``அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி முன்னாள் சபாநாயகரின் சகோதரர் கைது..!
ஆவின் மேலாளர் பணிக்கு...
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் சபாநாயகரின் சகோதரர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள்,
``விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 49), எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் தாயில்பட்டி, அதிமுக கட்சியை சேர்ந்தவருமான மாரியப்பனுக்கும் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. அதன்பேரில், ரவீந்திரனின் எலக்ட்ரிக்கல் கடைக்கு மாரியப்பன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்தசமயம் ரவீந்திரனின் சகோதரி படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவரைப் பற்றி விசாரித்த மாரியப்பன், ஆவின் மேலாளர் காலிப்பணியிடம் உள்ளது. பணம் கொடுத்தால் செல்வாக்கை பயன்படுத்தி அரசுவேலை வாங்கிவிட முடியும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ரவீந்திரனும் பணத்தை கொடுத்து ஆவினில் வேலை வாங்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், மாரியப்பனுடன் சேர்ந்து வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த ராமுதேவன்பட்டியை சேர்ந்த விஜயநல்லதம்பியை சென்று சந்தித்துள்ளனர்.
விஜயநல்லதம்பி
அப்போது, கல்விச்சான்றிதழ் மற்றும் ஆவணங்களை வாங்கி சரிபார்த்த விஜய நல்லதம்பி ஆவின் வேலை வாங்கித் தருவது தொடர்பாக அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை சென்று சந்தித்து பேசி உள்ளனர். இதைத்தொடர்ந்து 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கிவிட முடியும் என விஜய நல்லதம்பி ரவீந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் பேசிய ரவீந்திரன், கேட்கும் தொகை அதிகமாக உள்ளது, கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியுமா? கேட்டதற்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் முடித்துவிடலாம் என கூறியிருக்கிறார். இதையடுத்து நகை, சொத்து உள்ளிட்டவற்றை அடகுவைத்து ஆவினில் மேலாளர் வேலைக்காக 20 லட்சம் ரூபாயை ரெடி செய்த ரவீந்திரன், விஜய நல்லதம்பியை தொடர்புகொண்டு நேரில் பணம் வழங்கியுள்ளார். இதையடுத்து சில நாள்கள் கழித்து, ரவீந்திரனை தொடர்புக்கொண்ட விஜயநல்லதம்பி மேலாளர் வேலைக்கு நீதிபதியின் மகன், மாவட்ட ஆட்சியரின் உறவினர் என பலரும் போட்டி போடுகிறார்கள். எனவே 37 லட்சம் ரூபாயை கொடுங்கள் என வற்புறுத்தியுள்ளார்.
``மொத்த பணமும் அமைச்சரிடம் உள்ளது
இதுதொடர்பாக ரவீந்திரனும், விஜயநல்லதம்பியும் பேரம்பேசியதில் 30 லட்சம் ரூபாய்க்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து மீதி 10 லட்சம் ரூபாயும் கடனாக பெற்று, விஜய நல்லதம்பியிடம் கொடுத்து மொத்தமாக 30 லட்சம் ரூபாயை ஆவின் மேலாளர் வேலைக்காக ரவீந்திரன் கொடுத்திருக்கிறார். ஆனால் சொன்னபடி எந்த வேலையும் அவர் வாங்கி தரவில்லை. நாளடைவில் கடனாக வாங்கிய தொகைக்கு வட்டிக்கட்ட முடியாமல் தவித்துவந்த ரவீந்திரன், வேலைக்காக தான் கொடுத்த 30 லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு விஜய நல்லதம்பியிடம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து விஜய நல்லதம்பியை சந்தித்து பேசும்போது, நீங்கள் கொடுத்த மொத்த பணமும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாறிவிட்டதால் தற்சமயம் எதுவும் செய்ய முடியாது. அதே போல வருமான வரித்துறை ரெய்டு போன்ற பல்வேறு பிரச்னை இருப்பதால் இப்போதைக்கு உங்களது பணத்தை திருப்பித்தர முடியாது. ஆனால் விரைவில் உங்களது பணத்தை திருப்பித் தரும்போது வட்டியுடன் சேர்த்து கொடுக்கிறோம் என கூறி இருக்கிறார். ஆனால் பல மாதங்களாகியும் கொடுத்த பணத்தை சொன்னபடி திருப்பி தராததால் ஏமாற்றம் அடைந்த ரவீந்திரன், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ஆஜராகி தான் பணமோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் விஜய நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாரியப்பன் உள்பட மேலும் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், தற்போது விஜய் நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

முன்னாள் சபாநாயகரின் சகோதரர்
விஜயநல்லதம்பி கைது செய்யப்பட்டவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது விஜய நல்லதம்பிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீஸிடம் கேட்டபோது, விஜய நல்லதம்பிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரின் விரிவான ஆலோசனைகள் மற்றும் அறிக்கைக்கு பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்" என தெரிவித்தனர். பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விஜய நல்லதம்பி முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் ஆவார். இவர் சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.கவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

