``இலவச வேஷ்டி, பொருள் கிடைக்கும்.. ஆசை காட்டி நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்!
சென்னை திநகரைச் சேர்ந்தவர் ராஜூ (47). இவர் வாட்டர் வாஷ் கடையில் வேலை செய்து வருகிறார். ராஜூவின் தந்தை நரசிம்மலுவுக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் மாத்திரை வாங்க கடந்த 6-ம் தேதி அந்தப்பகுதியில் உள்ள மெடிக்கலுக்கு தந்தை நரசிம்மலுவுடன் சென்றிருக்கிறார் ராஜூ.
அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், நரசிம்மலுவை தனியாக அழைத்துச் சென்று, ``என்னுடைய ஓனர், பெரிய பணக்காரர், அவர் வயதானவர்களுக்கு இலவசமாக வேஷ்டி, பொருள்கள் கொடுத்து வருகிறார். எனவே நீங்கள் அணிந்திருக்கும் மோதிரங்களை கையிலிருந்து கழற்றி மறைத்து வைத்துக் கொள்ளுங்கள்" என்று நரசிம்மலுவிடம் அந்த மர்மநபர் கூறியிருக்கிறார்.
அதை உண்மையென நம்பிய நரசிம்மலுவும் தங்க மோதிரங்கள், பணத்தை எடுத்து தன்னுடைய பைக்குள் மறைத்து வைத்திருக்கிறார்.
சிறிது நேரத்தில் அந்த மர்ம நபர், "இங்கேயே நில்லுங்கள், ஓனர் வந்து இலவசமாக வேஷ்டி, பொருள்களைத் தருவார்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் யாரும் வரவிலலை. இதையடுத்து நரசிம்மலு, மறைத்து வைத்திருந்த தங்க மோதிரங்களையும் பணத்தையும் பையிலிருந்து எடுத்த போது அங்கு மோதிரங்கள், பணம் இல்லை. அதனால் அதிர்ச்சியடைந்த நரசிம்மலு, தன்னுடைய மகன் ராஜூவிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார்.
அப்போதுதான் நரசிம்மலுவிடம் இலவச வேஷ்டி, பொருள் என ஆசைவார்த்தைகளைக் கூறியதோடு அவரின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர் தங்க மோதிரங்கள், பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தத. இதையடுத்து ராஜூ, மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் 13 கிராம் எடையுள்ள இரண்டு மோதிரங்கள், 8,500 ரூபாயை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்குள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து மர்மநபரைத் தேடிவருகிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


