Rain Alert Driving Tips: மழை வருது; இந்தத் தப்பெல்லாம் பண்ணுவீங்க; ஆனா பண்ணிடாதீங்க
டீ கிளாஸை க்ளோஸ்அப்பில் வைத்து விட்டு, சூடான மிளகாய் பஜ்ஜியின் ஆவி பறப்பதை ஸ்டேட்டஸ் வைப்பதெல்லாம் 90’ஸ் காலத்து ஸ்டைல். இப்படி யோசித்துப் பாருங்கள்; அதே மழையில் உங்கள் கார்/பைக்கை ஸூம் செய்து படம் எடுத்து ‛Thanks to my buddy’ என்று இன்ஸ்டா ஸ்டோரி போட்டுப் பாருங்கள்.
இன்னும் லைக்ஸ் விழும். ஆனால், அதற்கு நிம்மதியான டிரைவிங் வேண்டும். அதற்கு உங்கள் வாகனம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அதற்கு இந்த மழைக்காலத்தில் நீங்கள் சில விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அது என்னனு பார்க்கலாம்!
வெயில் காலம் என்றால் மழைக்குக் கீழ், கட்டடங்களுக்குக் கீழ் வாகனங்களை நிறுத்துவது பாதுகாப்பு. இது மழையில் அப்படியே நேரெதிராக இருக்கும். மழை நேரங்களில் கார்களை முடிந்தவரை மரங்களுக்குக் கீழ் நிறுத்தாதீர்கள். காற்றடித்து கிளைகள் முறிந்து விண்ட்ஷீல்டில் விழுந்தால்… பட்ஜெட் கார்களுக்கே 6,500 ரூபாய் வரை செலவாகும். (என் காருக்கு சைடு ORVM மிரர் போச்சு! 4,000 ரூபாய் செலவு!)
கார் / பைக் ஓட்டிக் கொண்டிருக்கும்போது, ஆக்ஸிலரேட்டரில் இருந்து கால் / கையை எடுப்பதை De-Acceleration என்று சொல்வார்கள். இந்தச் சமாச்சாரம், கெட்டிக் கிடக்கும் தண்ணீரில் ரொம்பத் தப்பு. டி-ஆக்ஸிலரேஷனின்போது தண்ணீர் சட்டென எக்ஸாஸ்ட் வழியாக இன்ஜினுக்குள் Suck செய்யப்படும்.
‛அப்போ சைலன்ஸர் மூழ்குற அளவு தண்ணி கெட்டிக் கிடந்தா எப்படி வண்டி ஓட்டுவது’ என்றால், கிராஜுவலான ஆக்ஸிலரேஷன் தேவை. முதல் கியரைத் தாண்டுவதை நினைத்தே பார்க்கக் கூடாது. கார்களில் க்ளட்ச் பக்கம் காலையும், கியர்லீவர் பக்கம் கையையும் கொண்டு போகவே கூடாது; ஆம், ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுக்கவும் கூடாது. அதேபோல், பிரேக்குக்கும் மூச்!
வெள்ளத்தில் இன்ஜினுக்குள் தண்ணீர் போய், இன்ஜின் வேலை செய்யாததை ‘ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்’ என்று சொல்வோம். (Hydro Static Lock). சைலன்ஸர் வழியாக, பானெட் வழியாக மட்டுமில்லை; ஏர் ஃபில்டர் டக்ட் வழியாகவும் இன்ஜினுக்குள் தண்ணீர் போக வாய்ப்புண்டு.

வெள்ளத்தில் நீங்கள் காரை ஓட்டும்போது மட்டுமில்லை; மற்ற வாகனங்களாலும் ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக் பிரச்னை வரலாம். உதாரணத்துக்கு – எதிரே ஒரு பெரிய லாரி ஒன்று தண்ணீரைத் தெளித்துவிட்டுப் போகும்போது, அது உங்கள் காரின் ஏர்ஃபில்டர் டக்ட்டுக்குள் போனால்… அடுத்த ஒரு நிமிடத்துக்குள் உங்கள் கனெக்ட்டிங் ராடு காலியாகிவிடும். ஏனென்றால், 6,000rpm-களில் வேகமாக இயங்கும் இன்ஜின், அந்தத் தண்ணீரைப் பயங்கர வேகத்தில் Suck செய்தால்.. நீங்கள் ரெவ் செய்யும் பட்சத்தில் கனெக்ட்டிங் ராடு பெண்டு ஆகிவிடும்.
