கடல் ரயில் கதைகள்: சாலை பாலமும் முதல் செங்குத்து ரயில் பாலமும் | பாம்பன் மினித் தொடர் 5

நாட்டின் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவினை இணைக்க உருவாக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலம், 110 ஆண்டுகளாக விபத்துகள் இன்றி மக்களை பயணிக்க செய்திருக்கிறது. பெருமைமிக்க இந்த பாலம் கடந்த வந்த பாதையை சொல்கிறது இந்த மினித்தொடர்.!

தொடரின் முந்தைய பாகத்தை படிக்க...

கடந்த பாகத்தில், 110 ஆண்டு பாலத்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதையும் புதிய பாலத்துக்கான பணிகள் குறித்தும் பார்த்தோம்.

மேல் நோக்கி தூக்கப்பட்ட செங்குத்து பாலம்

கடந்த 1974-ம் ஆண்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாம்பன் சாலை பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். 19.26 கோடி ரூபாய் செலவில் சுமார் 2.5 கி.மீ தூரம் பாம்பன் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதம் ஆகின. ஒரு வழியாக 14 வருடங்களுக்குப் பின் 1988-ல் கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் சாலை பாலம் அன்னை இந்திரா காந்தி பாலம் என பெயரிடப்பட்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறக்கப்பட்டது. 

அன்னை இந்திராகாந்தி சாலை பாலம் கட்டுமான பணிகள்

இதனால், ஒரு தனித்தீவாக இருந்த ராமேஸ்வரம், பாம்பன் பாலம் அமைக்கப்பட்டதன் காரணமாக நாட்டின் மற்ற பகுதிகளுடன் சாலை மார்க்கமாகவும் இணைக்கப்பட்டது. இந்த பாலத்தின் மையப் பகுதி கப்பல்கள் செல்லும் வகையில் இரும்பு இணைப்புகள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது. கடல் காற்றில் அதிக உப்புத் தன்மை இருப்பதால் இரும்பு இணைப்புகள் துருப்பிடித்து அவ்வப்போது சேதமடைந்து விடும். இதனால் வாகனங்கள் பாலத்தைக் கடக்கும் போது அதிர்வுகள் ஏற்படும்.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு அரசுப் பேரூந்து ஒன்று கடலில் விழுந்ததில், 8 பேர் பலியாயினர். அதன்பிறகு சொல்லிக் கொள்ளும் படியான விபத்துகள் பாம்பன் பாலத்தில் நடந்ததில்லை. இந்நிலையில், பாலத்தைச் சீர்படுத்த 18.56 கோடி ரூபாய் செலவில்  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னரும் பாலத்தின் மேற்பகுதி மற்றும் இணைப்பு பகுதிகள் சேதமடைந்து வந்தன. இதனைச் சீர்படுத்த 2.70 கோடி ரூபாய் செலவில் வழுவழுப்பான ரப்பர் சாலை அமைக்கப்பட்டது. சுண்ணாம்பு, தார் மற்றும் குவாரி துகள்கள் கொண்டு அமைக்கப்பட்ட  இந்தச்சாலையில் ஒரு மாத காலத்திற்குள்ளாகவே எண்ணற்ற விபத்துகள் நடந்துள்ளன. 

செங்குத்து பாலத்தை மேலே தூக்கி சோதனை

ராமேஸ்வரம் வரும் சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேரூந்துகள், டூ வீலர்கள் என அனைத்து வகை வாகனங்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. வெயில் மற்றும் மழை நேரங்களில் புதிதாகப் போடப்பட்ட ரப்பர் சாலை இளகியது. இதனால் பாம்பன் பாலத்தில் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த பிரேக் போடும்போது, ரப்பர் சாலை என்பதால் வாகனம் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை என்கிறார்கள். இதனால் எதிரில் செல்லும் வாகனங்கள் மீதோ அல்லது தடுப்புச் சுவர் மற்றும் விளக்குக் கம்பங்கள் மீதோ வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குவது தொடர்ந்தது. புதிய சாலையினால் ஏற்பட்ட விபத்துக்களை தவிர்க்க அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடந்து வந்தாலும், பாம்பன் ரயில் பாலத்தை போன்று விபத்துக்கள் ஏற்படுத்தாத பாலம் என இந்த சாலை பாலத்தினால் பெயர் பெற முடியவில்லை.

ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்  மூலம் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் நடுவே 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .(பழைய பாலம் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது).

இந்த புதிய பாலம் செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைய உள்ளது. பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் நடுவில் உள்ள லிப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள சாலை பாலத்திற்கு இணையான உயரம் ஆகும். சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

செங்குத்து பாலத்தின் அடிப்பகுதி

இந்த நவீன பாலத்திற்காக கடலில் 333 காங்கிரிட் அடித்தளங்கள், 101 காங்கிரிட் தூண்கள் ஆகியவற்றின் மேல் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது. மேலும் ரயில்களை மின்சாரம் மூலம் இயக்கும் வகையில் மின் மயமாக்கல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்புதிய பாலத்தில் 98 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் அதில் சரக்கு ரயில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 1-ம் தேதி கப்பல்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள லிஃப்டிங் கிர்டர் செங்குத்து பாலம் ஹைட்ராலிக் இயந்திர பட்டன் மூலம் மேலே ஏற்றி இறக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முழுமையாக வெற்றியடைந்த நிலையில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் வாணவெடிகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.    மீதமுள்ள பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்  இந்த ஆண்டு இறுதிக்குள் ராமேஸ்வரம் - மண்டபம் இடையிலான ரயில் சேவை துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த புதிய பாலத்தின் மீதும் இயக்கப்படும் ரயில்கள் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும், டிசம்பர் மாத இறுதிக்குள் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பும் உள்ளது எனவும் ரயில்வே நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது.

மூன்று பாலங்களின் எழில் தோற்றம்

இந்நிலையில் நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் சுதந்திரத்திற்கு பின் பாம்பன் கடல் மீது கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாலம், சுதந்திரத்திற்கு முன் கட்டப்பட்ட ரயில் பாலத்தை போன்று நீண்ட காலம் பயன் தர வேண்டும் என்பதே நாடு முழுவதிலும் இருந்து ராமேஸ்வரம் வரும் மக்களின் விருப்பமாக உள்ளது.

பாம்பன் பயணம் `நிறைவு!

பாம்பன் ரயில் பாலம், அல்லது சாலை பாலத்தில் பயணித்திருக்கிறீர்களா.... உங்களின் அனுபவங்களை கமெண்டில் பகிருங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.