`சித்திக்கின் மகன் இருந்திருந்தால் அவரையும் கொன்றிருப்போம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இப்படுகொலை தொடர்பாக மூன்று பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் பொறுப்பு ஏற்றுள்ளனர். இதையடுத்து குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட தர்மராஜ் மற்றும் குர்னைல் சிங் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர். அகோலாவை சேர்ந்த சுபம் மற்றும் பிரவீன் சகோதரர்கள்தான் இக்கொலைக்கு முக்கிய காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாபா சித்திக் கொலைக்கு பிறகு சுபம் என்பவர்தான் இக்கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தான் காரணம் என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அவரது சகோதரர் பிரவீனை புனே போலீஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறுகையில், அகோலாவை சேர்ந்த சுபம் மற்றும் பிரவீன் சகோதரர்கள் 2018ம் ஆண்டே புனே வந்துவிட்டனர். புனேயில் அவர்கள் பால்பண்ணை ஒன்றை தொடங்கி நடத்தி வந்தனர்.

பாபா சித்திக்

சுபம் கல்லூரியில் படித்த போது என்.சி.சி முகாமிற்கு ராஜஸ்தான் சென்றுள்ளார். அப்படி சென்ற போதுதான் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளின் அறிமுகம் கிடைத்துள்ளது. சுபம் மொபைல் போன் பயன்படுத்துவது கிடையாது என்றார். பாபா சித்திக் கொலையை விசாரிக்கும் மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், சுபம், பிரவீன் ஆகிய இருவருமே குற்றவாளிகள்தான். குற்றத்திற்கு சுபம்தான் பண உதவி செய்துள்ளான். பிரவீன் அதற்கு துணையாக இருந்துள்ளான். அதோடு பிரவீன் மும்பை வந்து சென்றுள்ளான். கொலையாளிகளுக்கு சுபம் துப்பாக்கி கொடுத்து உதவினாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

கடந்த ஜனவரி மாதம் சுபமும், அவரது சகோதரர் பிரவீனும் அகோலாவில் ஆயுத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள தர்மராஜ் மற்றும் தலைமறைவாக இருக்கும் குர்னைல் சிங் ஆகியோர் உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.

அவர்கள் புனேயில் பழைய இரும்பு வியாபாரியிடம் வேலை செய்து வந்தனர். அப்போதுதான் பிரவீன் மற்றும் சுபம் தொடர்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. இக்கொலையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மராஜ் மற்றும் தலைமறைவாக இருக்கும் சிவ்குமார் கெளதம் ஆகியோருடன் சுபம் மற்றும் பிரவீன் தங்களது பால்பண்ணையில் இக்கொலை தொடர்பான சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல முறை இச்சந்திப்பு நடந்துள்ள்து என்றார்.


மகனையும் கொலை செய்ய உத்தரவு

``பாபா சித்திக் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் படி சம்பவ இடத்தில் பாபா சித்திக் மகன் எம்.எல்.ஏ சீசன் சித்திக் இருந்தால் அவரையும் சுட்டுக் கொலை செய்துவிடும்படி தங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்ததாக இருவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதாவது தங்களுக்கு ஒருவரை கொலை செய்ய மட்டும்தான் உத்தரவு வந்ததாகவும், அதேசமயம் இருவரும் தென்பட்டால் இருவரையும் கொன்றுவிடும்படி உத்தரவிடப்பட்டு இருந்ததாக இருவரும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர் என்றார். சல்மான் கானுக்கு எச்சரிக்கை கொடுக்கும் கொடுக்கும் விதத்தில் இப்படுகொலை நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இப்படுகொலையை தொடர்ந்து எம்.எல்.ஏ சீசன் சித்திக் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உளவுத்துறைக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஏற்கெனவே அவருக்கு ஒரு போலீஸ் அதிகாரி பாதுகாப்பு கொடுத்து வருகிறார். சீசன் சித்திக் கடிதத்தை தொடர்ந்து அவரது பாதுகாப்பை ஒய் பிளஸாக போலீஸார் அதிகரித்து இருக்கின்றனர். சீசன் சித்திக் அலுவலகத்திலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாபா சித்திக் படுகொலைக்கு காரணம் பாதுகாப்பு குறைபாடு மற்றும் உளவுத்துறையின் தோல்விதான் என்று வல்லுனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இப்படுகொலை தொடர்பாக மாநில டிஜிபி ரேஷ்மி சுக்லா மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சல்கர் ஆகிய இருவருமே வாய் திறக்கவில்லை என்பதையும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற முன்னாள் மும்பை கமிஷனர் எம்.என்.சிங் கூறுகையில், மும்பை போலீஸார் விழித்துக்கொள்ளும் நேரம் இது. நான் ஒய்வு பெற்ற பிறகு 22 ஆண்டுகளில் இது போன்ற ஒரு சம்பவம் இப்போதுதான் நடந்திருக்கிறது என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.