பொதுவாக, ஈரமான நேரங்களில் பிரேக்குகள் வேலை செய்யாது. இதற்கு ஒரு வழி உண்டு. பிரேக்கை பம்ப் செய்து பம்ப் செய்து இயக்கிப் பாருங்கள்; பிரேக் நிச்சயம் வேலை செய்ய வாய்ப்பு இருக்கிறது. இது மலைப்பயணங்களில் மிகவும் கைகொடுக்கும்.
இதே மலைப் பயணங்களில் ஏறும்போது பாதி கிளட்ச்சில் கால் வைத்து ஓட்டுவது மிகவும் தவறு. கிளட்ச் அசெம்பிளியே தேய்ந்து போய், புகை வர வாய்ப்புண்டு. கடுமையான டிராஃபிக் இருந்தால்… சிறிது நேரம் கழித்துக் கிளம்புங்கள். பெரிய செலவைத் தவிர்க்கலாம்.
மழை நேரங்களில் குப்பைத் தொட்டிகள் இருக்கும் இடங்களில் உங்கள் காரை நிச்சயம் பார்க் செய்யாதீர்கள். எலிகள் போன்ற ரோடெண்ட்கள் வாடகையில்லாதாரர்களாகக் குடிபுகுந்து விடுவார்கள். அடிக்கடி காரை திசை மாற்றி பார்க் செய்யுங்கள். இது எலிகளைக் குழப்ப வாய்ப்புண்டு. ஒரு தடவை எலி, தங்களது சிறுநீரையோ மலக்கழிவுகளையோ கழித்துவிட்டால்… ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என்று நம் காருக்குள் ராஜ்ஜியமே நடத்தும். அதனால் காரின் பானெட், டிக்கி, சீட் போன்றவற்றில் எலிப் புழுக்கைகள் இருந்தால் சுத்தம் செய்துவிடுங்கள். 3M போன்ற பிராண்டட் ஆன ரோடெண்ட் ஸ்ப்ரேவை முயற்சி செய்யுங்கள்.

மழை நேரங்களில் ஏசியை ஆன் செய்துவிட்டு, காரை ஐடிலிங்கில் வைத்துவிட்டு, கதவு எல்லாவற்றையும் மூடிவிட்டு உள்ளேயே தூங்குகிறீர்களா? வேண்டாம்; இது பேராபத்து. 2015 வெள்ளத்தில் அப்படி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்தது பேரதிர்ச்சியாக இருக்கிறது. சைலன்ஸர் வழியாக வரும் கார்பன் மோனாக்ஸைடு நச்சுக்காற்று காருக்குள் சுழல ஆரம்பித்து, அவர் மூச்சத் திணறி இறந்திருக்கிறார். அவர் செய்த தவறு இதுதான். குறைந்தபட்சம், அவர் கதவுக் கண்ணாடியைக் கொஞ்சமாவது திறந்திருக்கலாம். அல்லது வெளிக்காற்று உள்ளே வரும்படி ஏர் ரீ–சர்க்குலேஷன் மோடை ஆஃப் செய்திருக்கலாம்.
மழை நேரங்களில் ‘குளுருது’ என்று ஏசி–யை ஆஃப் செய்துவிட்டும் சிலர் பயணிப்பார்கள். இதுவும் தவறு. இதனால் கண்ணாடி மற்றும் விண்ட்ஷீல்டுகளில் ஃபாக் ஏற்பட்டு பாதையே தெரியாமல் போகும். முடிந்தவரை ஆட்டோமேட்டிக் கன்ட்ரோல் பயன்படுத்துங்கள். கம்ப்ரஸருக்கு வேலை மிச்சம்!
