Diwali Bonus : தீபாவளி போனஸ் வாங்கியாச்சா? - உடனே செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்!

தீபாவளி பண்டிகை என்றாலே பணியாளர்களின் நினைவுக்கு முதலில் வருவது போனஸ் தான். போனஸ் தருவார்களா? மாட்டார்களா? போனஸ் வாங்கிய பிறகு அதை என்ன செய்வது? வாங்கிய போனஸை செலவு செய்யலாமா? சேமிக்கலாமா? போன்ற பல கேள்விகள் மனதில் எழும்.

இது போன்ற கேள்விகளுக்குப் பதில் தருகிறார் நிதி ஆலோசகர் U.N சுபாஸ். அவர் கூறுகையில், "

போனஸ்

``தீபாவளி பண்டிகை வருவதையொட்டி கம்பெனிகளில் போனஸ் போன்ற நல்ல விஷயங்கள் வந்திருக்கலாம். அதை அப்படியே எடுத்து செலவு செய்யக் கூடாது. அது ஒரு நல்ல நிதி முடிவும் கிடையாது. அதற்காகச் செலவே செய்ய வேண்டாம் எனக் கூறவில்லை. வாங்கிய போனஸில் 20% முதல் 30% வரை செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செலவு செய்தது போக மீதியை இந்த மூன்று விஷயங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

முதலாவதாக, நம்முடைய இலக்குகளுக்கு முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, 7 வருடங்களுக்குப் பிறகு கார் வாங்கவேண்டும் என்ற இலக்கு இருக்கிறது. அதற்காக இந்தப் பணத்தை எடுத்து வைக்கலாமா என்றால், தாராளமாக எடுத்து வைக்கலாம்.

இல்லையென்றால், சில வருடங்களுக்குப் பிறகு சர்வதேச பயணம் மேற்கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் கடன் வாங்க விருப்பமில்லை என்றால், இந்தப் பணத்தைச் சேமித்து வைக்கலாம். நீங்கள் சேமிக்கும் பணம் 5 முதல் 7 ஆண்டுகளில் 2 மடங்காக மாறலாம். அதன் மூலம் பயன்பெறலாம்.

இரண்டாவதாக, வாங்கிய கடனை அடைக்க இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக வாகனங்கள் வாங்குவதற்காக வாங்கிய கடன்கள், அதிக வட்டி விகிதம் கொண்ட கடன் போன்றவற்றை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூன்றாவது, முறையான முதலீட்டுத் திட்டம் ( Systematic Investment Plan) போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, SIP இல் நீண்ட காலமாக முதலீடு செய்து வருகிறீர்கள்.

அந்த தொகையின் அளவை அதிகரிக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த போனஸ் தொகை உங்களுக்கு உதவியாக இருக்கும். மாதம் மாதம் 1,000 ரூபாய் கட்டுவதற்குப் பதிலாக, இந்த தொகையைப் பயன்படுத்தி முதலீட்டின் அளவை அதிகரித்து, உங்களது இலக்குகளை அடையும் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளலாம். எதற்கெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்றால், நண்பர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு இதைப் பயன்படுத்தக் கூடாது. நிறைய நல்ல விஷயங்களுக்கு இந்த தொகையைப் பயன்படுத்துவதன் மூலமாக, எளிதில் நமது இலக்கை அடைய முடியும்" என்கிறார் அவர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.