கடல் ரயில் கதைகள்: 110 ஆண்டு பாலத்துக்கு ஓய்வும் புதிய பாலத்துக்கான பணிகளும் | பாம்பன் மினித்தொடர் 4

நாட்டின் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவினை இணைக்க உருவாக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலம், 110 ஆண்டுகளாக விபத்துகள் இன்றி மக்களை பயணிக்க செய்திருக்கிறது. பெருமைமிக்க இந்த பாலம் கடந்த வந்த பாதையை சொல்கிறது இந்த மினித்தொடர்.!

தொடரின் முந்தைய பாகத்தை படிக்க...

கடந்த பாகத்தில் பாம்பன் ரயில் பாலத்தில் நீடித்த அதிர்வு குறித்தும் அதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு அதிர்வுகளை குறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறித்தும் பார்த்தோம்...

துருப்பிடிக்காத வகையில் வண்ணம் தீட்டப்பட்ட ஷெர்சர் பாலம்

இதன் பின்னர்  இந்திய அறிவியல்  மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வு அமைப்பின் பிரிவான கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் தலைமையில் பாம்பன் பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி தூக்குப் பாலத்தின் இரு பகுதிகளிலும் அதிர்வுகளைக் கண்காணிக்கும் சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டது. இந்த ஆய்வினை தொடர்ந்து  இந்திய ரயில்வே பாலங்கள் பிரிவு பொறியாளர்கள் பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

பாலம் சீரமைக்கப்பட்ட பின், அதில் ரயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வு மற்றும் தாங்கும் திறன்குறித்து பல்வேறு குழுக்கள் ஆய்வு நடத்தி, அதன் அறிக்கை ரயில் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து,  பாம்பன் பாலத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்கள் தூக்குப் பாலத்தைக்க் கடந்து செல்லும்போது ஏற்படும் அதிர்வை ரயில்வே பொறியியல் பணியாளர்கள் படகுகளில் இருந்தபடி கண்காணித்தனர்.

பழைய பாலத்தில் பயணிக்கும் ரயில்

இதுவரை எந்த ஒரு விபத்தும் காணாத பாம்பன் கடல் பாலம் கடந்த 110 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. அதிக உப்பு தன்மை கொண்ட பாம்பன் கடலின் மீது அமைக்கப்பட்ட இந்த பாலத்தில் அரிமானம் ஏற்படாமல் இருப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில்  ரசாயன வர்ண பூச்சு செய்யப்பட்டு வந்தது.  ஆனாலும் கடல் உப்பு காற்று காரணமாக கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் கிரடர் பகுதிகள் துருப்பிடிக்க ஆரம்பித்தது. சில இடங்களில் துரு காரணமாக இரும்பு பட்டைகளின் கனம் குறைய ஆரம்பித்தது.  இதனால் பாலத்தின் அபாய நிலை காரணமாக ரயில்கள் 2 கிலோ மீட்டர் பாலப்பகுதியில் 10 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. மேலும் பராமரிப்பிற்காக ரயில் போக்குவரத்தை அடிக்கடி நிறுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது.

சாலை பாலத்தின் கீழாக பாலத்தில் ஊர்ந்து செல்லும் ரயில்

இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர். எனவே நவீன வசதிகளுடன் ரூபாய் 550 கோடி செலவில் புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்தது. இதன்படி ரூ.535 கோடி  மதிப்பீட்டில் புதிய பாலத்திற்கான  திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போதைய ரயில் பாலம் அமைந்துள்ள பகுதியின் வடக்கு பகுதியில் புதிய பாலத்தினை அமைக்க முடிவு செய்யப்பட்டதுடன் சுமார் 2.08 கி.மீ தூரத்திற்கு புதிய பாலத்தை உருவாக்கவும் திட்டம் தயாரானது. பழைய பாலத்தினை போன்றே புதிய பாலத்தின் இடையேயும் படகுகள் மற்றும் கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் தூக்கு பாலம் அமைக்கவும் ரயில்வே துறையினர் திட்டமிட்டனர்.

இந்த புதிய ரயில் பாலத்திற்கான திட்டத்தை கடந்த 2019 மார்ச் மாதம் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடந்த நிகழ்சி ஒன்றில் துவக்கி வைத்தார். இதையடுத்து பாலம் அமைப்பதற்கான பணிகளை ரயில்வே கட்டுமான நிறுவனமான ரயில் விகாஷ் நிகம் லிட் தொடங்கியது.

புது பொழிவுடன் சீரமைக்கப்பட்ட ஷெர்சர் பாலம் (பழையது)

இதன்படி மண்டபத்திற்கும் பாம்பனுக்கும் இடையேயான நிலப்பகுதியினை இணைக்கும் வகையில் இரு வழிப்பாதை கொண்ட ரயில் பாலம் அமைந்துள்ளது. இதற்கென தற்போதைய ரயில் பாலத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் முதல் 50 மீட்டர் வரையிலான தூரத்தில் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. 2.07 கி.மீ தூராத்திற்கு கடலின் இடையே 99 தூண்கள் கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் எழுப்பவும், இந்த தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொறுத்தவும் திட்டமிடப்பட்டது. தற்போது உள்ள தூக்கு பாலத்திற்கு பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய ஹைட்ராலிக் வகையிலான தூக்கு பாலமும் இதில் அமைகிறது.

சுமார் 17 மீட்டர் உயரம் கொண்ட இந்த தூக்குப் பாலத்தின் வழியாக பெரிய மீன்பிடி படகுகள், கப்பல்கள் ஆகியன செல்ல முடியும். இந்த தூக்கு பாலம் மின்சாரம், ஜெனரேட்டர்  மற்றும் மனித சக்தி என 3 முறைகளிலும் திறக்கும் வகையில் உருவாக்கப்பட முடிவு செய்யப்பட்டது.

பழைய - புதிய தூக்கு பாலங்கள்

2019 மார்ச்சில் பிரதம் புதிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டி திட்டத்தை துவக்கி வைத்தாலும் இதனை தொடர்ந்து வந்த மாதங்களில் நாடு முழுவதும் பரவிய கொரோனா பாதிப்புகளால் பாலப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது. கொரோனா பாதிப்புகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையை தொடர்ந்து  கடந்த 2020  மண்டபம் ராமேஸ்வரம் இடையிலான ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு புதிய பாலம்  2.8 கி. மீ. நீளத்திற்கு, நடுவில் பெரிய கப்பல்களும் சென்று வரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.

பாம்பன் பயணம் தொடரும்..!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.