`மழைநீர் வடிகால் பணிகள்; ரூ.4,000 கோடியை வீணடித்திருக்கிறார்கள்! - அரசைச் சாடும் CTR நிர்மல் குமார்

சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்று முதல் பரவலாக மழை பெய்துகொண்டிருக்கிறது. மேலும், தென்மேற்குப் பருவமழை முற்றிலுமாக விலகி வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. மறுபக்கம், சென்னையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கிய வண்ணம் இருக்கிறது.

சென்னை - கனமழை

பல இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மின்மோட்டார்கள் மூலம் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், இந்த மழைக்கே தண்ணீர் இப்படி தேங்குகிறது என்றால் இன்னும் மழை அதிகமாகப் பெய்தால் என்னவாகும், ஆளும் அரசு என்ன நடவடிக்கைகளைத்தான் எடுத்திருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்புகின்றனர். இது குறித்து அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமாரிடம் பேசினோம்.

அப்போது, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ``எல்லா வருடமும் சென்னையில் அதிகபட்சமாக 33 செ.மீட்டரிலிருந்து 50 செ.மீட்டருக்கு மேலாகவே இருந்திருக்கிறது. ஆனால், இன்றைக்கு 6-லிருந்து 10 செ.மீ எங்கேயும் தாண்டவில்லை. முதலில் மழைநீர் வெளியேறுகின்ற கால்வாய்களை இந்த ஆட்சியாளர்கள் தூர்வாரியிருக்க வேண்டும். அது துறைமுகம் தொகுதியிலேயே நடக்கவில்லை. அங்குதான் அதிகமாகத் தண்ணீர் தேங்கி வெளியேறுகின்ற பகுதி. அங்கேயே நடக்கவில்லை என்றால் மற்ற எந்தப் பகுதிகளிலும் தூர்வாரும் பணி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல, மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளை மூன்றரை வருடங்களாகச் செய்துகொண்டே இருக்கிறார்கள். நான்காயிரம் கோடி ரூபாய் அதில் செலவும் செய்திருக்கிறார்கள். ஆனால், எவ்வளவு வேலைகள் முடிந்திருக்கிறது என்பதைச் சதவிகிதத்தில் சொல்கிறார்கள்.

சி.டி.ஆர்.நிர்மல் குமார்

அப்படிச் சொன்னால் எந்தப் பணிகள் முடிந்துவிட்டது, முடியவில்லை என்பது தெரியாது. இங்கெல்லாம் பணிகள் முடிவடைந்திருக்கிறது, இன்னும் முடியவில்லை, இணைப்புப் பகுதிகளில் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்று பகுதிகளைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும். பொதுவாக 90, 95 சதவிகித பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறுவது ஏமாற்று வேலை. ஏனெனில் இவர்களிடம் தரவுகள் எதுவும் இல்லை. அதேபோல, மழைநீரும், கழிவுநீரும் தனித் தனியாகச் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் இரண்டுமே சேர்ந்து செல்லும் வகையிலேயே கால்வாய்களை அமைத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது இதனை ஏரியில் கொண்டுபோய் சேர்க்கமுடியாது.

சென்னை - கனமழை

கடலில் சேர்ப்பதாக இருந்தால் செலவு நான்கு மடங்கு அதிகமாகும். இதற்கான தெளிவு இவர்களிடம் திட்டமிடும்போதே இல்லையா அல்லது கமிஷன் நோக்கத்தில் மெத்தனமாக நான்காயிரம் கோடி செலவு செய்தார்களா என்பது தெரியவில்லை. நிறைய இடங்களில் பணிகளைப் பாதியில் நிறுத்தியிருப்பதால் மழைநீர் வெளியேற முடியாமல் இருக்கிறது. மழைநீர் வடிகால் பணிகள் திட்டம் என்ன அதன் வரைபடம் என்ன என்பதைப் பலமுறை கேட்டும் இந்த அரசு கொடுக்கவில்லை. வீராணம் திட்டம், சேது சமுத்திரம் திட்டத்தில் பணத்தை வீணடித்ததுபோலதான் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் திட்டத்தில் நான்காயிரம் கோடியை வீணடித்திருக்கிறார்கள்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.