Wayanad: உணவு தேடிவந்த யானை; நொடியில் நிகழ்ந்த விபரீதம்; துடிதுடித்து சுருண்டு விழுந்து இறப்பு!
ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழ்விடங்களில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். தமிழகத்தின் நீலகிரி, கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதிகளில்தான் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் காணப்படுகின்றன. அதேவேளையில், வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் மனித செயல்பாடுகளால் யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் துண்டாடப்பட்டு கிடக்கிறது. உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக இடம்பெயரும் யானைகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த முச்சந்திப்பு பகுதிகளில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள புல்பள்ளி பகுதியில் தனியார் தோட்டத்தில் உணவு தேடி வந்த ஆண் யானை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யானை இறப்பு குறித்து தெரிவித்த வனத்துறையினர், "சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உணவு தேடி வந்துள்ளது. தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தை சாய்க்க முயன்றபோது அருகில் சென்ற மின்கம்பியில் மரம் உரசியுள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் யானை அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தோட்ட உரிமையாளர் ராஜேஷிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மின் வாரியத்திடமும் விளக்கம் கேட்டுள்ளோம்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


