சென்னை: திருமணம் மீறிய உறவு ; இன்ஸ்டாவில் அறிமுகமான இளைஞரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில், ``எனக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்து 14 வயதில் மகனும் 10 வயதில் மகளும் உள்ளனர். நானும் என் கணவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். இது தொடர்பாக எண்ணூர் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துள்ளோம். இந்த நிலையில் எனக்கும் ஜெயக்குமார் என்பவருக்கும் இன்ஸ்ட்ராகிராம் மூலம் கடந்த 30 நாள்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜெயக்குமார் என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறியதோடு என்னை நேரில் சந்திக்க விரும்புவதாக கூறினார். அதை நம்பி அவரைச் சந்திக்க கடந்த 6.10.2024-ம் தேதி காலையில் ரெட்டேரி சந்திப்புக்கு சென்றேன்.

தங்க நகை

அங்கு எனக்காக ஜெயக்குமார் பைக்கில் காத்துக் கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து பேசினேன். அப்போது அவர் எனக்கு மாதுளம் பழம் ஜூஸ் வாங்கிக் கொடுத்தார். அதைக் குடித்தபிறகு நண்பர் ஒருவரைச் சந்திக்க அருகில் உள்ள விடுதிக்கு என்னை ஜெயக்குமார் அழைத்துச் சென்றார். பின்னர் எனக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு அந்த விடுதி அறையிலேயே நான் மயங்கி விட்டேன். சில மணி நேரத்துக்குப் பிறகு நான் கண்விழித்துப் பார்த்தபோது என் அருகில் ஜெயக்குமார் இருந்தார். அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன். அப்போது அவர் வீட்டுக்கு போ, பிறகு பேசிக் கொள்ளலாம் என என்னிடம் கூறினார். அதனால் கலைந்திருந்த என்னுடைய ஆடைகளை சரிசெய்து விட்டு நான் வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு வந்தபிறகு நான் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தாலி செயினைக் காணவில்லை. அது குறித்து ஜெயக்குமாரிடம் போனில் விசாரித்தேன். உடனே அவர், தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்தோடு அவரின் இன்ஸ்டாகிராம் ஐடியையும் பிளாக் செய்துவிட்டார். அதன் பிறகு ஜெயக்குமாரை தொடர்பு கொள்ள பல தடவை முயன்றும் அவரிடம் பேச முடியவில்லை. எனவே என்னுடைய செயினைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் ராஜமங்கலம் போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.