பாலய்யா வஸ்தாவய்யா 1: `மன தேவுடு மல்லி புட்டாடு - அப்பாவுக்கு தம்பி;அண்ணனுக்கு மகனாக நடித்த பாலய்யா

மலை... ரயில்... யானை வரிசையில் பாலகிருஷ்ணாவையும் வைத்து அழகு பார்ப்பது ஆந்திர மனவாடுகளின் வாழ்வியல் நெறிமுறை!

அந்த அளவுக்கு அவர்கள் வாழ்வோடும் உணர்வோடும் நீக்கமற கலந்திருக்கிறார் மாஸ் நடிகரும், அதிரடி அரசியல்வாதியுமான நந்தமூரி பாலகிருஷ்ணா... ரசிகர்களுக்கு செல்லமாய் எப்போதும் அவர் `பாலய்யா என்ற NBK!

50 வருடங்களுக்கு முன் ஆந்திர ஆளுமை என்.டி.ராமாராவின் புதல்வன் என்ற கெத்துப் பின்னணியில் சற்றே வளர்ந்து, `குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவிற்குள் நுழைந்து இன்று டோலிவுட்டின் அறிவிக்கப்படாத `தேவராவாக ஜொலிக்கிறார் பாலய்யா.

Balaiya

`கோபக்கார கோங்குரா, டெரர் டெர்மினேட்டர், `கெத்து பாலிட்டிசியன் என இவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் கடந்து தவிர்க்க முடியாத ஆளுமையாக ஆந்திரா-தெலங்கானா தாண்டியும் வளர்ந்திருக்கிறார் பாலய்யா. இவர் மீது வெறித்தனமான அன்பைப் பொழிகிறது பெருங்கூட்டம். கடல் கடந்தும் இவருக்கென தனி கொலவெறி ரசிகர்கள் இருக்கிறார்கள். பாலய்யாவின் படங்கள் ரிலீஸானால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்ய அவர்கள் ஒன்று சேர்கிறார்கள்.

பால் வடியும் பாலகன் பாலகிருஷ்ணா, மாஸ் ஹீரோ பாலய்யாவாக உருவான கதை இது... ஜெய் பாலய்யா... ஜெய் ஜெய் பாலய்யா!

பார்ட் 1:

லேபாக்‌ஷி உத்சவலு... ஆந்திராவில் அனந்தப்பூர் மாவட்டத்தில் இருக்கும் இந்துப்புரத்தில் (இந்துப்பூர்) ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. மார்ச் மாதத்தில் இரு தினங்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் அந்நாளின் சூப்பர் ஸ்டாருமான என்.டி.ஆருக்கு ரொம்பவே ஃபேவரைட். ஒருவகையில் லேபாக்‌ஷி திருவிழாவை இந்த அளவுக்கு இந்துப்பூர் மக்கள் கொண்டாடக் காரணம் மா தேவுடு என்று கடவுளாக கொண்டாடப்பட்ட என்.டி.ஆர் தான்! மூன்று முறை முதல்வர் நாற்காலியில் அவரை உட்கார வைத்து அழகு பார்த்தவர்கள் இத்தொகுதி மக்கள். அவரைப்போலவே உருவ ஒற்றுமை கொண்ட பாலகிருஷ்ணாவையும் அவர்கள் கைவிடவில்லை.

NT Rama Rao

2014, 2019 என இருமுறை இந்துப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக பாலகிருஷ்ணாவையும் உட்காரவைத்து அழகு பார்த்திருக்கிறார்கள். என்.டி.ஆர் இந்துப்பூரில் லேபாக்‌ஷி திருவிழா கொண்டாடப்படும் 2 நாளும் தங்கி கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அந்தத் திருவிழா நாட்களில் என்.டி.ஆர் போலவே பாலகிருஷ்ணாவையும் லேபாக்‌ஷி திருவிழாவில் நீங்கள் பார்க்கலாம். அவரைப்போலவே கிருஷ்ணர் வேடம், ஜடாயு வேடம் போட்டு நாடகம் நடித்து, நடனம் ஆடி, கோவிலில் உளவாரப் பணிகள் செய்து மக்களை மகிழ்விப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இரண்டு நாளும் சும்மா பெயரளவுக்கு எல்லாம் இல்லை... நிஜமான அன்போடும், ஒரு குழந்தையின் குதூகலத்தோடும் அவரை அங்கு பார்க்கலாம்.

