Gudalur: ``அந்நிய களைத் தாவரங்கள் அழிப்பு.. வனவிலங்குகள் வெளியேறுவது குறையும் வனத்துறை நம்பிக்கை!
வனங்கள் நிறைந்த நீலகிரியில் வனவளத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன அந்நிய களைத் தாவரங்கள். அழகு தாவரங்களாகவும், விறகு தேவைகளுக்காகவும் மற்றும் இன்னபிற காரணங்களால் கடந்த 200 ஆண்டுகளாக நமது வனத்திற்குள் ஊடுருவிய லன்டனா, செஸ்ட்டெரம், பார்த்தீனியம், சில்வர் ஓக், யூக்கலிப்டஸ், பைன் போன்ற அந்நிய களைத் தாவரங்கள் இன்றைக்கு வனத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இந்த மண்ணுக்கு சற்றும் தொடர்பில்லாத இந்த வகை களைத் தாவரங்களை வனவிலங்குகள் உண்பதில்லை என்பது மட்டுமின்றி பூர்வீக புல் வகைகள் வளர விடாமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால் பெரிய யானைகள் முதல் சிறிய முயல்கள் வரை அவற்றின் மேய்ச்சல் இடங்கள், நீர்நிலைகள் மற்றும் வழித்தடங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்நிய களைத் தாவரங்களை அகற்ற வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றங்களும் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது ஒரு கட்டமாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சுமார் 160 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் ஆக்கிரமித்திருந்த அந்நிய களைத் தாவரங்களை வனத்துறையினர் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி அக்ற்றப்பட்ட இடங்களில் பூர்வீக புல் மற்றும் காட்டு மரங்களை நடவு செய்து வருகின்றனர். வளமான வனத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளூர் பழங்குடி மக்களையும் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இந்த முன்னெடுப்பு குறித்து தெரிவித்த கூடலூர் வனக்கோட்டத்தின் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு , " உண்ணிச் செடி எனப்படும் லன்டனா களைச் செடிகள் அதிகளவில் ஆக்கிரமித்து வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு எந்தவித பயனும் இல்லாத இந்த களைத் தாவரங்கள் 167 பரப்பளவில் பரவி இருந்தது. அவை வேருடன் அகற்றப்பட்டது. அந்த இடங்களில் யானை உள்ளிட்ட தாவர உண்ணிகள் விரும்பி உண்ணும் பூர்வீக புல் வகைகளை நடவு செய்து வருகிறோம். அது மட்டுமன்றி காட்டு நெல்லிக்காய், காட்டு நாவல் போன்ற பழ மரங்களையும் பழங்குடி மக்கள் உதவியுடன் வனத்துறையினர் நடவு செய்து வருகிறோம். தூய வனமாக மாறும் இந்த பகுதியை வனவிலங்குகள் மீண்டும் பயன்படுத்த உதவியாக இருக்கும். இதனால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறுவது குறைவதோடு, மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் குறையும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