ஹைபிரிட் வாகனங்களைப் பொருத்தவரை – அதுவும் எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரி தண்ணீரில் மூழ்காத அளவு பார்த்துக் கொள்வது நல்லது. என்னதான் IP ரேட்டிங் இருந்தாலும்… தண்ணீர் மூழ்கி ஒரு லித்தியம் அயன் பேட்டரி செயலிழந்தால்.. 80,000 ரூபாய்க்கு மேல் செலவு உண்டு. அதேபோல் டச் ஸ்க்ரீனுக்குள் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மழையின்போது திறந்தவெளி சார்ஜிங் மிக மிக ஆபத்து. காரணம் - ப்ளக் பாயின்ட்கள், பேட்டரி சார்ஜிங் போர்ட் போன்றவற்றில் தண்ணீர் புகுந்தால் எந்நேரம் ஷர்க்யூட் ஆகும் என்பது அந்த மழைநீருக்கே வெளிச்சம்! மழை நேரங்களில் சார்ஜ் போடும்போது, சார்ஜிங் போர்ட் மற்றும் சார்ஜர்களில் ஈரப்பதம் இருக்கிறதா என்று ஒரு தடவை சோதனையிட்டுக் கொள்ளுங்கள். நல்ல துணியால் துடைத்துவிட்டு சார்ஜ் ஏற்றுவதையும் பழக்கமாக்கிக் கொள்ளலாம்.
சில எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரியைக் கீழே பொசிஷன் செய்திருப்பார்கள். ஏற்கெனவே இது பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்றாலும், காரின் அண்டர்பாடியில் ஒரு Anti-Rust Coating அடித்தால் நல்லதுதான். இது மெட்டல் பாகங்கள் தண்ணீரில் துருப்பிடிக்காமலும், ரஸ்ட் சேராமலும் கவனித்துக் கொள்ளும். மேலும் அண்டர்பாடி ஷீல்டு போன்றவையும் ஓகேதான்! ஆனால், காரின் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வீட்டில் சார்ஜ் போடுகிறீர்களா? மழைக்காலங்களில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது - சார்ஜிங் கேபிள்கள் கிழிந்திருக்கின்றனவா என்பதைத்தான். சில பேர் கேபிள்கள் பழசாகியும், பழுதடைந்த பின்னும் மாற்றாமல் ஒட்டுப் போட்டுப் பயன்படுத்துவார்கள். இது தற்காலிகத் தீர்வுதான். தரமில்லாத டேப்கள் மூலம் ஒட்டும்போது, இதன் மூலம் மழை நீரில் மின்சாரம் பாயும் ஆபத்துக்கும் வாய்ப்புண்டு.
வாகனத்தின் டயர்கள் சாலையில் படாமல் மழை நீரில் வழுக்கிக் கொண்டு போவதற்கு ‘ஹைட்ரோ ப்ளானிங்’ என்று பெயர். நீங்கள் ஈரமான சாலைகளில் வேகமாகக் கார் ஓட்டினால் உங்களை அறியாமல் கார் வழுக்கிக் கொண்டு போகும். இப்போது கார் எடை குறைந்ததுபோலவும், ஸ்டீயரிங் லைட்டாகவும் இருக்கும்; ஆம், நீங்கள் தண்ணீரில் மிதக்கிறீர்கள் என்று அர்த்தம். இங்கேதான் ஹைட்ரோ ப்ளானிங் விழித்துக் கொள்ளும். வழுக்கும் சாலைகளில் வாகனங்களை மெதுவாக ஓட்டினால், இந்த ஹைட்ரோ ப்ளானிங் பிரச்னையைத் தவிர்த்து விடலாம். நீங்கள் ஃப்ரன்ட் வீல் டிரைவ் காரில் பயணிக்கிறீர்கள் என்றால், எந்தப் பக்கமாக கார் வழுக்கிக் கொண்டு திரும்புகிறதோ, அதே பக்கம் ஸ்டீயரிங்கை லேசாகத் திருப்பி ஆக்ஸிலரேட்டரை மிதமாக ரிலீஸ் செய்ய வேண்டும். இதுவே ரியர் வீல் டிரைவ் கார் என்றால், வழுக்கும் திசைக்கு எதிர்ப்பக்கமாக ஸ்டீயரிங்கை லேசாகத் திருப்பி மிதமான ஆக்ஸிலரேஷன் கொடுக்க வேண்டும். ஹைட்ரோ ப்ளானிங்கில் இருந்து தப்பித்து விடலாம்.

