``மற்ற அரசியல்வாதிபோல் இருந்திருந்தால், இதெல்லாம் கால்குலேட் பண்ணுவேன்..!” - திருமாவளவன் ஓப்பன் டாக்

``மது ஒழிப்பு மாநாட்டு மேடையில், நீங்க பேசும் போது, `மாநாட்டின் நோக்கத்தை கொள்கை பகைவர்கள் சிதைத்து விட்டார்கள்’ அப்படிங்கிற ஒரு ஸ்டேட்மென்ட்ட சொல்லி இருந்தீங்க. மாநாடு அதன் நோக்கத்தை அடையவில்லை என்ற உங்களின் வருத்தத்தின் வெளிப்பாடாக இதை பார்க்கலாமா?”

``என்ன நோக்கத்திற்காக நாங்கள் மாநாட்டை அறிவித்தோமோ, அந்த நோக்கம் குறித்த உரையாடல்கள் இங்கே நடைபெறவில்லை. அதற்கு உள்நோக்கம் கற்பித்து தேர்தல் அரசியலோடு கூட்டணி அரசியலோடு இணைத்து பல்வேறு யூகங்களை உரையாடல்களாக மாற்றி விட்டார்கள். குறிப்பாக அதிமுக-வும் பங்கேற்கலாம் என்று சொன்னவுடன், `திமுக கூட்டணியிலிருந்து திருமாவளவன் வெளியேறப்போகிறார். அதிமுக-வுக்கு அழைப்பு விடுக்கிறார்’, போன்றவையே பேசுப்பொருளாக மாறிவிட்டது. மதுவை ஒழிக்க வேண்டும், போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் மாநாட்டினுடைய நோக்கம். மதுவை ஒழிக்க முடியுமா? முடியாதா? மது ஒழிப்பு தொடர்பான போராட்டம் கடந்த காலங்களில் எவ்வாறு நடந்தது? அது வெற்றிகரமாக முடிந்ததா தோல்வியில் முடிந்ததா? இது பற்றி அல்லவா விவாதித்திருக்க வேண்டும்.

மாநில அரசுக்குரிய கடமையா அல்லது இந்திய ஒன்றிய அரசுக்கும் இதிலே பொறுப்பு இருக்கிறதா? விடுதலைச் சிறுத்தைகள் இந்திய ஒன்றிய அரசுக்கும் பொறுப்பு இருப்பதாக சொல்லுவது சரியா? தவறா? இது குறித்து விவாதம் நடந்திருக்க வேண்டும். மது ஒழிப்பை ஏன் வலியுறுத்த வேண்டும். மது ஒழிப்பு என்பதும் கள்ளச்சாராய ஒழிப்பு என்பதும் ஒன்றா? கள்ளச்சாராய ஒழிப்பு வேறு மது ஒழிப்பு என்பது வேறு. இப்ப கள்ளச்சாராயம்னா என்ன மது ஒழிப்புன்னா என்ன? இது தொடர்பான விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். இது போன்று எதுவுமே நடக்காமல் திருமாவளவன் வருகிற தேர்தலில் வேற அணி மாறப்போறாரு. அதுக்காகத்தான் இப்ப இந்த மாதிரி பேசினார். திமுக கூட்டணிக்கு அவர் நெருக்கடி தருகிறார். இப்படி விவாதங்கள் மாறிவிட்டன. அதனாலதான் நான் அதை சொன்னேன். `கொள்கை பகைவர்கள் மாநாட்டின் நோக்கத்தை மடைமாற்றம் செய்துவிட்டார்கள்’ என்று.

நாங்கள் என்ன நோக்கத்துக்காக மாநாட்டை ஒருங்கிணைத்தோமோ அந்த நோக்கத்திலிருந்து நாங்கள் விலகவில்லை. ரொம்ப சரியா மக்களை அணி திரட்டி வெற்றிகரமாக இந்த மாநாட்டை நாங்க முடித்திருக்கிறோம். அதனால மாநாட்டைப் பொறுத்தவரையில் வெற்றிகரமாக அமைந்தது. சிறப்பாக அமைந்தது.

