`நான் ஏன் வாகனங்களை வெறுக்கிறேன்? - குடும்ப தலைவி பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

என் குடும்பத்தில் நான்கு சக்கர வாகனம் என்ற ஒன்று வந்தபின், பொது போக்குவரத்து வாகனங்களான ரயில், பேருந்து ஆகியவற்றை உபயோகிப்பதென்பது குறைந்து போனது.

என்‌ குழந்தைப் பருவத்தில் அப்போது என் குடும்பம் இருந்த நிலையில் வீட்டில் இருந்த குழந்தைகளுக்கு நடை வண்டி வாங்கித் தருகிற கான்செப்ட் இருந்ததாகத் தெரியவில்லை. பழைய புகைப்படங்களில் நடை வண்டி ஒரு மூலையில் கூட தென்படவில்லை. 

எல்லாக் குழந்தைகளும் சுவற்றைப் பிடித்தபடியே நடக்கக் கற்றுக் கொண்டு விட்டோமோ என்னவோ..‌யார் கண்டது.. மூன்று சக்கர சைக்கிள் கூட இருந்ததாக நினைவில்லை..

பத்து பன்னிரண்டு வயது வரை எந்த ஒரு வாகனமும் வீட்டிற்குள் நுழையவில்லை. பிறகு எல்லோருக்கும் சேர்த்து ஒரே ஒரு சைக்கிள்.  அந்த ஒரே ஒரு சைக்கிள் ஐந்தாறு பேருக்கு பொதுவானது.

அது எப்போது ஃப்ரீயாக இருக்கிறதோ, அப்போதுதான் எடுத்து ஓட்ட முடியும். அதை ஓட்டிக்கொண்டிருந்த போதே, டிவிஎஸ் 50 வீட்டிற்கு வந்தது.‌

சர்சர்சர்ரென்று அதை காலியான தெருக்களில் ஓட்டியது இன்றும் நினைவில் இருக்கின்றது. பெட்ரோல் இல்லாத நாட்களில் மீண்டும் சைக்கிள்‌ தான்.

இதற்கு நடுவில் கல்லூரி செல்ல ரயிலும், பேருந்துமே கைக்கொடுத்தன. பொது வாகனங்களில் உட்கார இடம் கிடைக்கா விட்டாலும் இளம் வயதில் அது ஒரு‌ குறையாக இருந்ததில்லை. வெயில் , மழை , குளிர் என‌ எந்த வானிலையிலும் அன்றைய காலகட்டத்தில் ரயில் மற்றும் பேருந்து பயணங்கள் இனிக்கவே செய்தன..

திருமணத்திற்குப் பின், என் குழந்தைகளை பள்ளியில் ட்ராப் , பிக்கப் செய்ய மீண்டும் ஒரு டூ- வீலர் என் வாழ்க்கையில் வந்தது. பத்து பதினைந்து வருடத்திற்கும் மேலாக ட்ரைவர் வேலை செய்ததில், அலுப்பு ஏற்பட்டது. இனிமேல் வண்டி ஓட்டப் போவதில்லை என சபதமெடுத்து வண்டியை விற்று விட்டேன். 

இதற்கு நடுவில் குடும்பத்தோடு எங்கு சென்றாலும் கார்‌ ட்ரைவ்  என்றாகிவிட்டது.

முதலில் வாங்கியது சிறிய கார் என்றாலும் , குழந்தைகளும் சிறியவர்களாக  இருந்ததாலும், நாம் இரண்டு , நாம் பெற்றது இரண்டு, நம்மை பெற்றது இரண்டு என ஆறு பேர் சுலபமாக பயணிக்க முடிந்தது.

குழந்தைகள் கொஞ்சம் வளர‌வளர பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து கொஞ்சம் பெரிய கார் வந்தது. அதுவும் சில சமயங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக நீண்டதூர பயணங்களில் கொஞ்சம் சிரமத்தை வரவழைத்தது. அதற்காக இன்னொரு காரா வாங்கமுடியும் ? என‌ மனதை சமாதானப்படுத்தி இருக்கும் இருக்கையிலேயே இப்படி திரும்பி அப்படி திரும்பி என பயணங்கள் பழகியது..

கார்

பிறகு மாமனரின்‌ மரணத்திற்குப் பிறகு ஆறு பேர்‌ என்பது ஐந்து எனச் சுருங்கியது. 

ஆனாலும் இடப்பற்றாக்குறை இருப்பது போலவே ஓர் உணர்வு எப்போதும். இதே கார்ல ஆறு பேர் போனோமே!! என நினைத்தாலும் நீண்ட பயணங்களில்  , பின்‌ சீட்டில் மூன்று நபர்கள் கொஞ்சம் கஷ்டம் தான்..

இதெல்லாம் ஒரு புறம் இருக்க.. காருக்குள்‌ நடக்கும் அட்ராசிட்டிஸ் தான்‌ கடுப்பேற்றும்.

