சென்னை: கன மழைக்கு நடுவில், கடகட மது விற்பனை; சட்ட விரோத போனி... மிரட்டப்பட்ட நிருபர்கள்! #Exclusive
சென்னையில் பெருமழை வெடிக்கும் என அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் உறைந்திருக்கின்றனர். நகரம் அதன் இயக்கத்தை இழந்து அமைதியாகியிருந்தது.
அதி கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்ட இன்று காலையில் அபாயகரமான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியின், முக்கிய சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மட்டும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அதிர்ச்சியளிக்கிறது.
மழைக் குறைந்திருக்கும் இன்றைய (16.10.2024) காலையில் சென்னையின் நிலையை கவர் செய்ய, இருபுறமும் கார்கள் அணிவகுத்திருந்த வேளச்சேரி மேம்பாலத்தில் நமது நிருபர் குழுவினர் நின்றிருந்தனர்.
வேளச்சேரி விஜயநகர பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்கு உள்ளேயும் வெளியேயுமாக ஆண்கள் போக்குவரத்து இருந்தது.
அதிர்ச்சியடைந்த நிருபர் குழு, உள்ளே நடப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள முயன்றுள்ளனர். இதற்காக இரண்டு நிருபர்கள் டாஸ்மாக்கில் நுழைந்தனர். வீடியோ பதிவு செய்ய ஒருவர் பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்தார்.
அப்போது பாலத்துக்கு மேலே வந்த இரண்டு நபர்கள், "ஏய் இங்கல்லாம் கேமரா வச்சிட்டு நிக்கக் கூடாது" என மிரட்டினர். அவர்களுடன் வாக்குவாதம் எழ, நிருபர் அங்கிருந்து கிளம்பும் வரை மிரட்டல்கள் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் உள்ளே சென்ற நிருபர்கள் காலையிலேயே, அதுவும் வேளச்சேரி போன்ற வெள்ள அபாயம் உள்ள பகுதியில் மது விற்பனை எவ்வித தடையும் அச்சமும் இன்றி நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துள்ளனர்.

எந்த ஒழிவு மறைவும் இல்லாமல், கடை திறக்கும் நேரத்துக்கு வெகு முன்பாகவே மதுவிற்பனை நடைபெறுவதுடன், மதுப்பொருள்களின் விலையையும் கூட்டி விற்றுள்ளனர்.
மதுக்கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் விற்றது பெரும் பிரச்னையாக எழுந்ததை நாம் அறிவோம். மழைக் காலத்தில் கள்ளத்தனமாக விற்கும் மது பாட்டில் ஒன்றுக்கு 70 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்கின்றனர்.
அனைத்துவிதமான மதுவகைகள் மட்டுமல்லாமல் டாஸ்மாக்கிலேயே குடிமகன்களுக்கு சைட் டிஷ்ஷும் கிடைக்கிறது. கையில் மதுவும் சைடிசஷ்ஷுமாக தண்ணீரில் கால் நனைத்து நடந்து செல்கின்றனர் மது பிரியர்கள்.
நிருபர்கள் டாஸ்மாக் உள்ளே நிற்கும்போதே, மற்றொரு நிருபரை மிரட்டிய நபர்களும் டாஸ்மாக் உள்ளே நுழைந்தனர். "மேல ஒருத்தன் வீடியோ எடுத்துட்டு இருந்தான்... மிரட்டி விட்டுட்டோம்" என டாஸ்மாக் நபர்களுடன் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர்.
நடந்த சம்பவம் குறித்து சென்னை தெற்கு மாவட்ட தலைமை அதிகாரியிடம் பேசியபோது, "மது விற்பனை நடப்பதே எனக்குத் தெரியாது" என்றார். "டாஸ்மாக் திறக்கும் நேரத்துக்கு முன்னரே மதுவிற்பனை செய்வது சட்ட விரோதம்தான். நான் இப்போதே நடவடிக்கை எடுக்கிறேன்" என்றும் கூறினார்.
இதுதொடர்பாக மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பேச முயன்றபோது, "அமைச்சர் இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் பேசமாட்டார். எதுவா இருந்தாலும் டாஸ்மாக் அதிகாரிங்க கிட்ட பேசிக்கங்க" என்று பதிலளித்தார் அவரது பி.ஏ.
இது போன்ற சம்பவங்களால் டாஸ்மாக் மீதான மாநில அரசின் கொள்கை மீது பொதுமக்களுக்கே சந்தேகம் எழுந்துள்ளது. மது ஒழிப்பு விவகாரத்தில் திமுக கூட்டணிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதையும் நாம் அறிவோம்.
இருந்தபோதிலும், சென்னை மாதிரியான பெரு நகரத்திலேயே மழை வெள்ள அபாயத்துக்கு நடுவே சட்ட விரோத மது விற்பனை அமோகமாக நடப்பதும், இது குறித்து அதிகாரிகள் அறியாமையில் இருப்பதும் பெரும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