பலரின் கவனத்தையும் பரவலான கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. மாநாட்டுக்குப் பிறகும் கூட மாநாட்டில் என்ன பேசினோம் என்ன கோரிக்கைகளை வைத்தோம் என்ன தீர்மானங்களை நிறைவேற்றினோம் அந்த தீர்மானங்களில் எது எது சரியானவை அல்லது சாத்திய கூறுகள் அற்றவை என்பது குறித்து விவாதித்திருக்க வேண்டும். அப்படிவிவாதிக்காமல் மாநாட்டுக்கு பிறகு, `ராஜாஜிக்கு ஏன் கட் அவுட் வச்சாரு? அப்புறம் எதுக்கு திமுக பிரதிநிதி வந்து அதுல உட்கார்ந்தாங்க? மாநாட்டுல சொல்ல வேண்டியதை திருமாவளன் சொல்லாம விட்டுட்டாரு’ இந்த மாதிரி மறுபடியும் ஒரு திசை திருப்புகிற மடைமாற்றம் செய்கிற ஒரு விவாதமாகத்தான் தமிழ்நாட்டு அரசியல் களங்களில், ஊடகத்தளங்களில் விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது.

இந்திய ஒன்றிய அரசுக்கு ஒரு சில கோரிக்கைகள். பெரும்பான்மையாக மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள். அதிகமா தமிழ்நாட்டினுடைய தமிழ்நாடு அரசுக்குரிய கடமைகளை சொல்லி இருந்தோம். திமுக பிரதிநிதிகளை வச்சுக்கிட்டு இவங்களால இதெல்லாம் பேச முடியுமா? அப்படின்னு முதல்ல கேட்டாங்க. நான் திமுக பிரதிநிதிகளை வச்சுக்கிட்டு தான் நாங்க இதெல்லாம் பேசினோம்.

திமுக பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு ஆண்டுதோறும் எப்படி மது விற்பனை கூடிக்கிட்டு இருக்குங்கிற டேட்டாவை சொன்னோம். போதை பொருள் புழக்கம் எப்படி இருக்குங்கிறதை சொன்னோம். ஒவ்வொரு ஆண்டிலும் எவ்வளவு கஞ்சா கைப்பற்றப்பட்டது, போதை பொருள் கைப்பற்றப்பட்டது. கொக்கைன் கைப்பற்றப்பட்டது எவ்வளவு வழக்குகள் ஒவ்வொரு ஆண்டிலும் எவ்வளவு வழக்குகள் கூடுதலாக பெருகிக்கொண்டே இருக்கிறது.

இதையெல்லாம் நாங்க பேசி இருக்கிறோம். ஒரு மேலோட்டமா நீங்க வந்து போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துங்கள் அப்படி என்று முடிக்கவில்லை. தமிழ்நாடு அரசு இன்னும் உறுதி காட்டணும் என்பதை வலியுறுத்தி இருக்கின்றோம். அப்போ ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு ஆளுங்கட்சி பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு அக்கறை செலுத்தவில்லை என்பது உட்பட அந்த தீர்மானத்தை நாங்க சொல்லி இருக்கிறோம். நாளுக்கு நாள் பெருகிறது என்று சொன்னால் கட்டுப்படுத்துவதில் போதிய அக்கறை செலுத்தவில்லை அப்படிங்கறது உட்பட நாங்கள் வலியுறுத்தி பேசியிருக்கிறோம். மாநாட்டுக்கு முன்பும் சரி மாநாட்டுக்கு பின்பும் சரி இந்த மாநாட்டின் உண்மையான நோக்கம் என்னவோ அந்த நோக்கத்தைப் பற்றி அவர்கள் பெரிதாக பேசாமல் திரும்பத் திரும்ப அரசியலோடு பொருத்தி திசை திருப்பி அதனுடைய வலிமையை அல்லது வீரியத்தை குறைத்து மதிப்பிட்டு இருக்கிறார்கள் என்று தான் சொல்லுவேன்.”

``திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, இந்த கொள்கையை எடுக்கும்போதும், நீங்க மாநாட்டுக்கு அதிமுக மற்றும் பொதுவான சக்திகளுக்கு அழைப்பை விடுக்கும் போதும் இந்த புள்ளியில தான் போய் நிற்கும் என்பதை நீங்கள் முன் கூட்டியே கணிக்க முடியும் தானே?”

``கள்ளச்சாராயத்தில் 69 பேர் இறந்தபோது, அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் போதே இந்த மாதிரியான முரண்கள் எழும் என்பது தெரியும். இந்த முரண்கள் எழாமல் நாம் வந்து களத்தில் நிற்க முடியாது. பேசாமலே இருந்தால் முரண்கள் எழாது. அதற்காக நம்ம பேசாம இருக்க முடியுமா? பேசி தான் ஆக வேண்டும். இப்ப 69 பேர் கள்ளச்சாராயத்தில் இறந்தது, மே மாதத்தில்.

எல்லாரும் அதை படிச்சாங்க கடந்து போயிட்டாங்க. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் அந்த 69 பேர் பலியான அந்த நிகழ்வை இன்னும் உயிரோட்டமா வைத்துக் கொண்டிருக்கிறோம். அதை தான் இந்த மாநாடு உணர்த்துகிறது. இப்ப இந்த வாய்ப்பை அதிமுக பயன்படுத்தி இருக்கணும். திமுக ஆட்சியில் 69 பேர் பலி. அப்போது வேகமா யார் பாய்ந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி தான். நாங்கள் கூட்டணி கட்சியில் இருக்கிறோம். ஆனால் அதிமுக கூட இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் இதை வந்து பெரிய ஒரு டூலா(tool) கையில் எடுத்திருக்கணும். ஏன் எடுக்கவில்லை?.”

