கறி விருந்து: 500 செம்மறி ஆடுகள்; 5 ஆயிரம் விவசாயிகள் - ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இந்த கிராமத்தின் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது எல்லைப் பிடாரி அம்மன் கோயில்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை நள்ளிரவில் இங்கு சிறப்புப் பூஜை நடைபெறும். மானாவாரி விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும், இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளைக் காக்க வேண்டியும் இந்த ஆண்டும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் காப்புக்கட்டி விரதமிருந்து வந்தனர்.

விநோத வழிபாட்டு விருந்தில் பங்கேற்ற ஆண்கள்

இந்த வழிபாட்டில் அம்மனை தரிசிக்கவோ, பூஜைகளில் பங்கேற்கவோ பெண்களுக்கு அனுமதி இல்லை. இதையடுத்து இந்த ஆண்டுக்கான திருவிழா சனிக்கிழமை நள்ளிரவு நடந்தது. இதில் முதல் நாடு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் அம்மனுக்கு பீடம் அமைத்து சிறப்புப் பூஜைகள் செய்தனர்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 500-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை எல்லைப் பிடாரி அம்மனுக்குப் பலியிட்டதுடன் பச்சரிசி சாதம் சமைத்துப் படையலிட்டனர்.

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பந்தி

இதன் பின்னர் அங்கு கூடியிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்களுக்கு பனை ஓலை, பாக்கு தட்டு போன்ற இயற்கையான பொருட்களில் வைத்து கறிவிருந்து வழங்கப்பட்டது. வழிபாடு மற்றும் கறிவிருந்து ஆகியன முடிந்த நிலையில் எஞ்சிய உணவு மற்றும் பூஜை பொருட்களை வீட்டுக்கு எடுத்து செல்லாமல் அவற்றை கோயில் வளாகத்திலேயே மண்ணில் புதைத்து விடுவது வழக்கம். அதன்படி இம்முறையும் எஞ்சிய கறி உணவு மற்றும் பூஜை பொருட்களை மண்ணில் புதைத்த விவசாயிகள் வழிபாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.