எல்லையைக் கடக்க ரூ.2,000 லஞ்சம்! - நாமக்கல்லில் பிடிப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளிடம் என்.ஐ.ஏ விசாரணை!

நாமக்கல் மாவட்ட டவுன் காவல் நிலைய எல்லையில் நேற்று பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 பேரை, போலீஸார் தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பிடித்துள்ளனர். இதில், பிடிப்பட்டவர்களில் ஒருவரிடம் மட்டும் முறையாக பாஸ்போர்ட், விசா இருந்துள்ளது. மற்றவர்களிடம் இல்லாததால் அவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “கடந்த 9 மாதங்களாக நாமக்கல் டவுன் காவல் நிலைய எல்லையான விசாணம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மொகமது முல்லா, அனிஷ் பாசில், இஸ்லாம் முகமது மற்றும் அவரது நண்பர் ஒருவர் என 4 பேர் வீடு வாடகைக்கு எடுத்து கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இது தொடர்பாக தீவிரவாதக் குழுவை கண்டறியும் பிரிவிலிருந்து நாமக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்மூலம் சம்பந்தப்பட்ட 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், நான்கு பேருக்கும் குமாரப்பாளையம், சங்ககிரி, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் வசித்து வருவதாக ஆதார் கார்டு, பேன் கார்டு, கரூர் வைஸ்யா வங்கிக் கணக்கு புத்தகம் போன்றவை இருந்தது. இவர்கள் இந்தியாவிற்குள் வந்து 9 மாதக்காலமே ஆன நிலையில் இந்திய பிரஜைகளுக்கு வழங்கக்கூடிய அனைத்து ஆவணங்களும் ஒரிஜினலாக வைத்திருந்தது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் அவர்கள் எப்படி இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்று விசாரித்தபோது ஒரு பாஸ்போர்ட் வைத்து மற்ற மூன்று பேரும் இந்திய எல்லைக்குள் வந்ததாகவும், இதற்காக இந்திய எல்லைக்குள் நுழைய சோதனை செய்யும் அதிகாரிக்கு 2,000 லஞ்சம் கொடுத்ததாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க தீவிரவாதிகளை கண்டறியும் மற்றும் தடுத்து நிறுத்தும் ஏஜென்சியை சேர்ந்தவர்கள் விசாரணை செய்தனர்.

பின்னர் ஒருவரிடம் மட்டும் பாஸ்போர்ட் இருந்ததையடுத்து. மற்றவர்களிடம் ஏதும் இல்லாததால், பாஸ்போர்ட் உள்ள நபரை தீவிர விசாரணைக்கு பின் பங்களாதேஷ்க்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 3 பேரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) மேற்கண்ட 3 பேரிடமும், கடந்த 9 மாதங்களாக நாமக்கல்லில் என்ன செய்தார்கள், இவர்களை அழைத்துவந்தது யார்? தீவிரவாத கும்பலுடன் ஏதும் தொடர்பில் உள்ளார்களா? என்று விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இவர்களுக்கு இந்திய பிரஜைகள் பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் எப்படி கிடைத்தது.. இவர்களுக்கு உதவியது யார் என்று விசாரிக்கையில் திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் தான் உதவியதாக கூறியுள்ளனர். அதன்மூலம் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது” என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.