மழைக்காலங்களில் கார் ஓட்டும்போது, உங்கள் காரின் Cruise Control வசதி இருந்தால், தயவுசெய்து ஆஃப் செய்துவிடுங்கள். காரணம் - சாலையில் மழையினால் தேங்கிய நீரின் அளவை உங்கள் காரின் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் சென்சார் செய்யாது. தண்ணீரின் அளவு ஒவ்வொரு ஏரியாவுக்கும் வேறுபடும் இல்லையா? இப்போது டிரைவர் - அதாவது, நீங்கள்தான் பாஸ் கடவுள்! மேனுவல் கியரிங்கும், ஆக்ஸிலரேஷனும்தான் இந்த நேரத்தில் ஆபத்பாந்தவன்!
மழையில் பார்க்கிங் லைட்ஸ் (Hazard Lights) போட்டபடி பயணிக்கிறீங்களா? இது தப்பு. கார் நின்று கொண்டிருக்கும்போது (Stationary Vehicle), ‛ஏதோ ஆபத்தில் இருக்கிறேன்’ என்று அலெர்ட் செய்யத்தான் ஹஸார்ட் லைட்டுகள். வாகனம் Motion-ல் - அதாவது நகர்ந்து கொண்டிருக்கும்போது இதைப் போடுவது ஆபத்து. மற்றவர்கள், கார் நின்றுதான் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வாய்ப்புண்டு. நகர்ந்து கொண்டிருக்கும் கார்களின் ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், பிரேக் எமர்ஜென்ஸி லைட்கள் போன்றவற்றை வைத்து மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். அதனால், ஹஸார்டு லைட் வேண்டாம்!
மழை வெள்ளத்தில் உங்கள் கார் மூழ்கிவிட்டால்… மறந்துபோய்க்கூட ஸ்டார்ட் செய்துவிடாதீர்கள். ஒரு தடவை க்ராங்க் ஆகிவிட்டாலும், கனெக்ட்டிங் ராடு உடைய வாய்ப்புண்டு. கடுமையான மழை நேரங்களில் கார் ஓட்டுகிறீர்கள்; திடீரென உங்கள் கார் ஆஃப் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். எதனால் ஆஃப் ஆனது என்று தெரிந்துவிட்டால் ஓகே! சம்பந்தமே இல்லாமல் இன்ஜின் ஆஃப் ஆனால்… அதை ஸ்டார்ட் செய்யக்கூட முயற்சிக்காதீர்கள். டோ செய்து சர்வீஸ் சென்டருக்கு விடுவதுதான் நல்லது.

இதுதான் முக்கியமான விஷயம் – இன்ஷூரன்ஸ் பற்றிப் பலர் அக்கறை எடுப்பதே இல்லை. ‘ப்ரீமியம் குறையுது’ என்பதற்காக சிலர் சுமாரான பாலிஸியை எடுத்திருப்பார்கள். பொதுவான இன்ஷூரன்ஸில் இன்ஜினுக்கு கவரேஜ் கிடைக்காது. தண்ணிரீல் மூழ்கிய காரை நீங்கள் ஸ்டார்ட் செய்தாலும், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்ய முடியாது. இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, `Engine Protect’ எனும் Add-on பாலிஸியைப் பற்றி விசாரியுங்கள். அப்படியே Return to Invoice ஆப்ஷனையும் மறக்காதீர்கள். எக்ஸ்ட்ரா ப்ரீமியமாக இருந்தாலும், இது எந்த நேரத்திலும் கைகொடுக்கும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