``உங்களில் அழைப்பை கூட அவர்கள் பரிசீலிக்காத நிலை தான் உள்ளதா?”

```நாங்க ஒரு பெரிய சக்தி. நாங்க கூப்பிட்டா எல்லாம் வந்துருவாங்க. அப்படி நான் சொல்லவில்லை. என்னுடைய உணர்வை நான் வெளிப்படுத்தினேன். இது ஒரு பொதுவான பிரச்னை என்பதை முதல்ல எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்... அதுதான் என்னுடைய கோரிக்கை. ஆனால், ஹெச்.ராஜா மாதிரி ஆட்கள் இவர் என்ன பெரிய தலைவர்? அப்படின்னு வயிறு எரிஞ்சு பேசுகிறார். அவர் வயிறு எரியக்கூடிய அளவுக்கு நான் ஒன்னும் வளரவில்லை. ஆனால் அவருடைய வயிற்று எரிச்சல் எப்படி இருக்கு பாருங்க.

அதாவது என்னுடைய நோக்கம் என்பது எல்லோருக்குமான பொதுவான பிரச்னை. எல்லோரும் ஒன்னு சேர்ந்து குரல் கொடுப்போம் அப்படிங்கறதுதான் என்னுடைய அறைகூவல். இதில் மாறுபட்டு நிற்க வேண்டாம். கட்சி பார்க்க வேண்டாம் எல்லாம் ஒன்னா சேர்ந்து குரல் கொடுப்போம் என்று சொன்னால், எல்லாரும் என் மேடைக்கு வா என்று அர்த்தம் கிடையாது. எல்லாரும் சேர்ந்து பேசி இருக்கலாம். திருமாவளவன் சொல்றது சரி, அந்த கோரிக்கை சரி, ஆமா மது கடையில மூடுங்கன்னு எல்லாரும் சொல்லி இருந்தா கவர்மெண்ட்க்கு ஒரு நெருக்கடி வரும் என்பது தான்.

ஆனால், `திருமாவளவன் ஏதோ கால்குலேஷன் போடுறாரு, இவரு இங்க இருந்து அங்க ஷிஃப்ட் ஆக போறாரு, அங்க இருந்து இங்க ஷிஃப்ட் ஆக போறாரு அல்லது இங்க உள்ள இருந்துகிட்டே பிரஷர் கொடுக்க போறாரு’ அப்படிங்கறது ஒரு அருவருப்பான கற்பிதம். இது ஒரு அநாகரிகமான கற்பிதம்.

நான் மற்ற அரசியல்வாதி போல் இருந்திருந்தால், இதெல்லாம் கால்குலேட் பண்ணுவேன். `இதை பேசினா திமுக தலைமை என்ன நினைக்கும்? கூட்டணி கட்சியில் இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க.? இது ஒரு நெருடலை உருவாக்குமே, நமக்கு கூட்டணி நாளைக்கு ஒரு சிக்கல் வந்துவிடும்’ என்று நான் கவலைப்பட்டு இருக்கணும். நான் அதை பற்றி கவலைப்படவில்லை என்றால் நான் தேர்தல்ல ஒரு பொருட்டா கருதவில்லை என்று தான் அர்த்தம்.

ஸ்டாலின், திருமாவளவன், வீரமணி

இதை நான் எதற்கு பேசுகிறேன் என்றால், மது ஒழிக்கப்பட வேண்டும். இது ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்னை. இதனால் தேசத்துக்கே மனித வளம் பாழாகிறது என்று சொல்கிறேன். மனித வளம் பாழாகுகிறது என்று நான் இத்தனை முறை மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேனே, யாராவது ஒரே ஒரு தலைவர் தேசிய அளவில் மனித வளம் பாழாகிறதுன்னு திருமாவளவன் சொல்கிறாரே, எந்த அடிப்படையில சொல்றாரு? இது எப்படி தேசிய அளவில் மனிதவளம் பாழாகிறது? மனித வளத்துக்கும் மதுவுக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு யாராவது விவாதம் நடத்தி இருக்காங்களா? யாராவது கேள்வி எழுப்பி இருக்காங்களா? அதுக்கு யாராவது விடை சொல்லி இருக்கிறார்களா.?”

``நீங்க மாநாட்டுல பாட்டாளி மக்கள் கட்சியும் பாஜகவும் வேண்டாம் என்று சொல்லும் போது அவர்களுக்கு கோபம் வர தானே செய்யும்?”

``அவங்க ரெண்டு பேருக்கும் கோபம் வரட்டும். இது நான் ஏற்கனவே எடுத்த முடிவு இது. சித்தாந்த அடிப்படையிலும் சரி மற்ற செயல்முறை அடிப்படையிலும் சரி, பாரதிய ஜனதாவோடு எங்களால சேர்ந்து செயல்பட முடியாதுன்னு நாங்க முடிவு எடுத்துட்டோம். மற்ற அரசியல்வாதி போல் இருந்திருந்தால், ஆதாய கணக்கு போடக்கூடியவனா இருந்தால், பாரதிய ஜனதா கதவை நான் ஏன் மூடணும்? பாரதிய ஜனதா கதவை நான் திறந்து வைத்திருந்தால்தானே எனக்கு நல்லது. பாமக கதவை நான் ஏன் மூடணும். பாமக-வும் நாளைக்கு எனக்கு பயன்படும். நாளைக்கு ஒரு நாள் அவர்களோடு சேர்ந்து நம்ம அரசியல் பண்ண வேண்டி இருக்கும். நாம ரெண்டு பேரும் சேர்ந்தாக்க அல்லது அவர்களோடு சேருவோம்ங்கிற பயத்தை எதிர்ல இருக்கிறவங்களுக்கு உண்டு பண்ணா கூட நமக்கு ஒரு ஒரு பேரம் பேசுவதற்கான வலிமை கூடும். இப்ப நானே வந்து கதவை சாத்துகிறேன் பாமகவோட நான் போகமாட்டேன். பாரதிய ஜனதாவோட போகமாட்டேன்.

