``ஆதாரங்களை எலி தின்றுவிட்டது - காவல்துறை சொன்ன பதில்... உயர் நீதிமன்றம் அதிரடி..!

வழக்கு சம்மந்தமான ஆதாரங்களை எலிகள் அழித்துவிட்டன என்ற போலீசாரின் கூற்றை கடுமையாக எதிர்த்துள்ளது மத்திய பிரதேச உயர் நீதிமன்றம்.

மத்திய பிரதேசதம் இந்தூரை சேர்ந்தவர்கள் அன்சார் அகமது - தஹிரா தம்பதி. இவர்களுக்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு சண்டை ஏற்பட்டுள்ளது. தஹிராவை அன்சார் அகமது கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தஹிராவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

இதனையடுத்து அன்சாரை போலீசார் கைது செய்தனர். தற்போது, அன்சார் ஜாமீன் கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

எலிகள் கடித்து அழிப்பு!

இந்த மனுவின் விசாரணை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் நடந்துள்ளது. வழக்கில் "தஹிரா கொலை வழக்கு சம்மந்தமான சான்றுகள் ஒரு பிளாஸ்டிக் கேனில் வைக்கப்பட்டிருந்தது. மழையின் போது அந்த ஆதாரங்களை எலிகள் கடித்து தின்று அழித்துவிட்டன. அதனால் இனி அவைகளை பயன்படுத்த முடியாது" என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, "இந்த வழக்கின் ஆதாரத்தை எலிகள் கடித்து அழித்துவிட்டன என்று கூறுவது கண்டனத்துக்குரியது. இது மாநிலத்தில் இருக்கும் காவல் நிலையங்களின் சேமிப்பு அறைகளின் நிலையை காட்டுகிறது. மாநிலத்தில் இருக்கும் அனைத்து சேமிப்பு அறைகளையும் காவல் துறை தலைவர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் புதிய வழக்குகள் குறித்த தகவல்களை சேமிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கு வலைதள லிங்க் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.