விமானங்களில் இருப்பது போன்று அரசு பஸ்களில் பணிப்பெண்கள்; பயணிகளைக் கவர மகாராஷ்டிாவில் புதுத்திட்டம்!
விமானங்களில்தான் பணிப்பெண்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் மகாராஷ்டிராவில் முதன் முறையாக அரசுப் பேருந்துகளிலும் அது போன்ற பணிப்பெண்களை அறிமுகம் செய்ய மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டிருக்கிறது.
இந்தப் பணிப்பெண்கள் மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு சிவ்னெரி பேருந்துகளில் மட்டும் பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். சிவ்னெரி எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் இது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பயணத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும், பயணிகளுக்கு நிறைவான சேவையை வழங்கும் நோக்கத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் விமானத்தில் பயணம் செய்வது போன்ற ஒரு உணர்வை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும், முதற்கட்டமாக மும்பை-புனே இடையே இயக்கப்படும் சிவ்னெரி பேருந்துகளில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இப்பணிப்பெண்கள் சிவ்னெரி சுந்தரி என்று அழைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் பேருந்தில் ஏறும் பயணிகளை வரவேற்பது மற்றும் பயணத்தின்போது பயணிகளுக்கு உதவுவது போன்ற வேலையில் ஈடுபடுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ முதலுதவி, தண்ணீர், நியூஸ் பேப்பர், பயணம் தொடர்பான தகவல்களை இப்பெண்கள் பயணிகளுக்கு வழங்குவார்கள். அதோடு முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பேருந்தில் ஏறவும் உதவி செய்வார்கள். பேருந்தில் குளிர்சாதன வசதி சரியாக இருக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிப்பார்கள். சாப்பாடு கொடுக்க மாட்டார்கள். எலக்ட்ரிக் சிவ்னெரி பேருந்துகளில் நடத்துனர்கள் இருக்கமாட்டார்கள்.
பேருந்து புறப்படும் இடத்தில் டிக்கெட் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் பேருந்து புறப்படும் முன்பு டிக்கெட் கொடுத்து பயணிகளை ஏற்றிவிடுவார்கள். பேருந்து இடையில் வேறு பயணிகளை ஏற்றிக்கொள்ளாது. பயணிகள் இறங்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மகாராஷ்டிரா முழுவதும் 343 பேருந்து நிலையங்களில் ஆரம்ப சுகாதார மையம் தொடங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. பெண் சுய உதவிக்குழுக்கள் பேருந்து நிலையத்தில் தங்களது பொருட்களை விற்பனை செய்ய கடை ஒதுக்கவும், 100 டீசல் பேருந்துகளை எலக்ட்ரிக் பேரூந்துகளாக மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


