Doctor Vikatan: அம்மாவின் மெனோபாஸ் வயது தெரியாதபோது மகளின் மெனோபாஸ் வயதை எப்படி கணிப்பது?

Doctor Vikatan: என் வயது 47. மெனோபாஸ் அறிகுறிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. மருத்துவரிடம் கேட்டபோது, என் அம்மா, சித்திக்கு மெனோபாஸ் வந்த வயதில்தான் எனக்கும் வரும் என்கிறார். என் அம்மாவுக்கு 35 வயதிலேயே கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டார்கள். அதனால் அவரது மெனோபாஸ் வயது தெரியாது. இந்நிலையில் எனக்கு எப்போது மெனோபாஸ் ஆகும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மெனோபாஸ் என்பது மரபியலுடன் தொடர்புடையதுதான். அதாவது ஒரு பெண்ணின் அம்மா, சித்தி, பெரியம்மா, பாட்டி  போன்றவர்களுக்கு எந்த வயதில் மாதவிடாய் நின்று போனது என்பதைப் பொறுத்து அந்தப் பெண்ணின் மெனோபாஸையும் ஓரளவு கணிக்கலாம். உதாரணத்துக்கு, இவர்களுக்கெல்லாம் 50 வயதில் மெனோபாஸ் ஆகியிருந்தால் உங்களுக்கும் அதே வயதில்தான்  உங்களுக்கும் மாதவிடாய் முற்றுப்பெறும்.

சில குடும்பங்களில் அம்மா, சித்தி போன்றோருக்கு இள வயதிலேயே ஏதோ காரணங்களுக்காக கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். அதாவது 40-45 வயதிலேயே கர்ப்பப்பையை நீக்கியிருப்பார்கள். அந்த நிலையில் அவர்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயது தெரிந்திருக்காது. அதற்காக கவலைப்பட வேண்டாம்.  இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் மெனோபாஸ் வயது சராசரியாக 50 அல்லது 51. 

இதிலிருந்து 5 அல்லது 6 வருடங்கள் முன்னதாக ஒரு பெண்ணுக்கு பெரிமெனோபாஸ் (perimenopause) எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலகட்ட அறிகுறிகள் ஆரம்பிக்கும்.  இதை ரத்தப் பரிசோதனை செய்துதான் உறுதிபடுத்த வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. சில பெண்களுக்கு 51- 52 வயதாகியும் ப்ளீடிங் வந்துகொண்டே இருக்கும்.  மெனோபாஸ் வயதைத் தாண்டியும் பீரியட்ஸ் வந்துகொண்டே இருக்கும்.  இதுவும் நார்மலானதுதான்... ஒவ்வொரு பெண்ணின் உடல்வாகும் வெவ்வேறாக இருக்கும். 

அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்

51-52 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் நிற்கவில்லை என மருத்துவரிடம் வரும் பெண்களுக்கு இன்னும் ஒரு வருடம் காத்திருக்கச் சொல்வோம். அதன் பிறகும் ப்ளீடிங் நிற்கவில்லை என்றால், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து, கர்ப்பப்பை எப்படியிருக்கிறது, அதன் லைனிங் எந்த அளவுக்கு அடர்த்தியாக இருக்கிறது என்றெல்லாம் பார்க்க வேண்டும். ஒருவேளை கர்ப்பப்பையின் லைனிங் ரொம்பவே அடர்த்தியாக இருந்தாலோ, ஈஸ்ட்ரோஜென்  சுரப்பு குறையாவிட்டாலோ அதற்கான காரணத்தையும் மருத்துவர் ஆராய்வார். அதற்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.