சென்னை: சாமி கும்பிடுவதைப் போல நடித்து மூதாட்டியிடம் செயின் பறித்த கும்பல்! - சிக்கவைத்த சிசிடிவி
சென்னை அடையாறு இந்திரா நகர் 4-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சரோஜா. (88). கடந்த 20-ம் தேதி, சரோஜா அணிந்திருந்த 12 சவரன் தங்க நகைகள் திடீரென திருட்டுப்போனது. அதனால் அதிர்ச்சியடைந்த சரோஜா, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சரோஜாவிடம் விசாரித்தனர். விசாரணையில் சரோஜா, தன்னுடைய வீட்டில் சாய்பாபா சிலை வைத்து சாமி கும்பிட்டு வருவது தெரியவந்தது. அதனால் சாய்பாபாவை கும்பிட அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் சரோஜாவின் வீட்டுக்கு வருவதுண்டு. அதனால் தங்க நகைகள் திருட்டுப் போனதும் போலீஸாரின் சந்தேகப் பார்வை, சாமி கும்பிட வந்தவர்களின் மீதும் விழுந்தது.
இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்யத் தொடங்கினர். அப்போது பெண் ஒருவர் சரோஜாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டு பின்னர் பைக்கில் ஆண் ஒருவருடன் செல்லும் காட்சி போலீஸாரின் கண்ணில் பட்டது. அந்த பைக்கின் பதிவு நம்பரை போலீஸார் ஆய்வு செய்தபோது அது போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பைக் செல்லும் வழியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை அடுத்தடுத்து போலீஸார் செய்தனர். இப்படி 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி-க்களை ஆய்வு செய்தபிறகு தங்க நகைகளைத் திருடிய கும்பலை போலீஸார் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து திருவான்மியூர் போலீஸார் கூறுகையில், ``மூதாட்டி சரோஜா வீட்டில் தங்க நகைகளைத் திருடியது அவரின் வீட்டில் வேலை செய்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ராஜாமணி என்பது தெரிந்தது. இவர், சரோஜா வீட்டில் வேலை செய்தபோது மூதாட்டி அதிகளவில் தங்கச் செயின்களை கழுத்தில் அணிந்திருந்ததை கவனித்திருக்கிறார். மேலும் மூதாட்டி தனியாகவும் வசித்து வந்திருக்கிறார். அதையெல்லாம் நோட்டமிட்ட ராஜாமணி, மூதாட்டி சரோஜாவிடம் தங்க நகைகளைத் திருட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக ராஜாமணி, தனக்குத் தெரிந்த செங்கல்பட்டு மாவட்டம், ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த மனோகரிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து இருவரும் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார், அவரின் மனைவி புவனேஸ்வரி ஆகியோரிடம் இந்தத் திட்டத்தைக் கூறியிருக்கிறார்கள். அதற்கு அவர்களும் சம்மதிக்க, நான்கு பேரும் சேர்ந்து சரோஜா வீட்டில் தங்க நகைகளைத் திருடியிருக்கிறார்கள். வீட்டில் தனியாக இருந்த சரோஜாவின் முகத்தில் இந்தக் கும்பல் மயக்க ஸ்பிரே அடித்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறது. திருடிய நகைகளை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தை நான்கு பேரும் பங்கு பிரித்திருக்கிறார்கள். இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்திருக்கிறோம்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


