Snacks -ல் கொகைன்; திருவிழா பார்ட்டி; ரூ.14,000 கோடி மதிப்பு - போதைப்பொருள் பறிமுதல்
மும்பை மற்றும் குஜராத்தில் கடந்த ஆண்டு வரை மையம் கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் இப்போது டெல்லியையும் குறிவைத்திருக்கிறது.
மும்பையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது மற்றும் குஜராத் கடற்கரையில் கண்காணிப்பு தீவிரமானதை தொடர்ந்து டெல்லிக்கு நகர்ந்துள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல் அங்கிருந்து கொண்டு புது வழிகளில் போதைப்பொருளை இந்தியா முழுவதும் அனுப்பிக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருவதால் அதில் நடக்கும் பார்ட்டிகளில் விற்பனை செய்வதற்காக போதைப்பொருள் வெளிநாடுகளில் இருந்து டெல்லி வந்து குவிய ஆரம்பித்து இருக்கிறது. அதனை டெல்லியில் இருந்து நாட்டின் மெட்ரோபாலிடன் நகரங்களுக்கு கடத்திச்சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
கடந்த ஒன்றாம் தேதி டெல்லி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி ரெய்டு நடத்தி ரெய்டு நடத்தி டெல்லி மஹிபல்பூர் குடோனில் ரூ.6500 கோடி மதிப்புள்ள 562 கிலோ கொகைன் மற்றும் ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இப்போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக துஷார் கோயலும், அவனது கூட்டாளிகள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடந்த 10ம் தேதி மேற்கு டெல்லியில் உள்ள ரமேஷ் நகரில் சிறிய கடை ஒன்றில் இருந்து ரூ.2400 கோடி மதிப்பிலான 200 கிலோ கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கொகைன் அனைத்தும் கொலம்பியாவைச் சேர்ந்தது. அவற்றை கடத்தல் கும்பல் ஸ்நாக்ஸ் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தனர். 200 கிலோ மற்றும் 562 கிலோ கொகைன் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பல்தான் ஈடுபட்டுள்ளது. இது குறித்து டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரமோத் குஷ்வாஹா கூறுகையில்,துபாயைச் சேர்ந்த வீரேந்தர் என்பவர்தான் பிரிட்டனைச் சேர்ந்த சவிந்தர் மற்றும் ஜதிந்தர் சிங் ஆகியோரை இந்தியாவிற்கு அனுப்பி விற்பனையைக் கண்காணிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். சவிந்தர் சிங் போலீஸார் வருவதை தெரிந்து கொண்டு போதைப்பொருளை விட்டுவிட்டு லண்டன் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். ஜகிந்தர் சிங் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து போதைப்பொருளை மும்பைக்கு வாங்கிச்சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்த பரத் குமார் ஜெயின் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருளை கடத்தல் கும்பலிடமிருந்து வாங்குவதற்காக துஷார் கோயல் இரண்டு முறை துபாய் மற்றும் தாய்லாந்து சென்று வந்துள்ளார். தற்போது கோயல் மற்றும் சவிந்தர் சிங்கிடமிருந்து போதைப்பொருளை வாங்கிச்சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டு இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்என்றார்.
டெல்லி போலீஸாருடன் அமலாக்கப்பிரிவும் சேர்ந்து கொண்டுள்ளது. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மும்பை உட்பட நாடு முழுவதும் போதைப்பொருள் வியாபாரிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தியுள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் டெல்லியைச் சேர்ந்த விரேந்திர் 2011ம் ஆண்டு திகார் சிறையில் கோயலைச் சந்தித்தபோது அவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
ஜிதேந்தர் தற்போது துபாயில் இருந்து கொண்டு போதைப்பொருள் வியாபாரம் செய்கிறான். சிறையில் ஏற்பட்ட அறிமுகம் மூலம் கடந்த ஜூன் மாதம் துபாய் சென்ற கோயல் அங்கு ஜிதேந்தரை சந்தித்துப் போதைப்பொருள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். ஜிதேந்தர் தென் அமெரிக்காவில் இருந்து பழைய சரக்கு கப்பல் மூலம் போதைப்பொருளை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளார். அப்போதைப்பொருள் சென்னைக்கு வந்திருந்திருக்கிறது. அங்கிருந்து உத்தரப்பிரதேசத்திற்கு கடத்தப்பட்டு பின்னர் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மட்டுமல்லாது குஜராத்திலும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் மருந்து கம்பெனி ஒன்றில் இருந்து பிடிபட்டுள்ளது. ஒரே கும்பல் 14 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருளை இந்தியாவிற்குள் கொண்டு வந்திருக்கிறது. இப்போதைப்பொருள் விவகாரத்தில் கோயல் பிடிபட்டதை பா.ஜ.க தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறது. கோயல் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்றும், பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர். அதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு காங்கிரஸ் இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்குவதாகவும், அதில் கிடைக்கும் பணத்தைத் தேர்தலுக்குப் பயன்படுத்துவதாகவும் பிரதமர் நரேந்திரமோடி காட்டமாகக் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ஆனால் இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்கிடம் பேசியபோது, கோயல் எங்கள் கட்சியில் இருந்து முன்கூட்டியே நீக்கப்பட்டுவிட்டார். பா.ஜ.க குஜராத்தில் அதானியால் நடத்தப்படும் துறைமுகத்தில் இருந்து கோடிக்கணக்கில் போதைப்பொருள் பிடிபட்டபோது வாய் திறக்கவில்லை. இப்போதும் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க தவறிவிட்டு அடுத்தவர்கள் மீது மத்திய பா.ஜ.க குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறதுஎன்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