பாட்டுக் கேட்கிறோம் என்ற‌ பேர்வழியில், இளசுகள் சில பாடல்களை சத்தமாக  போட்டு விடுவார்கள். அதில் சிலது நமக்கு ஓகே..‌சிலது நாட் ஓகே ரகம்.‌ எனக்கோ மோஷன் சிக்னஸ் பிரச்சினை.

தலைவலி ஆரம்பித்து எப்போது வேண்டுமானாலும் காரை நிறுத்தச் சொல்லிவிடுவேன். நான்‌ சற்று இருமினாலே, எல்லோரும்‌ அலர்ட ஆகி விடுவார்கள். வண்டி சாலையின் இடது புறமாக நகர்ந்து ஆளில்லா ஏரியாவில் நின்றுவிடும். நான்‌ சுதாரித்துக் கொண்டு, ஒண்ணும் இல்ல, வண்டி போலாம் ன்னு கூறியபின்‌ தான்‌ கார் ஸ்டார்ட் ஆகும்.

மீண்டும் பாடல்கள்..‌ யார் வண்டி ஓட்டுகிறாரோ, அவருக்குப் பிடித்த பாடல்கள் வரும்.. அந்த பாடல்கள் பிடிக்காத மற்றவர்கள் இயர்- ஃபோன் மாட்டிக் கொண்டு அவர்களுக்குப் பிடித்த இசையில் மூழ்கிவிடுவார்கள். இதில் எனக்கு மட்டும் இயர்-ஃபோன் அலர்ஜி..வேறு‌வழியில்லாமல் ஸ்பீக்கரில் வரும் பாடல்களை கேட்டுக் கொண்டே வரவேண்டும்.

என் மாமியாருக்கு இயர்-ஃபோன் அலுப்பு ஏற்பட்டால் , கைபேசியில் டைரக்டாக எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்து விடுவார்.. முன்பக்க சீட்டில், ""என்‌ பேரு மீனா குமாரி" என் பேர் என்‌ பேர்...என்..‌என்..‌என‌ பாடல் அலறும்.. பின் சீட்டில் என்‌ மாமியாரின் கைபேசியில்...ஈஈ ரோஜூ..‌நேனு எவரணி நீக்கு ச்சூப்பிஸ்த்தா,,, என‌ தெலுங்கில் ஒருவர்‌ சீரியலில் சீறிக்கொண்டிருப்பார்.

என் கணவரின் கையில் ஸ்டியரிங் கிடைத்தால்., ஏதாவது ஒரு சினிமாவின் ஒலி வடிவம் வந்து கொண்டிருக்கும். ட்யூஷும் ட்யூஷும் சினிமா என்றால் என்‌ தலை பார்ட் பார்ட் ஆக வெடித்துச் சிதறும்..

இந்த சப்தங்களின் நடுவே காரில் ஒரு சடன்ன்‌ ப்ரேக் விழ, என் நிலைமையை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

கொஞ்மாச்சும் வெளிக்காத்து வரட்டும், கதவ தொறந்து விடுங்கன்னு கூறினாலும், கார்க் குள்ள டஸ்ட் வரும் என்று‌ கதவை திறக்க விட மாட்டார்கள் யாரும்..

சிலநேரங்களில் தூங்கி வழிந்தும், சில நேரங்களில் தூங்குவது போல் பாவனை‌ செய்தும் பயணங்களை கடந்து கொண்டிருக்கின்றேன்., வேறு வழியில்லாமல்..

நம்ம வீட்டு கார், நம்ம வண்டி சொகுசான‌ பயணம் என எல்லோருக்கும் தோன்றினாலும், உண்மையில் அது எனக்கு மிகுந்த சோர்வை அளிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. முன்பெல்லாம் ரயில் பிரயாணங்கள் பிடித்திருந்தன. இப்போது அது கூட பிடிப்பதில்லை..

காரில் தலைவலியோடு நெடுஞ்சாலைகளில் பயணித்த பின் , நாம் சென்றடைய வேண்டிய ஊர் வரும் போது , வண்டியின் வேகம் குறைந்து , போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளும் போது, எனக்குத் தோன்றும் ..தேவர் மகனில் கமல் கூறுவது போல்.. என்னைய விட்ருங்கய்யா.. நான் நடந்தே வந்துக்கிறேன் எனக்கூற வேண்டுமென...

இப்போது எனக்கு சைக்கிள், டூவீலர், கார், பஸ், ரயில், விமானம் எதுவுமே பிடிப்பதில்லை.

என்‌ உயரத்திற்கேற்றபடி ஒரு‌ பறக்கும்  குதிரை,.. ஏறி அமர்ந்தவுடன் பறந்து நான் சென்றடைய வேண்டிய இடத்திற்கு அது என்னை ஸூபர் ஃபாஸ்ட வேகத்தில் சேர்க்குமா?? இந்த வாகன‌ யோகம் அமையுமா??????

அட்லீஸ்ட்.. ஹாலிவுட் சினிமாவில் வரும் சூனியக்காரியின் பறக்கும் ஒட்டடை குச்சி..‌. அதற்காவது வாய்ப்பிருக்கிறதா????

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.