Girls Only: கணவருக்கு விந்து முந்துதல்; மனைவி என்ன செய்ய வேண்டும்? | காமத்துக்கு மரியாதை - 208
கணவருக்கு விந்து முந்துதல் பிரச்னை இருந்தால், அதை மனைவி எப்படி தெரிந்து கொள்வது, அதை பாசிட்டிவாக எப்படி ஹேண்டில் செய்வது என்று விளக்குகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
"உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், கணவருக்கு இந்தப் பிரச்னை இருப்பதை பெரும்பாலான பெண்களால் அவ்வளவு சுலபமாக கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், திருமணமான புதிதில், தொடுதல்கள் மூலமே பலமுறை ஆர்கஸம் அடைந்து விடுவார்கள் பெண்கள். தவிர, கணவருக்கு இந்த சிக்கல் இருப்பது தெரிவதற்கு முன்னரே பல பெண்கள் கர்ப்பமாகி விடுவார்கள். அதன்பிறகு, அது தொடர்பான உடல் மாறுதல்கள், குழந்தைப்பிறப்பு, குழந்தை வளர்ப்பு என்று ஒரு சில வருடங்கள் ஓடிவிடும்.
இந்த நேரத்தில் திருமணமான புதிதில் நிகழ்ந்ததுபோல அடிக்கடி தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியாது. எப்போதாவதுதான் நிகழும். அதுவும் குழந்தை விழித்துக் கொள்ளுமோ என்கிற அச்சத்தில் அவசர அவசரமாகவே நிகழும். அதனால், இந்த நேரத்திலும் கணவருக்கு விந்து முந்துதல் இருப்பதை மனைவியால் கண்டுபிடிக்க முடியாது. அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் இரண்டாவது முறை கருத்தரித்து விட்டால், மறுபடியும் அதே உடல் மாறுதல்கள், குழந்தைப்பிறப்பு மற்றும் வளர்ப்பு என்று வருடங்கள் ஓடிவிடும். இந்த ஓட்டங்கள் எல்லாம் கொஞ்சம் மெதுவாகும் போது, திருமணமாகி ஏழு அல்லது எட்டு வருடங்களாவது ஆகிவிடும். இதன் பிறகு தான், ’நம்முடைய தாம்பத்திய வாழ்க்கையில் ஏதோ சரியில்லையே’ என்கிற உணர்வே பெண்களுக்கு வரும். இதுதான் பெரும்பான்மையாக நடப்பது. திருமணமான ஆரம்ப நாள்களிலேயே, கணவருக்கு விந்து முந்துதல் இருப்பதை மனைவி கண்டுபிடிப்பது மிகவும் குறைவாகவே நடக்கிறது.
இந்த இடத்தில் ’விந்து முந்துதல் பிரச்னை இருக்கிற ஆண்களுக்கு குழந்தை பிறக்குமா’ என்கிற கேள்வி சிலருக்கு எழலாம். விந்து முந்துதலில் இரண்டு வகைகள் இருக்கின்றன. முதல் வகையில், சம்பந்தப்பட்ட ஆண்களால் தாம்பத்திய உறவின்போது முழுமையாக பெனிட்ரேட் செய்ய முடியும். அதனால், இவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும். அதில் எந்த சிக்கலும் வராது. ஆனால், விந்தணுக்கள் இரண்டு நிமிடங்களிலேயே வெளியேறிவிடும். இதில் கணவருக்கு ஆர்கசம் கிடைத்து விடும். மனைவிக்குத்தான் கிடைக்காது. இந்த வகையைத்தான் பல வருடங்களானாலும் மனைவியால் கண்டுபிடிக்க முடியாது.
இரண்டாவது வகையில் பெனிட்ரேட் செய்ய ஆரம்பிக்கும்போதே, விந்தணுக்கள் வெளியே வந்துவிடும். இவர்களுடைய பிரச்னைதான் திருமணமான புதிதிலேயே தெரிந்துவிடும்.

