வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நடத்திய மாபெரும் போதை ஒழிப்பு பேரணி!
வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் ரோட்டரி க்ளப் ஆப் ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி சார்பில் தென்காசி மாவட்டத்தை போதை இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போதை இல்லா தென்காசி என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கரன்கோயிலில் அக்டோபர் 6 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது.
சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து தொடங்கிய பேரணியில் ஜோகோ நிறுவனர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பல்வேறு பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மாணவ மாணவிகள் பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நடந்தனர். திருவேங்கடம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடை வரை சுமார் 2 கி.மீ. தூரம் இந்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பொதுக்கூட்ட மேடையில் போதை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தனர்.
மதியம் 12 மணியளவில் போதை ஒழிப்பு பொதுக்கூட்டம் தொடங்கியது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி வரவேற்றுப் பேசினார். மனிதநேய ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் சைதை துரைசாமி, கிராமங்களின் பாதுகாவலர் ஜோஹோ நிறுவனர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

சுமார் 5000க்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று போதையின் தீங்குகள் குறித்துப் பேசினார். அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிகளை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் தலைமை செயல் அதிகாரி காருண்யா தொகுத்து வழங்கினார்.
பிரமாண்டமாக நடந்த இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி கூறுகையில், தென்காசி மாவட்டத்தை இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாவட்டமாக மாற்றுவதற்காக பல்வேறு சமூகச் செயல்பாடுகளைச் செய்து வருகிறோம். குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு தேவையான நல்ல விசயங்களைச் செய்து கொடுக்க வேண்டும் என எண்ணுகிறோம்.

அதன் ஒரு கட்டமாக போதைப் பொருட்களுக்கு எதிரான பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை சங்கரன்கோயிலில் நடத்தியுள்ளோம். இந்த பேரணியில் 5000க்கும் அதிகமான மாணவ - மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவரும் ஒன்றிணைந்து போதைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர், என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


