Shilpa Shetty: `வீட்டை காலி செய்யுங்கள்- ஷில்பா ஷெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பிய ED; கோர்ட்டில் அப்பீல்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு அமலாக்கப் பிரிவு அனுப்பி இருக்கும் நோட்டீஸில், மும்பையில் உள்ள வீடு மற்றும் புனேயில் உள்ள பண்ணை வீடு போன்றவற்றை உடனே காலி செய்யும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. பிட்காய்ன் மோசடி விவகாரத்தில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 27-ம் தேதியிட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் 10 நாள்களுக்குள் வீட்டை காலி செய்யும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவின் நோட்டீஸை எதிர்த்து ஷில்பா ஷெட்டியும், அவர் கணவர் ராஜ் குந்த்ராவும் இணைந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களது வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் இது தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் நோட்டீஸில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவிற்கு அக்டோபர் 3-ம் தேதிதான் நோட்டீஸ் கிடைத்தது.

ஷில்பா ஷெட்டி - அவர் கணவர்

இந்த நோட்டீஸ் சட்டவிரோதமானது. ஒருதலைப்பட்சமானது. எனவே அதனை ரத்து செய்யவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் வீட்டை காலி செய்ய வேண்டிய அவசரம் எதுவும் இல்லை என்றும், அத்தகைய வெளியேற்ற அறிவிப்புகளை வெளியிடுவது தேவையற்றது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீட்டில் மனுதாரர்கள் 6 பேருடன் 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். எனவே மனிதாபிமான அடிப்படையில் இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நோட்டீஸுக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் பிட்காய்ன் மோசடியில் மனுதாரர்களுக்கு எந்த வித தொடர்பும் கிடையாதும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மனு நீதிபதி ரேவதி மற்றும் பிரித்விராஜ்சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு பிட்காய்ன் மோசடி தொடர்பாக அமித் பரத்வாஜ் என்பவர் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. அந்நேரம் இவ்வழக்கில் ராஜ் குந்த்ரா அல்லது அவரது மனைவி ஷில்பா ஷெட்டியின் பெயர் இடம்பெறவில்லை.

ஷில்பா ஷெட்டி - அவர் கணவர்

ஆனால் வழக்கு விசாரணையின்போது அமலாக்கப் பிரிவு ராஜ் குந்தராவிற்கு சம்மன் அனுப்பியது. ராஜ் குந்த்ராவும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கப் பிரிவு ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டிக்கு அனுப்பிய நோட்டீஸில், அவர்களின் மும்பை வீடு மற்றும் புனே பண்ணை வீடுகள் பறிமுதல் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அவர்கள் குடியிருக்கும் மும்பை ஜுகுவில் உள்ள வீடு ராஜ் குந்த்ராவின் தந்தையால் வாங்கப்பட்டது ஆகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.