இதில் முதல் வகைதான் பல ஆண்களுக்கும் இருப்பது. இவர்களுடைய மனைவிகள், உறவு நிகழ்ந்த அடுத்த நாள் கை கால் எல்லாம் வலிக்குது; இடுப்பு வலிக்குது’ என்று புலம்புவார்கள். ஆர்கசத்துடன் கூடிய முழுமையான தாம்பத்திய உறவு நிகழும்போது தான், பெண்களுக்கு இடுப்புப் பகுதியில் ரிலாக்சேஷன் கிடைக்கும். அது முழுமை அடையாதபோது இடுப்புப் பகுதியில் ஓர் இறுக்கம் இருக்கும். இடுப்பு வலிக்குது, உடம்பெல்லாம் வலிக்குது என்று அவர்கள் சொல்வதற்கு காரணம் இதுதான். தவிர, இவர்களுக்கு உறவு நிகழ்ந்த பிறகு தூக்கமும் வராது. அதனால், மறுநாள் காலையில் சோர்வாக உணர்வார்கள். தாம்பத்திய உறவில் ஆர்கசம் அடையாத நிலையில் இந்தப் பிரச்னைகள் எல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு வரும். ஆனால், இதனால்தான் தங்களுக்கு இப்படி உடம்பெல்லாம் வலிக்கிறது என்பது பெண்களுக்கு தெரிவதே இல்லை. இதை மருத்துவர்கள் நாங்கள் kkk syndrome என்று குறிப்பிடுவோம்.
பல பெண்கள், ’தலை வலிக்குது இன்னைக்கு வேணாம், காலையில சீக்கிரம் எந்திரிக்கணும் இன்னைக்கு வேணாம்’ என்று உறவைத் தவிர்க்க பார்ப்பார்கள். உண்மை என்னவென்று தெரியாத போதும், அவர்கள் அறியாமலே செய்கிற விஷயம் இது. உங்களுக்கு இப்படியெல்லாம் இருக்கிறது என்றால், நீங்கள் ஆர்கசம் அடையவில்லை என்று அர்த்தம். உங்கள் கணவருக்கு விந்து முந்துதல் பிரச்னை இருக்கலாம் என்று அர்த்தம். பெரும்பாலும் இதை தங்களுடைய மத்திம வயதில் தான் பெண்களால் கண்டுபிடிக்க முடிகிறது. இருந்தாலும் காலம் கடந்து விடவில்லை. மருத்துவரை சந்தித்து சில தெரபிகளை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்னையிலிருந்து கணவரை முழுமையாக சரி செய்ய முடியும். நீங்களும் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

மருத்துவரை சந்திக்க பல கணவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய ஈகோ இதை ஏற்றுக் கொள்ளாது. இப்படி இருக்கும்பட்சத்தில், நீங்களே இது தொடர்பான மருத்துவ புத்தகங்களை வாசித்தோ அல்லது இதுபோன்ற கட்டுரைகளை வாசித்தோ அல்லது பாலியல் மருத்துவர்களின் வீடியோக்களை பார்த்தோ அதில் இருக்கிறபடி தீர்வுகளைத் தேடலாம். உதாரணத்துக்கு ஒரு தீர்வை இங்கே சொல்கிறேன். ’நீங்க சரியில்ல, நீங்க செய்றது போதலை’ என்று கணவரை நோக்கி குற்றம் சாட்டுவதுபோல சொல்லாமல், ’எனக்கு தேவை, எனக்கு நீங்க இப்படி செய்றது பிடிச்சிருக்கு’ என்று ’I sentence’ ஆக சொன்னால், கணவரும் காயப்பட மாட்டார். உங்களுக்கும் தீர்வு கிடைக்கும். மற்றபடி, இதை குடும்பத்தாரிடமோ நண்பர்களிடமோ சொன்னால் பெரும்பாலும் பிரச்னை பெரிதாக மட்டுமே செய்யும்" என்கிறார் டாக்டர் காமராஜ்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