என்னுடைய தேர்தல் அரசியலுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. என்னுடைய சீட்டு பேரத்துக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரசியல் ஆதாயத்துக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கல. நான் எந்த காரணத்திற்காக எந்த நோக்கத்துக்காக எந்த பிரச்னைக்காக போராடுகிறேனோ அந்த பிரச்னைக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். இப்ப அதனால் தான் நானே சொல்றேன் சாதிய மதவாத சக்திகளோடு சேர முடியாது. தமிழ்நாட்டு அரசியல் உள்ள பாமகவும் ஒரு முக்கியமான சக்தி. பாமக-வோட சேர்ந்து செயல்படுவதற்கான ஒரு தேவை எழலாம். ஆனால் நான் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். பிறகு மது ஒழிப்பு பிரச்னையில் சேரலாம் என்றால் எப்படி போய் சேர முடியும். முதலிலேயே அவர்களுடன் நான் சேருவதில்லை என்று முடிவு செய்து விட்டேன். அப்புறம் எப்படி அவங்களோட இதுல மட்டும் கை கோர்க்க முடியும்? அவங்க போராடலன்னு நான் சொல்லலையே, அவங்களுக்கும் மது ஒழிப்புக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு நான் கேட்டிருக்கிறேனா? பாமக ஒரு நாளும் அதை பத்தி பேசினது இல்ல அப்படின்னு ஏதாவது விமர்சனம் செய்து இருக்கிறேனா? நான் எதுவும் அவர்களுடைய மது ஒழிப்பு தொடர்பான எந்த பிரச்னையும் நான் தலையிடவில்லை. அவங்க தனியா குரல் கொடுக்கட்டும் அல்லது இந்த மாதிரி சேர்ந்து கூட குரல் கொடுக்கட்டும் இதே நேரத்துல அவங்க ஒரு மாநாடு நடக்கட்டுமே, திமுக அரசுக்கு ஒரு பிரஷர் கொடுக்கட்டுமே. அவர்களுக்கு என்று ஒரு நோக்கம் இருக்கும். அதை கையில எடுங்க. 69 பேர் இறந்து இருக்கிறார்கள் தானே. போராட்டம் நடந்துங்கள், இதேபோல் ஒரு மாநாட்டை நடத்துங்கள் ஏன் நடத்தவில்லை?.”

``விசிக-வினர் `கூட்டணி பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை’ என்கிற கருத்துக்களை சொல்லும் போது சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறதே?”

``இந்த மாதிரி பிரச்னைகள் வரும் என்று தெரியாம நாங்க அதை செய்யவில்லை. அப்படி பிரச்னை வந்தாலும் பரவாயில்லை, அதை எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால் மது ஒழிப்பு பிரச்னை முக்கியம். எனக்கு கூட்டணியில நெருடல் உருவாகிவிடும். உடைஞ்சு போயிடும் அப்படின்னு நான் பயந்துகிட்டு பின்வாங்கிட்டால், 69 பேர் செத்தாலும் பரவாயில்லைன்னு நான் போயிடுற மாதிரி ஆகிடும். அப்ப கள்ளச்சாராயம் பெருகட்டும் மது கடைகள் திறந்து இருக்கட்டும். இளைஞர்கள் குடித்து மதுவுக்கு அடிமையாகட்டும். `எக்கேடு கெட்டு போகட்டும் ’அப்படின்னு நாம இருக்க முடியுமா? என்னுடைய கூட்டணி நலனுக்காக நாலு அஞ்சு தொகுதிகளை பங்கீடு செய்து கொள்வதற்காக நான் இந்த பிரச்னையை கைவிட்டுட முடியுமா. ஒருவேளை இந்த பிரச்னையை கையில் எடுப்பதனால், ஒரு நெருடல் உருவாகி அதனால் ஒரு விரிசல் ஏற்பட்டால் கூட அதனை நேர்கொண்டு தான் ஆகவேண்டும்.”

``திமுகவினர் சிறந்த முறையி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.