கடல் ரயில் கதைகள்: கால்வாய் தோற்றமும், பாலத்தில் தீராத அதிர்வும் | பாம்பன் மினித்தொடர் 3
நாட்டின் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவினை இணைக்க உருவாக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலம், 110 ஆண்டுகளாக விபத்துகள் இன்றி மக்களை பயணிக்க செய்திருக்கிறது. பெருமைமிக்க இந்த பாலம் கடந்த வந்த பாதையை சொல்கிறது இந்த மினித்தொடர்.!
தொடரின் முந்தைய பாகத்தை படிக்க...
பாம்பன் கால்வாய் தோற்றம்..
கடந்த பாகத்தில் தன் மகள்களின் கணவர் என்றும் பாராமல் சிவத்துரோகத்திற்காக மருமகனான தண்டதேவருக்கு மன்னர் முத்து விஜயரகுநாத சேதுபதி மரண தண்டனை கொடுத்ததை பார்த்தோம். அத்தகைய சம்பவம் நிகழ காரணமான பாம்பன் கால்வாய் எப்படி உருவானது தெரியுமா?
கி.பி. 1480-ல் இப்பகுதியில் ஏற்பட்ட புயல்தான் அதற்கு பிரதான காரணமாக அமைந்தது. இந்த புயலினால் மண்டபத்திற்கும் பாம்பனுக்கும் இடைப்பட்ட குறுகலான பகுதி கடலில் மூழ்கியதுடன் மணற்பரப்பும் மறைந்து பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்டவை தீவுப்பகுதியாக மாறிப்போனது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட புயல்களால் இன்றைய அளவு கொண்ட கடல் பகுதியாக மாறிவிட்டது. இந்த காலகட்டத்தில்தான் தற்போதைய பாம்பன், கீழக்கரை, மாரியூர் ஆகிய ஊர்களுக்கு எதிரே 12 குட்டி தீவுகளும் உருவாகியிருக்க கூடும் என கூறப்படுகிறது.

18-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சேது சீமையில் எழுந்த புரட்சிகளுக்கு பிரெஞ்சு உள்ளிட்ட அந்நிய தேசங்களின் ஆயுத உதவி கிடைப்பதை தடைசெய்ய இந்த பகுதியினை ஆங்கிலேயர்கள் உன்னிப்பாக கண்காணித்தனர். பாண்டிய நாட்டின் ஆதிக்க உரிமையை ஆற்காட்டு நவாப்பிடம் இருந்து பெற்ற ஆங்கிலேயர்கள், 1822-ம் ஆண்டில் பாம்பன் பகுதியில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் படி ஆழம் குறைவான கால்வாய் பகுதியில் இருந்த பாறைகளை வெடிவைத்து தகர்த்தனர். அதனை தொடர்ந்து 1837-ல் இக்கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது வரையப்பட்ட வரைபடங்களின் படி அடுத்த ஆண்டிலேயே கால்வாய் பகுதியை ஆழமாகவும் அகலமாகவும் தோண்டும் பணி துவங்கினர்.
சுமார் 3 ஆண்டுகளில், கால்வாய் எட்டு அடி ஆழமாக மாற்றப்பட்டது. இதன் பின் 1854-ல் பத்தரை அடி அளவில் ஆழப்படுத்தப்பட்டதுடன் அந்த கால்வாய் வழியாக சுமார் 200 டன் எடை கொண்ட தோணி எனப்படும் பாய்மர படகுகள் இயக்கப்பட்டன. ஆன போதும் கால்வாய் பகுதியில் இருந்த கழி எனப்படும் நீர் மணல் காரணமாக நீராவி கப்பல்களை செலுத்த முடியவில்லை. இதனால் 9232 அடி நீளம் மற்றும் 80 அடி அகலத்தில் சுமார் 14 அடி ஆழப்படுத்தப்பட்டது.
இதனிடையே 1858-ம் ஆண்டு இறுதியில் தமிழகத்தின் தென்கோடி பகுதிகளில் கொடும் பஞ்சம் நிலவியது. அந்த கொடும் பஞ்சத்தில் சிக்கிய சுமார் ஒரு லட்சம் பேர் உயிர் பிழைக்க வேண்டி இலங்கைக்கு கூலி வேலைக்காக சென்றனர். அவர்களை ஏற்றி சென்ற படகுகளும், தோணிகளும் பாம்பன் இந்த கால்வாய் வழியாகத்தான் இலங்கைக்கு பயணித்தது. இதன் பின்னரே 18-ம் நூற்றண்டின் இறுதியில் பாம்பன் கால்வாயினை கடக்க ரயில் பாலம் அமைப்பதற்கான ஆய்வுகளை துவக்கினர்.

2018-ம் ஆண்டு உருவான கஜா புயலினால், ராமேஸ்வரம் தீவிற்கோ பாம்பன் பாலத்திற்கோ பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதே வேளையில் பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள படகுகளைப் தென் பகுதியில் உள்ள குந்துகால் கடற்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் இந்த தூக்கு பாலம் திறக்கப்பட்டது. அப்போது, தூக்கு பாலத்தைத் திறக்க உதவும் இரும்பு வடம் பழுதுபட்டு, உடனடியாக சரி செய்யப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்து தொடர்ந்து நடந்துவந்தது.
இந்நிலையில், தூக்கு பாலத்தின் இரு பகுதிகளும் இணையும் இடத்தில் திடீர் என இடைவெளி ஏற்பட்டது. இதைக் கண்டறிந்த ரயில்வே ஊழியர்கள், இந்த இடைவெளியைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு ஏதுவாக, வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மாலை நேரத்தில் வரும் ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டன. பழுதுநீக்கும் பணிகள் நிறைவடைந்த பின், ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் ரயில்கள், பயணிகள் இன்றி மண்டபம் வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இரவு வரை பழுதுபார்க்கும் பணி முழுமையாக முடியவில்லை. இதையடுத்து, இரு ரயில்களும் முற்றிலும் ரத்துசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தென்னக ரயில்வேயின் பாலங்கள் பிரிவு பொறியாளர்கள் பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் பாலத்தில் ரயில்கள் செல்லும்போது அதிர்வு ஏற்படாமல் இருக்க ஷெர்ஷர் பாலத்தின் மேற்பகுதிகளில் இரும்புத் தகடுகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னரும் பாலத்தில் ஏற்பட்ட அதிர்வு குறையவில்லை. இதனால் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. விரைவு ரயில்களான ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விரைவு ரயில்கள் அனைத்தும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டது.

இந்த நிலையில், பாம்பன் பாலத்தின் வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதன் ஒரு பகுதியாக பாலத்தின் மேல் பகுதியில் சுமார் 6.5 டன் எடை கொண்ட இரும்புச் சட்டங்கள் இணைக்கப்பட்டன. இதையடுத்து மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து பாம்பன் பாலத்தில் 21 பெட்டிகள் கொண்ட பயணிகள் இல்லா ரயில் 10 கி.மீ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது குறித்தும் அடுத்தக்கட்ட ஆய்வுகள் குறித்தும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்..!
பாம்பன் பயணம் தொடரும்...
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


