Doctor Vikatan: எல்லா டெஸ்ட்டும் நார்மல்.. ஆனாலும் கருத்தரிக்கவில்லை... என்ன காரணம்?
Doctor Vikatan: குழந்தையின்மைக்காக எல்லா டெஸ்ட்டுகளையும் எடுத்துவிட்டோம். ஐந்து மருத்துவகளிடம் காட்டிவிட்டோம். எல்லா டாக்டர்களும் இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்றே சொல்கிறார்கள். இருவரிடமும் பிரச்னை இல்லாதபோதும் கருத்தரிக்காமல் இருக்க என்ன காரணம்... இதை எப்படிப் புரிந்துகொள்வது.... இதற்குத் தீர்வுதான் என்ன?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
உங்கள் கேள்வியில் உங்கள் வயது மற்றும் எத்தனை வருடங்களாக குழந்தைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்ற விவரங்கள் இல்லை. வழக்கமாக திருமணமான ஒரு வருடம்வரை குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வார்கள்... முயற்சி என்பது என்னவென்றால், ஒருநாள் விட்டு ஒருநாள் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது... ஒரு வருடம் இப்படி இருந்தும் கருத்தரிக்கவில்லை என்றால், அதையடுத்து மருத்துவர் எல்லா டெஸ்ட்டுகளையும் எடுக்கச் சொல்வார். எல்லா டெஸ்ட்டுகளும் என்றால் என்ன என்ற கேள்வி வரலாம்.
கர்ப்பப்பையில் கட்டிகள் இருக்கின்றனவா என்பதையும், எண்டோமெட்ரியல் லைனிங் நார்மலாக இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள ஒரு ஸ்கேன் செய்யப்பட வேண்டும். அடுத்து உங்களுக்கு ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு சரியாக நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். சினைக்குழாய்களில் அடைப்பின்றி நார்மலாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். கருமுட்டைகளின் எண்ணிக்கையும் (ovarian reserve), ஹார்மோன் அளவுகளும் நார்மலா என்றும் பார்க்க வேண்டும்.

கணவருக்கு விந்தணுப் பரிசோதனை செய்து அதன் எண்ணிக்கை மட்டுமன்றி, அதன் நகரும் வேகம், வடிவம் போன்றவற்றையும் பார்க்க வேண்டும். இப்படி எல்லா விஷயங்களையும் பின்பற்றி, டெஸ்ட் ரிசல்ட்டும் நார்மல் என வந்த பிறகும் கருத்தரிக்கவில்லை என்றால் அதை அன்எக்ஸ்ப்ளெயிண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி (unexplained infertility) என்று சொல்வோம். இதுவே பெண்ணுக்கு 35 வயது தாண்டிய பிறகு 6 மாதங்கள் கருத்தரிக்க முயற்சி செய்த பிறகே இப்படி நடந்தால் அதை அன்எக்ஸ்ப்ளெயிண்டு இன்ஃபெர்ட்டிலிட்டி என்று சொல்வோம். அன்எக்ஸ்ப்ளெயிண்டு என்று சொன்னாலும் அதற்கொரு காரணம் இருக்கலாம்... அப்போதைக்கு அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றுதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆய்வுகளின்படி 10 முதல் 30 சதவிகித தம்பதியருக்கு இந்த வகை பிரச்னை இருப்பதாகத் தெரிகிறது. காரணம் தெரியவில்லை என்பதற்காக இவர்களுக்கு எந்தச் சிகிக்சையும் செய்ய முடியாது என அர்த்தமில்லை. இவர்களுக்கு ஐயூஐ, ஐவிஎஃப், இக்ஸி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது கருத்தரிக்கச் செய்யலாம். இதையெல்லாம் தாண்டி, உயிரணுக்களுக்கான பிரத்யேக டெஸ்ட், லேப்ராஸ்கோப்பி போன்றவை பரிந்துரைக்கப்படலாம். தைராய்டு, சீலியாக் டிசீஸ், நீரிழிவு, எண்டோமெட்ரியாசிஸ் போன்றவை இருக்கும்பட்சத்திலும் கருத்தரிக்கும் வாய்ப்புகள் தள்ளிப்போகலாம் என்பதால் அவற்றுக்கான பிரத்யேகப் பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படும்.
கருமுட்டைகளின் தரம் குறைவாக இருந்தாலும் குழந்தையின்மை பிரச்னை வரலாம். கரு பதிந்து வளர வேண்டிய எண்டோமெட்ரியம் லைனிங் சரியாக இல்லாவிட்டாலும் இந்தப் பிரச்னை வரலாம். சரியான முறையில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளாததும் காரணமாகலாம்.

நீங்கள் இன்னொரு மகப்பேறு மருத்துவரிடம் ஒரு ஒப்பீனியன் கேட்கலாம். ஏற்கெனவே பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த மருத்துவர்கள் மேற்குறிப்பிட்ட அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து பார்த்தார்களா என்று கேளுங்கள். மாதந்தோறும் கருமுட்டை வெளியேறுகிறதா என்பதற்கான டெஸ்ட்டும் அவசியம். இவற்றையெல்லாம் தாண்டி வாழ்வியல் மாற்றங்களும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையலாம். உதாரணத்துக்கு புகை, குடிப்பழக்கம் உள்ளவர்கள், போதை மருந்து உபயோகிப்பவர்கள் அவற்றை நிறுத்த வேண்டும். எடை அதிகமாக உள்ளவர்கள் அதைக் குறைக்க வேண்டும்.
பேலன்ஸ்டு டயட் எடுக்க வேண்டும். காபி, டீ அளவு குறைக்கப்பட வேண்டும். போதுமான அளவு தூக்கம் அவசியம். ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை அவசியம். அண்டவிடுப்பு நடக்கும் நாள்களை டிராக் செய்து அதற்கேற்ப தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம். இவற்றையெல்லாம் பின்பற்றினாலே சிலருக்கு சிகிச்சைகள் தேவையின்றி கருத்தரிக்கும் வாய்ப்பு உருவாகலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