ஜடாயு திருவிழா என்று இத்திருவிழாவை உள்ளூர் மக்கள் அழைத்து விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். ராமாயணத்தில் சீதையை ராவணனிடமிருந்து மீட்க தன் இன்னுயிரை நீத்த ஜடாயு உயிர்நீத்த இடம் என மக்கள் வணங்குகிறார்கள். அங்கிருக்கும் சிவனின் கோப அவதாரமான வீரபத்திர சுவாமி கோவிலில் உளவாரப் பணிகள் செய்வதற்காகவே இந்தக் கிராமத்துக்கு அடிக்கடி வந்து என்.டி.ஆரின் வாரிசாக தன்னை ஆணித்தரமாக மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார் பாலகிருஷ்ணா. திருவிழா நாட்களில் இந்துப்பூருக்கு தன் சொந்தச் செலவில் அத்தனை நல்ல விஷயங்களைப் பண்ணுகிறார் பாலய்யா. பிரமாண்ட பந்தலில் நாள் முழுக்க அன்னதானம், இன்னொரு பக்கம் கிராம மக்களுக்கு மளிகைப் பொருட்கள், தட்டுமுட்டு சாமான்கள், உதவித்தொகை வழங்குவது என அமர்க்களப்படுத்துகிறார்.

Balaiyaa

பல சினிமா பிரபலங்களை ஊருக்கு அழைத்து வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி குஷிப்படுத்துகிறார். மன தேவுடு மல்லி புட்டாடு! (எங்கள் கடவுள் திரும்பி வந்துவிட்டார்!) என பாலய்யாவைப் பார்த்து சிலிர்த்துக்கிடக்கிறார்கள் மக்கள். இப்படி பாலகிருஷ்ணா தன்னை என்.டி.ஆரின் அரசியல் வாரிசாக நினைக்க வைக்க முயற்சி செய்தாலும் ஏன் அவரால் அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை..? ஏன் அவரால் ஒரு பெரும் அரசியல் ஆளுமையாக உருவாக முடியவில்லை..? இது எல்லாவற்றுக்கும் விடை காணும் முன் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் Born with silver spoon அல்ல...Golden spoon! பாலய்யா தன்னை தன் அப்பாவின் கலை வாரிசாகவும் அரசியல் வாரிசாகவும் பாவித்துக்கொண்டாலும் என்.டி.ஆரைப் பொறுத்தவரை தன் ஆறாவது மகன் பாலகிருஷ்ணாவை அரசியல்வாதியாக்கிட ஒருநாளும் ஆசைப்பட்டதே இல்லை. அவருக்கு பாலய்யாவைத் தேர்ந்த மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்பதே பெருங்கனவாக இருந்தது. ஸ்டெதெஸ்கோப் ஒன்றை ஒரு பிறந்தநாளில் பரிசளித்தார். 12 குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட என்.டி.ஆர் தம்பதிக்கு கல்வியில் பேர் சொல்ல ஒரு பிள்ளையை உருவாக்க ஆசை.

``மகனே பாலகிருஷ்ணா! குடும்பத்தில் ஒரு டாக்டர் இருந்தா நல்லா இருக்கும். நீ படிக்க மட்டும் செய். நான் உனக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தர்றேன்! என்று சென்னையில் பள்ளிக்கல்வியைப் படித்துக் கொண்டிருந்தபோது சொல்லியிருந்தார் தந்தை என்.டி.ஆர்.

ஆனால், ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியான பாலய்யாவுக்கு படிப்பென்றால் பாகற்காய்... அதிலும் இங்கிலீஷ் என்றாலே இனிமா. (Dont Trouble the trouble) இதனாலேயே போக்குக் காட்டிவிட்டு விளையாடப் போய்விடுவார். தீராத விளையாட்டுப்பிள்ளையாய் இருந்த பாலய்யாவை படிக்க வைக்க குடும்பமே ரொம்ப சிரமப்பட்டது. அப்பாவைத் தவிர வீட்டில் இருக்கும் யாருக்கும் பயப்படாத ஆளாய் வளர்ந்தவர் பாலய்யா. அப்பாவிடம் அடி வாங்காமல் தப்பித்துவிட எளிமையான வழி ஒன்றே ஒன்றுதான். அவர் வீட்டில் இருக்கும்போது நல்ல பிள்ளையாய் புத்தகத்தை எடுத்து படிப்பது போல பாவ்லா காட்டுவது! மகனின் இந்த சேட்டை தெரிந்ததும் ஒருமுறை கோபத்தில் கடிந்து கொண்டார் என்.டி.ஆர்.

