பில் தகராறு.. டாக்டரை சுட்டுக்கொன்று இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர்கள்..! என்ன நடந்தது?
டெல்லியில் உள்ள நிமா மருத்துவமனைக்குள் புகுந்த மூன்று வாலிபர்கள் டாக்டரிடம் காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு டாக்டரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், டாக்டர் ஜாவேத் அக்தர் நடத்தி வரும் நிமா மருத்துவமனைக்கு மூன்று வாலிபர்களில் ஒருவர் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைக்காக வந்துள்ளார். கடந்த மாதம் பரிதாபாத்தில் நடந்த விபத்தில் அந்த வாலிபர் காயம் அடைந்திருந்தார். அவருக்கு டாக்டர் அக்தர் சிகிச்சையளித்துள்ளார்.
சிகிச்சைக்கு பிறகு ரூ.1200 கொடுக்கும்படி கேட்டுள்ளார் டாக்டர். ஆனால் பில் அதிகமாக இருப்பதாக கூறி டாக்டரிடம் அந்த வாலிபர் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதத்திற்கு பிறகு தன்னிடம் இருந்த 400 ரூபாயை மட்டும் டாக்டரிடம் கொடுத்துள்ளார். அவரை டாக்டரும், மருத்துவமனை ஊழியர்களும் அவமதித்து அனுப்பியுள்ளனர்.
10 நாள்கள் கழித்து, பேண்டேஜை பிரிப்பதற்காக மீண்டும் தனது சித்தியுடன் அந்த வாலிபர் அதே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் டாக்டர் சிகிச்சையளிக்காமல் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்.

அவமானத்தால் டாக்டரை பழிவாங்க முடிவு செய்த அந்த வாலிபர், தனது நண்பர்கள் இரண்டு பேரிடம் இது குறித்து ஆலோசனை செய்தார். இதற்காக ஒருவர் துப்பாக்கிக்கு ஏற்பாடு செய்துள்ளார். பின்னர் மூன்று பேரில் ஒருவருக்கு இருந்த காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது போல் சென்று ஒத்திகை பார்த்துவிட்டு வந்தார். அதன் பிறகு மூன்று பேரும் அடுத்த நாள் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றனர். டாக்டர் அக்தர் காயமடைந்த நபருக்கு சிகிச்சையளித்தவுடன் மூவரில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் டாக்டரை சுட்டுவிட்டார். கொலை செய்த பிறகு அந்த சம்பவம் குறித்து சோசியல் மீடியாவிலும் முக்கிய குற்றவாளி பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து போலீஸார் அவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரும் மைனர்கள் ஆவர். அவர்கள் அடிக்கடி வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


