Samantha: ``தயவுசெய்து என் பயணத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் - அமைச்சருக்கு நடிகை சமந்தா பதில்!
நடிகர் சிம்பு - திரிஷா காம்போவில், இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றப் படம் விண்ணத் தாண்டி வருவாயா. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில், 2010-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் நடிகை சமந்தா. தமிழில் நான் ஈ மூலம், தமிழ்நாட்டின் மூலை மூடுக்கெல்லாம் சேர்ந்தார். தொடர்ந்து நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, வெற்றி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகை சமந்தா.
இதற்கிடையில், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் செய்த சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். அவர்களின் அறிவிப்பு திரையுலகில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து இருவரும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தனர். இதற்கிடையில், நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலுக்கும் கடந்த ஆகஸ்ட் 8, அன்று நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில்தான் தெலங்கானாவின் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா அளித்த ஒரு பேட்டியில், ``சமாந்தாவை தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் விரும்பினார். அதற்கு சமந்தா இணங்க மறுத்ததால், நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் ஏற்பட்ட சிக்கலால் பிரிந்தார்கள்" என வெளிப்படையாக பேசினார். இந்த செய்தி தெலுங்கு திரையுலகில் தீயாக பரவி வைரலானது. அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் நடைகை சமந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ``ஒரு பெண்ணாக, பல இடர்களிலிலிருந்து வெளியேறி வந்து வேலை செய்யவும், பல நேரங்களில் பெண்ணை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கும் துறையில் சர்வைவ் செய்யவும், காதலில் விழுந்து, பின் அதிலிருந்து மீண்டு வரவும், ஒவ்வொரு முறை விழும்போதும் எழுந்து நின்று சண்டைபோடவும், அளவு கடந்த தைரியமும் நம்பிக்கையும் ஒருவருக்கு வேண்டும். ஆகவே கொண்டா சுரேகா அவர்களே... என்னுடைய இந்த பயணம் என்னை எப்படி மாற்றியுள்ளது என்பதில் நான் எப்போதும் மிகவும் பெருமை கொள்வேன். தயவுசெய்து என்னுடைய பயணத்தை நீங்கள் சிறுமைப்படுத்தாதீர்கள்.
ஒரு அமைச்சராக உள்ள உங்களின் வார்த்தை எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். தனிநபர்களின் தனியுரிமையை மதித்து, பொறுப்புடனும் மரியாதையுடனும் இருக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன். எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி பேசுவதை தவிர்க்குமாறு ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில் நான் ஒரு விஷயத்தை வைத்திருப்பதால் யார் வேண்டுமானாலும் அதற்கான விளக்கத்தை தாராளம் என்பது அர்த்தமாகாது. நான் தெளிவுப்படுத்த நினைக்கும் இன்னொரு விஷயம், எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது. அதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து எனது பெயரை அரசியல் சண்டைகளில் இருந்து விலக்கி வையுங்கள். நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள், இனியும் அப்படி இருக்கவே விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