Balaiyaa

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கிற்கு தனது நான்காவது மகனான ஹரிகிருஷ்ணாவை மட்டும் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார் என்.டி.ஆர். ஏனென்றால் ஹரி தான் அப்பாவை சின்னவயதிலேயே இமிட்டேட் செய்வதில் கில்லாடியாக இருந்தார். தந்தை வீட்டில் இல்லாதபோது அவரைப்போலவே உறவினர்களிடம் நடித்துக்காட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தவர் ஹரிகிருஷ்ணா. அதை ஒருநாள் எதேச்சையாக பார்த்துவிட்டு, சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடினார் என்.டி.ஆர். தன்னுடன் சேர்ந்து நடிக்க வைத்து, பின்னாளில் தன்னைப்போலவே ஹீரோவாக அவரை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆனால், விதி வலியது தானே..?

இவன் தான் நம் கலை வாரிசு! என அவர் பாலய்யாவை அங்கீகரித்தது எதிர்பாராத ட்விஸ்ட் தான். வீட்டில் அப்போது பாலய்யாவுக்கும் அவரது அக்காவுக்கும் நடந்த ஒரு விளையாட்டுப் போட்டி ஒன்றில் பெண் குழந்தை போல உடையணிந்து வந்து, எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தார் பாலய்யா. சாத்வீகமான பால் வடியும் முகம். கிட்டத்தட்ட என்.டி.ஆர் குட்டிப்பையனாக இருந்தபோது எப்படி இருந்தாரோ அதேபோன்ற ஒரு முகம். பள்ளி விழா ஒன்றில் தந்தை என்.டி.ஆரைப்போலவே கிருஷ்ணர் வேடமிட்டு நடனமாடியதைப் பார்த்து என்.டி.ஆர் மனம் மாறினார். உறவுக்காரர் ஒருவர் அவரிடம்,

Balaiyaa

`பாலகிருஷ்ணா அப்படியே உன்னைப்போலவே இருக்கிறான்! கிருஷ்ணர் வேடமிட்டால் இருவருக்கும் வித்தியாசம் தெரியாது! என்று போகிறபோக்கில் சொல்லியிருக்கிறார். ஒரு குழந்தையை மட்டும் தான் நடிக்க வைக்க வேண்டுமா..? பாலகிருஷ்ணாவையும் நடிக்க வைக்கலாமே..? அவனும் கிருஷ்ணர் வேஷம் கட்டினால் உங்களைப் போலவே இருக்கிறான்! என்று என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் அம்மாளும் சொல்ல அடிமேல் அடி அடித்து அம்மிக்கல்லாய் இருந்த என்.டி.ஆரின் மனம் கொஞ்சம் இளகியது.

தன்னை கிருஷ்ணரின் அம்சமாக மக்கள் பார்ப்பதை நன்கறிந்தவர் என்.டி.ஆர். அதனால் தான் கடைசி காலம் வரை பக்திப் படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். மகனிடம் இருக்கும் துறுதுறு துடுக்குத்தனம் ஒத்துழைக்கும் என்று உறுதியாக பசவதாரகம் அம்மாள் நம்பினார். தன் கணவரிடம் அவ்வப்போது பாலகிருஷ்ணாவின் நடிப்புத் திறமை பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். மனைவி சொல் மிக்க மந்திரமில்லை தானே? இதனாலேயே நாட்கள் செல்லச் செல்ல தான் பார்த்துப் பார்த்து உருவாக்கிய ஹைதராபாத் நாச்சரத்தில் இருக்கும் ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோவுக்கு ஹரிகிருஷ்ணாவோடு பாலகிருஷ்ணாவையும் அழைத்துச் சென்றார். விடுமுறை நாட்களில் விளையாடிக் கழிக்கும் அளவுக்கு பாலகிருஷ்ணா அப்பாவின் செல்லப் பிள்ளையாய் மாறிப்போனார்.

