தப்பட்ட பணிப்பெண்ணின் பெயர் ரீனா (32) என்று தெரியவந்திருக்கிறது. இவர் சுமார் 8 வருடங்களாக உள்ளூர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நிதின் கௌதம் வீட்டில் வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில், தொழிலதிபர் குடும்பத்தினருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படவே, ரீனா சமைக்கும் சாப்பாட்டின்மீது வீட்டாருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனால், ரீனா சமைப்பதைக் கண்காணிக்க சமையலறையில் ரகசிய கேமராவை குடும்பத்தினர் பொருத்தினர். பின்னர், கேமராவில் பதிவான வீடியோவில் ரொட்டி மாவுவில் ரீனா சிறுநீர் கலப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது. அதையடுத்து, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் ரீனா மீது போலீஸில் அவர்கள் புகாரளித்தனர்.

அதன்படி, கைதுசெய்யப்பட்ட ரீனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். பின்னர், வீடியோ ஆதாரம் காண்பிக்கப்பட்ட பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், சிறு சிறு தவறுகளுக்காகத் தனது முதலாளி தன்னை கடுமையாகத் திட்டியதே இவ்வாறு பழிவாங்கத் தூண்டியதாகப் போலீஸிடம் ரீனா தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ரீனா மீது ஐ.பி.சி 297-ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தற்போது அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்றுவருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


