ஜோலார்பேட்டை: அரசுப் பள்ளியில் வைத்து இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; தலைமையாசிரியர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (57). இவர், ஜோலார்பேட்டை அருகேயுள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில், கடந்த 13 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பள்ளியில் கணினி ஆபரேட்டராக வேலைச் செய்து வரும் 26 வயதான இளம் பெண்ணிடம் தகாத முறையில் பேசி, அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வந்திருக்கிறார் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி. அந்தப் பெண் கணவரை இழந்தவர் மற்றும் தற்காலிகப் பணியாளர் என்பதால், `என்னச் செய்தாலும் கேட்க ஆளில்லை’ என்ற மோசமான எண்ணத்துடன் எல்லை மீறி வந்திருக்கிறார் சுப்பிரமணி.

தலைமை ஆசிரியர் சுப்பிரமணி

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் சென்ற நேரத்தில், கணினி ஆபரேட்டரை அழைத்து துறை ரீதியாக ஒருப் பணியை முடித்து தரச் சொல்லியிருக்கிறார் சுப்பிரமணி. பணியை `சரியாகச் செய்துகொடுத்தால், உனக்கு ஒரு முத்தம் தருகிறேன் செல்லம்’ எனச் சொல்லியிருக்கிறார். அவரது தவறான பேச்சை பொருட்படுத்தாமல் பணியில் கவனம் செலுத்தினார் அந்த கணினி ஆபரேட்டர்.

அப்போது, இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறார் சுப்பிரமணி.

அதிர்ச்சிக்குள்ளான கணினி ஆபரேட்டர், அவரின் பிடியில் இருந்து தப்பித்து, கத்தி கூச்சலிட்டுக்கொண்டே அறையில் இருந்து வெளியே ஓடி வந்திருக்கிறார். அங்கிருந்த உதவி தலைமை ஆசிரியையிடம் நடந்ததைக் கூறி அழுதிருக்கிறார். இதையடுத்து, வீட்டுக்குச் சென்ற கணினி ஆபரேட்டர் தனது குடும்பத்தினரிடமும், உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினார். தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மீது ஆத்திரப்பட்ட அவர்கள் நேற்றைய தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். பிரச்னை ஏற்படும் என முன்கூட்டியே உணர்ந்த தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, பள்ளிக்கு வரவில்லை.

தலைமை ஆசிரியர் சுப்பிரமணி

தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீஸாரும், வட்டாரக் கல்வி அலுவலரும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பிறகு, சமூக நலத்துறை மூலமாக பாதிக்கப்பட்ட கணினி ஆபரேட்டரிடம் விசாரணை நடத்தப்பட்டு, புகார் பெறப்பட்டது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை பள்ளிக்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சுப்பிரமணி `என் பொண்ணு மாதிரி அந்த பாப்பா. உதட்டுல வேர்த்து கொட்டுச்சு. அதான் துடைச்சிவிட்டேன். மற்றபடி நான் முத்தம் கொடுக்கலை’ என சாமர்த்தியமாகப் பேசுவதைபோல சிரித்துகொண்டே விளக்கம் கொடுத்து, அதிகாரிகளையே கோபமடையச் செய்தார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியைக் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.