Balaiyaa

ஸ்டூடியோ உருவாக்கும் முன்பே 1974-ம் ஆண்டு தான் இயக்கிய தாத்தம்மா காலா என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் பாலகிருஷ்ணாவை நடிக்கவைத்தார் என்.டி.ஆர். பாதி கருப்பு வெள்ளையும் மீதி ஈஸ்ட்மென் கலரிலும் வந்த அந்தப் படத்தில் நடிக்கும்போது பாலகிருஷ்ணாவுக்கு வயது வெறும் 14. கதைப்படி பிரிந்த குடும்பத்தைச் சேர்த்து வைக்கும் சுட்டிப்பையன் கேரக்டர். ரெட்டை வேடமிட்டு என்.டி.ஆர் அதில் நடித்திருந்தார். அவருக்கு மகனாக பிரமாதமாக நடித்து எல்லோரையும் கவனிக்க வைத்தார் பாலகிருஷ்ணா.

அடுத்த ஆண்டே அண்ணாதம்முல பந்தம் என்ற படம் ரிலீஸ் ஆகியது. தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த நாளை நமதே படத்தின் கதைதான். இரண்டுமே தர்மேந்திரா நடிப்பில் இந்தியில் ஹிட்டடித்த யாதோன் கி பாரத் படத்தின் ரீமேக் தான். அப்பா என்.டி.ஆருக்கு தம்பியாக இந்தப் படத்தில் நடித்து அண்ணய்யா அண்ணய்யா என ஏகத்துக்கும் உருகியிருந்தார் பாலகிருஷ்ணா. அந்த நாட்களில் இன்னொரு வேடிக்கையான சம்பவம் என்னவென்றால் அண்ணன் ஹரி கிருஷ்ணா ஹீரோவாக நடித்த படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார்.

Balaiyaa

இப்படி அண்ணனுக்கு மகனாகவும் அப்பாவுக்கு தம்பியாகவும் நடித்து சினிமாவில் தன் இருப்பை மெல்ல பதிய வைத்தார் பாலகிருஷ்ணா. தந்தை மனதில் நச்சென நங்கூரமிட்டு அமர்ந்தார். ஆனாலும், என்.டி.ஆரால் மகனைப் பற்றிய கனவை எளிதில் விட்டுவிட முடியவில்லை. டீனேஜ் பாலகிருஷ்ணாவை சினிமாவிலேயே முழுநேரமும் நடிக்க வைக்க அப்போதும்கூட என்.டி.ஆருக்கு எண்ணமில்லை.``பாலகிருஷ்ணா...சினிமா உனக்கு சரிவரலைனா எப்போ நான் கூப்பிட்டாலும் மெடிக்கல் காலேஜ்ல சேர்ந்துக்கணும்! என சொல்லிய வண்ணம் இருந்தார். இன்னொருபுறம், மனைவியின் அன்புக்கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவர் இயக்கிய படங்களில் மகனை நடிக்க வைத்துக் கொண்டும் இருந்தார்.

"காமர்ஸ் படிக்க ஆர்வமாக இருக்கிறேன். `என்னால் ஒரு தலைசிறந்த ஆடிட்டராக முடியும் அப்பா என்று ஆக்டர் கனவை மறைத்து ஆடிட்டர் கனவை ஃபேக்காக கிரியேட் செய்து ஒரு நாள் வந்து சொன்னார். இதுவும் அவரது லீலைகளில் ஒன்றுதான் என்பதை அம்மாவும் சகோதரர்களும் உணர்ந்திருந்தார்கள். ஆனால், என்.டி.,ஆர் உணரவில்லை. காரணம் அந்நேரத்தில் மூத்த மகன் ராமகிருஷ்ணன் அகாலத்தில் இறந்துபோன சோகத்தில் என்.டி.ஆர் இருந்தார்.

Balaiyaa

``சரி... படிக்கட்டுமே! என்று பச்சைக்கொடி காட்டினார் தந்தை ஹைதராபாத் நிஜாம் காலேஜில் அட்மிஷனும் போட்டாகிவிட்டது. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்... நம்ம பாலய்யா ஒருவேளை டாக்டராகி அதிரடியாக மக்களுக்கு சேவை செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? ``உர்ரே... தொங்கனக் குடுக்கா! உனக்கு என்ன பிரச்னைனு நீ சொல்லக் கூடாது... நான் தான் சொல்லணும். ஏன்னா நான் உனக்கு வைத்தியம் பார்க்குற டாக்டரு. எங்கிட்ட வம்பு பண்ணினே உன்னைப் பண்ணிடுவேன் மர்டரு! நல்லவேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை... ஆனால், காலேஜ் சென்ற பாலகிருஷ்ணாவால் வேறொரு அதிர்ச்சி என்.டி.ஆருக்கு காத்திருந்தது. அது...

( தொடரும்)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.