Elon Musk : விண்வெளி ஆய்வில் மைல்கல் சாதனை; வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய மஸ்கின் Starship booster!

இதுவரை விண்ணில் செலுத்திய ராக்கெட்டுகள், அதன் பணியை முடித்துவிட்டு ஒன்று எரிந்துவிடும் அல்லது கடலில் விழுந்துவிடும். ஆனால், தற்போது எலான் மஸ்க் நிறுவனம் அனுப்பிய ராக்கெட்டில் உள்ள பூஸ்டர் உலகிலேயே முதல்முறையாக பூமிக்கு மீண்டும் பத்திரமாக திரும்பியுள்ளது.

நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்புவது என்பது எலான் மஸ்கின் கனவுகளில் ஒன்றாகும். இதை நனவாக்கும் ஒன்று தான் மேல் கூறியது ஆகும். மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் என்னும் உலகிலேயே மிகப்பெரிய ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட்டின் உயரம் 400 அடி ஆகும்.

Launch and return are fundamental techniques for Starship’s fully and rapidly reusable design pic.twitter.com/vrTdGkB08s

— SpaceX (@SpaceX) October 13, 2024

இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் மனிதர்களை விண்வெளியில் விட்டுட்டு, மீண்டும் அது பூமிக்கு திரும்பிவிடும் என்பது தான் அதன் சிறப்பே. இந்த ராக்கெட் இரண்டு நிலைகளை கொண்டதாகும். ஒன்று, விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் விண்கலனாக இருக்கும். இன்னொன்று, சூப்பர் ஹெவி பூஸ்டர்.

தெளிவாக கூற வேண்டுமானால், இந்த ராக்கெட் விண்வெளியில் செலுத்தப்பட்ட பிறகு இரண்டாக பிரிந்து, விண்கலம் நிலவில் தரையிறங்கும்...பூஸ்டர் மீண்டும் பூமிக்கே திரும்பிவிடும். இதை மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதனால் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதில் குறிப்பிட்ட அளவு செலவுகள் குறையும்.

இதற்கு முன்பு, இந்த ராக்கெட்டின் சோதனை நான்கு முறை நடந்துள்ளது. அவை அனைத்திலுமே பூஸ்டர் தரையிறங்குவதற்கு முன்பே, வெடித்து சிதறிவிட்டது. தற்போது ஐந்தாவதாக நடந்த சோதனை வெற்றியடைந்துள்ளது.

நேற்று காலை அமெரிக்க நேரப்படி 8.25-க்கு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மனிதர்கள் யாருமில்லாத விண்கலத்துடன் ஸ்டார் ஷிப் ஏவப்பட்டது. 8:30 மணியளிவில், ராக்கெட்டில் இருந்து பூஸ்டர் பிரிந்து மீண்டும் எங்கு இருந்து ஏவப்பட்டதோ அதே இடத்திற்கு, அப்படியே திரும்பியது. இப்படி பூஸ்டர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்புவது, இதுவே உலகிலேயே முதல்முறையாகும்.

Just inspected the Starship booster, which the arms have now placed back in its launch mount. Looks great!

A few outer engine nozzles are warped from heating & some other minor issues, but these are easily addressed.

Starship is designed to achieve reflight of its rocket… pic.twitter.com/oWZoOOfHmk

— Elon Musk (@elonmusk) October 14, 2024

வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பிய பூஸ்டரை பார்வையிட்ட எலான் மஸ்க், "ஏவுதளத்திற்கே மீண்டும் வந்த ஸ்டார் ஷிப் பூஸ்டரை இப்போது தான் பார்வையிட்டேன். பார்க்கவே பிரமிப்பாக உள்ளது.

இதில் ஒரு சில இன்ஜின் முனைகள் வெப்பத்தால் வளைந்திருக்கின்றன. மேலும் சின்ன சின்ன கோளாறுகள் உள்ளன. ஆனால் அவற்றை எளிதாக சரி செய்துவிடலாம்.

விண்கலம் விண்ணுக்கு சென்ற ஒரு மணி நேரத்திலேயே, மீண்டும் அதன் பூஸ்டரை விண்ணுக்கு அனுப்பலாம் என்பதுபோல ஸ்டார்ஷிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பூஸ்டர் சுமார் 5 நிமிடங்களிலேயே திரும்பும். மீதமுள்ள நேரம் பூஸ்டரில் ப்ரொப்பல்லண்ட் மற்றும் விண்கலத்தை ஏற்றுவதற்கு ஆகும்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2026-ம் ஆண்டு ஸ்டார் ஷிப் ராக்கெட்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் எலான் மஸ்கின் கனவின் முன்னோட்டமே இந்த சோதனை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.