UP: இஸ்ரேல் டைம்மெஷின்; ஆக்சிஜன் தெரபி; முதியவரை இளைஞராக்கச் சிகிச்சை - உ.பி தம்பதியின் பலே மோசடி!
மோசடியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் புதுப்புது வழிகளைப் பின்பற்றுகின்றனர். இதனால் பொதுமக்கள் எளிதில் ஏமார்ந்து விடுகின்றனர். ஆன்லைன் மோசடிகள்தான் அதில் அதிகமாக நடக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் நூதனமான ஒரு மோசடி நடந்துள்ளது. கான்பூரில் ராஜீவ் துபே மற்றும் அவரது மனைவி ரேஷ்மி ஆகியோர் இணைந்து ஆக்சிஜன் தெரபி என்ற ஒரு கிளினிக்கை மறுமலர்ச்சி உலகம் என்ற பெயரில் தொடங்கினர். இந்த தெரபி மையத்தில் இருக்கும் டைம் மெஷினில் ஒருவர் சென்று வந்தால் அவர்கள் குறுகிய காலத்தில் இளமைக்குத் திரும்ப முடியும் என்று தெரிவித்தனர். அதாவது 60 வயது நபர் 25 வயது நபரைப் போன்று மாற முடியும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினர்.
இந்த மெஷினை இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து இருப்பதாகவும் தெரிவித்தனர். அதோடு தங்களிடம் வரும் வயதானவர்களிடம் காற்று மாசு காரணமாக விரைவில் வயதானவர்களாகி விடுகின்றீர்கள் என்றும், ஆக்சிஜன் தெரபி செய்து கொண்டால் குறுகிய காலத்தில் மீண்டும் இளமைக்குத் திரும்பி விடலாம் என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறினர்.
இது குறித்து உதவி காவல்துறை ஆணையர் அஞ்சலி கூறுகையில், "ஆக்சிஜன் தெரபிக்கு மொத்தமாக ரூ. 90 ஆயிரம் வசூலித்துள்ளனர். 10 முறை செய்து கொள்ள ரூ. 6 ஆயிரமும், மூன்று ஆண்டுகள் செய்து கொள்ள ரூ. 90 ஆயிரமும் வசூலித்துள்ளனர். இளமையாகி விடுவோம் என்ற நம்பிக்கையில் இத்தம்பதியிடம் ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர்.
அதிகமானோரை அழைத்து வந்தால் அழைத்து வரும் நபருக்குக் கட்டணத்தில் சலுகை, இலவச ஆக்சிஜன் தெரபி என்று கூறியுள்ளனர். இதனை ஒரு எம்.எல்.எம் தொழில் போன்று செய்துள்ளனர். ரேனு சிங் என்ற பெண் இத்தம்பதியிடம் ரூ.10.75 லட்சம் கட்டி ஏமாந்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். தம்பதி இருவரும் நூற்றுக்கணக்கானவர்களிடம் ரூ.35 கோடி வரை மோசடி செய்துள்ளனர். அவர்களைத் தேடி வருகிறோம். இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளது." என்றார்.

ஆனால் அவர்கள் ஏற்கனவே வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்த ரேனு சிங் கூறுகையில், "அதிகமானோரை அழைத்து வந்தால் இலவசமாக எனக்கு ஆக்சிஜன் தெரபி கொடுப்பதாகக் கூறினர். நானும் அதனை நம்பி ஏராளமானோரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினேன்." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


