Mudumalai : அழிவின் விளிம்பில் உள்ள நடன தவளை முதல் அரியவகை ஆற்றுநீர் முதலைகள் வரை - சுவாரஸ்ய update!
வன வளம் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகம், பல்வேறு அரியவகை உயிரினங்களின் மிக முக்கிய வாழ்விடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. புலிகள், யானைகள் மட்டுமன்றி வரிக்கழுதைப்புலிகள், பிணந்தின்னி கழுகுகள் போன்ற அரியவகை உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக முதுமலை காடு விளங்குகிறது. நீலகிரி பல்லுயிர் பெருக்க மண்டலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஆய்வாளர்களால் அறியப்படும் முதுமலையில், புலிகள் முதல் வண்ணத்துப்பூச்சி வரை ஒவ்வொரு உயிரினத்திற்கும் முக்கியத்துவம் அளித்து கணக்கெடுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த கணக்கெடுப்புகள் மூலம் குறிப்பிட்ட வகை உயிரினங்களின் எண்ணிக்கை மட்டுமன்றி அவற்றின் தற்போதைய தகவமைப்பு, அச்சுறுத்தல், உணவு முறை போன்ற பல்வேறு தகவல்களையும் கண்டறிய முடிகிறது.
இதன் தொடர்ச்சியாக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இரு வாழ்வுகள் எனப்படும் நீர், நில வாழ்வுகள் மற்றும் ஊர்வனங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. ஊர்வனம் குறித்த ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து 3 நாட்கள் மேற்கொண்ட இந்த கணக்கெடுப்பில் 36 வகையான இரு வாழ்வுகள் மற்றும் 33 வகையான ஊர்வனவற்றை முதல் முறையாக பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த கணக்கெடுப்பின்படி முதுமலையில் மொத்தம் 55 வகையான ஊர்வன மற்றும் 39 வகையான இரு வாழ்வுகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த கணக்கெடுப்பு குறித்து தெரிவித்த முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், "கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் உள்ள கல்லம்பாளையம் முதல் 2000 மீட்டர் உயரம் வரை உள்ள சோலூர் வரையிலான பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பதிவு செய்யப்பட்ட உயிரினங்களில் 21 இனங்கள் அழியும் பட்டியலில் உள்ளவை. மேலும், அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள கேவ் டான்சிங் ஃபிராக் எனப்படும் நடன தவளை, இன்டர்நெய்ல் நைட் ஃபிராக் போன்ற இரு வாழ்வு தவளைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர அழியும் நிலையில் உள்ள எண்டெமிக் ஸ்டார் ஐட் புஷ் ஃபிராக், நீலகிரி எண்டமிக் குன்னூர் புஷ் பிராக், நீலகிரி புஷ் ஃபிராக் , நீலகிரிஸ் வார்ட் ஃபிராக் ஆகியவை கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இதுதவிர ஊர்வன வகைகளான எண்டமிக் ஸ்டிரைப்டு கோரல் ஸ்நேக், கிங்கோப்ரா, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மலபார் பிட் வைப்பர், தி கலமரியா ரீட் ஸ்நேக், எண்டமிக் பரோவிங் ஸ்நேக், பெரோடெட் மலைப்பாம்பு, நீலகிரி டிவார்ப் கெக்கோ, கிரேஸ்புல்டே கெக்கோ உள்ளிட்டவைகளும் பதிவு செய்யப்பட்டது.













இந்த கணக்கெடுப்பில் அதிக எண்ணிக்கையிலான ஆற்றுநீர் முதலைகளையும் பார்த்து பதிவு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பின் மூலம், அவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க பெரும் உதவியாக இருக்கும்" என தெரிவித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


